புத்தெழுச்சி, போராட்டத் திண்மை, பொன்விழா!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் தனது 50ஆவது ஆண்டி னை இன்று நிறைவு செய்கிறது. அரை நூற்றாண்டு என்பதை ஒரு காலக்கணக்காக கொள்ளாமல் தொடங்கப்பட்ட நாள்தொட்டு இன்றுவரைக்குமாக கலை இலக்கியத்திலும் கருத்துலகத்தி லும் ஆற்றிவரும் மதிப்பார்ந்த பங்களிப்புகளுக்காக தமுஎகச கொண்டாடப்படுகிறது. செம்மலர் இதழில் எழுதிக்கொண்டிருந்த 35 பேர் சேர்ந்து தொடங்கிய இவ்வமைப்பு நாளுக்குநாள் பலமேறி இன்று இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்களைக் கொண்டதாக வளர்ந்திருக்கிறது.
நிறமாலை போல...
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகள் முதல் ஆல்பா தலைமுறையினர் எனப்படும் தற்கால இளை யோர் வரையாக தமுஎகச உறுப்பினர்கள் பற்பல தலை முறையினரைச் சேர்ந்தவர்கள். கலைஞர்கள் எழுத்தா ளர்கள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர் கள், இணைய ஊடகர்கள், திரைத்துறையினர், மனித மாண்புகளைப் போற்றக்கூடிய பண்பாட்டுச்சூழலுக்கான தேவையை உணர்ந்து அதற்காக செயலாற்றுபவர்கள் என பன்முகப்பட்டவர்கள் அமைப்பின் அகமும் முகமுமாக இயங்குகிறார்கள். தமது கலை இலக்கியச் செயல்பாடு களின் வழியே நாட்டின் மதிப்புமிக்க பல விருதுகளைப் பெற்றவர்கள் முதல் தனது முதல் கதையையோ கவிதையையோ இப்போது எழுதியவர் வரையாக இசைந்தாடும் ஒரு நிறமாலையைப் போல தமுஎகச பலதிறத்தாருக்குமானதாக இருக்கிறது.
இடையறா நிகழ்வுகள்.. இலக்கினை எட்டும் பெருவிருப்பு...
தமுஎகசவின் ஐம்பதாண்டுகாலச் செயல்பாடுகளின் உள்ளுறையாக படைப்பு, பண்பாடு, கருத்துரிமை ஆகியவையே இருக்கின்றன. பாரம்பரியக் கலைகள், பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி சமகாலத்தில் முகிழ்த்தெழும் கலைவடிவங்கள் எழுத்திலக்கியங்கள் வரையாக யாவிலும் தமுஎகச அக்கறை கொண்டுள்ளது. இதனிமித்தம் இலக்கியப் பயிலரங்கு, கலை இரவு, பயிற்சிப்பட்டறைகள், நாடக விழா, இசை நிகழ்வு, திரைப்பட விழா, குறும்பட ஆவணப்பட விழா, வாசிப்பு முகாம், கருத்தரங்கம், திரைப்பள்ளி என தமுஎகச நிகழ்வுகள் இல்லாத நாளே இல்லை என்னுமளவுக்கு மாநிலம் முழுக்க தமுஎகச நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்தவண்ண முள்ளன. கலை இலக்கியம் சார்ந்து 17 வகைமைகளின் கீழ் ஆண்டுதோறும் கலைஞர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் விருதுவழங்கிக் கொண்டாடுகிறது தமுஎகச. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தனிக்கவனத்துடன் கலை இலக்கிய பயிற்சிமுகாம்கள் நடத்தப்படுகின்றன. இத்தனை நிகழ்வுகளும் எவருடைய தனிப்பட்ட மூலதனத்திலிருந்தும் நடத்தப்படுவதில்லை, மக்களிட மிருந்து திரட்டும் நிதியைக்கொண்டு மக்களுக்காகவே நடத்தப்படும் வெளிப்படைத்தன்மையினால் ஈர்க்கப்பட்டு தமிழ்ச்சமூகம் தனது வாழ்வாதாரத்திற்காக உழைத்து ஈட்டும் வருவாயில் சிறுதொகையை தமுஎகசவின் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இடையறாத நிகழ்வுகளின் வழியே உள்ளூர்ச் சமூகத்தின் கருத்துலகத்தில் குறுக்கீடு செய்வது, பொதுப்புத்தியைக் கேள்விக்குள்ளாக்குவது, விமர்சனக் கண்ணோட்டத்தை உருவாக்குவது, மாற்றுக்கருத்தை முன்வைப்பது என உள்ளார்ந்த விளைவுகளை உரு வாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வீடுதோறும் உறுப்பினர் வீதிதோறும் கிளை என்ற இலக்கினை எட்டு வதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் கலையுணர்வுக்குள்ளும் கருத்துலகத்திற்குள்ளும் இழைந்துவிட தமுஎகச பெருவிருப்பத்துடன் முயற்சித்துவருகிறது.
கருத்துரிமை காக்கும் முன்னணிப் படை...
அவசர நிலையின் பெயரால் கருத்துரிமை மறுக்கப் பட்ட காலத்தில் அடங்காச்சினத்தோடு உருