articles

img

பாட்டாளி வர்க்கத்தின் ராணுவம் செந்தொண்டர் படை -கே.சாமுவேல்ராஜ்

செம்படை அல்லது செந்தொண்டர் அணி என்பது உடையால் அடையாளப்படுத்தப் படுவதில்லை. இலட்சியத்தை உள்ளத்தில் தரித்திருப்பது.

“உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்.”

எண்ணுவதற்கே உவப்பான இந்த வரிகள் நடைமுறைக்கு வந்து சேர வேண்டும் என்பதே செம்படையின் லட்சியம். எனவே செம்படை - செந்தொண்டர் அணி - என்பது வழக்கமான ஒரு படை அல்ல.

முதலாளித்துவ அரசுகளின் இராணுவமும் காவல் படைகளும் மூலதனத்தைப் பாதுகாத்திட உருவாக்கப்பட்டவையே. அதன் வீரர்கள் முதலாளிகளுக்கு உரியவர்களே. மூலதனத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்துவது தான் அதன் மெய்யான பணி. எனவே தான் அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவி என்கிறார் மாமேதை மார்க்ஸ்.

இதற்கு ஒரு உதாரணத்தை உலகம் முழுவதும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. மூலதனத்திற்கு பாதிப்பு வரும் என்றால் முதலாளித்துவ அரசுகளின் காவல் படைகள் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கு அது பறித்த மனித உயிர்களே சாட்சி.ஒரு ஸ்டெர்லைட்  நிறுவனத்திற்காக 13 பேர் நடுவீதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மாஞ்சோலை தோட்ட முதலாளிகளுக்காக 17 மனித உயிர்கள் நதிநீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டன.

மக்கள் உரிமைக்குரல் உயர்த்துகிற  போதெல்லாம் கொடூரமான ஒடுக்கு முறையை ஏவி விடுகிற இந்த படைகளின் பாதுகாப்பு  வளையத்திற்குள் தான் பொருளாதார தளத்தில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய தேசம், தனிநபர் சராசரி வருமானம் என்கிற பட்டியலில் உலகில் 142 வது இடத்திலும், ஐ.நா.வின் தனிநபர் மனித வளப் பட்டியலில் 132 வது இடத்திலும் மகிழ்ச்சி குறியீட்டுப் பட்டியலில் 136 வது இடத்திலும் பின்தங்கி  இருக்கிறது. உலகில் இருக்கிற எடை குறைந்த, உயரம் குறைந்த, சத்துணவு கிடைக்காத, போசாக்கற்ற குழந்தைகளில் மூன்றில் ஒருவர் இந்நாட்டில் தான் இருக்கிறார்கள்.

மறுபுறத்தில் செல்வம் மலை போல் குவிகிறது. முகேஷ் அம்பானி,கௌதம் அதானி, ஜிண்டால், சிவ் நாடார், திலிப் ஷங்வி, குமார் பிர்லா, ராதா கிஷன் தமானி, சைரஸ் பூனவல்லா, குஷால் பால்சிங், ரவி ஜெய்பிரியா ஆகியோர்தான் இந்திய  முதலாளிகளில் முதல் 10 இடத்தில் இருப்பவர்கள். இந்த 10 நபர்களின் சொத்து மதிப்பு 405 பில்லியன் டாலர் அதாவது 34 லட்சம் கோடி ரூபாய்.

2024-2025 நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.2,05,250 கோடி உணவு மானியத்திற்காக ஒதுக்கியது.144 கோடி நபர்களின் உணவிற்காக ஒதுக்கப்பட்ட தொகையைப் போல் 17 மடங்கு தொகையை இந்த 10 பெரும் பணக்காரர்கள் வைத்துள்ளனர்.

அதே போல் 144 கோடிப் பேரின் சுகாதாரத்திற்  காக ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ. 90,958  கோடியைப் போல் 38 மடங்கு கூடுதல் சொத்துக் களை மேற்கண்ட 10 பெரும் பணக்காரர்கள் குவித்து வைத்துள்ளார்கள்.

இந்த மிகப்பெரும் சுரண்டலை நிலை நிறுத்தி வைப்பதற்காக,போராடுகிற மக்கள் மீது சட்டம் - ஒழுங்கு என்கிற பெயரால் வழக்குகள் புனைவதும், தேச துரோகிகள் என சிறைப்படுத்து வதும் இந்த காவல் படைகளின் பிரதானமான பணிகளாக இருக்கிறது. கேள்வி கேட்பதற்கும் ஏன் சிந்திப்பதற்கும் கூட இப்படையினருக்கு உரிமை கள் இல்லை. கட்டளைக்கு கீழ்படிகிற விதமாகவே இப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே தான் முதலாளித்துவ அரசுகளின் பலம் பொருந்திய ராணுவத்திற்குக் கூட அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அரசியலில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இதற்கு நேர் மாறானது செம்படை.

ஆம், சோவியத் ரஷ்யாவில் உலகின் முதல் செம்படை உருவாக்கப்பட்ட பின்னணியில் “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு அறி வித்தது: “தொழிலாளர்கள் மற்றும் விவசாயி களின் உதவியுடன் உலகின் முதல் செம்படையை உருவாக்கியதில் கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதம் கொள்கிறது. இது மாபெரும் போர்களில் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுதந்திரத்திற் காக போராடிய படை. இது தொழிலாளர் மற்றும் வேளாண் மக்களின் படையாகும். உண்மையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் படை”.

முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் இரக்கமற்ற சுரண்டல் கொடுமையிலிருந்து தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளை எத்தகைய தியாகமும் செய்து விடுவித்திட செம்படை தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அதிகாரத்தை மேம்படுத்தி, அனைத்து மக்களுக்கும் மாண்புடன் கூடிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் படையே செம்படை.

உள்நாட்டின் மக்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் நேசிப்பது, நாடுகளை மதிப்பது, நாடுகளுக்கிடையே அமைதியை நிலை நாட்டுவது என்பதாக செம்படையின் எல்லைகள் வானம் வரை விரிகிறது.

தேசியம் என்கிற பெயரால் அருகமை நாடு களை பகையாளிகளாக பாவிப்பது முதலாளித்து வப் படைகளின் தன்மை. அருகமை நாடுகளை மட்டுமல்ல, தொலை தூரத்தில் இருக்கிற நாடு களின் மீதும் அந்நாடுகளின் உழைப்பாளி கள் மீதும் சர்வதேசியம் என இணைப்புக் கொண்டி ருப்பது தான் செம்படையின் தனித்துவம். அது மட்டுமல்லாது, சாத்தியமான அளவு பல நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட போராடுவதும் செம்படையின் நோக்கமாக இருக்கிறது. செம்படைக்கு அதன் இலக்கும் எதற்காக போராடுகிறோம் என்கிற தன் உணர்வும் இருக்கிறது.

•    மக்களிடமிருந்து ஒரு குண்டூசியைக் கூட எடுத்துக்கொள்ளக்கூடாது,
• எதன் பொருட்டும் மக்களை தாக்கவோ திட்டவோ கூடாது,
• பயிர்களை சேதப்படுத்தக்கூடாது,
• பெண்களின் எந்தவித சுதந்திரத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது,

சுருங்கச் சொன்னால் “உலக தொழிலாளர் களே, ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விடுகிற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் போன்று உலகத் தொழிலாளர்களின் ராணுவ மாக செம்படை உள்ளது.

உழைக்கும் மக்களின் படையாக; மூலதனக் குவியலுக்கு எதிரான படையாக; சாதிய மற்றும் மதவாதிகளுக்கு எதிரான படையாக தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை அணி வகுக்கிறது.
• கைது செய்தவர்களை அவமரியாதையாக நடத்தக்கூடாது - என்பதெல்லாம் செம்படைகள் கடைப்பிடிக்கிற நடைமுறைகளாக இருக்கின்றன.

கே.சாமுவேல்ராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர்,  சிபிஐ(எம்)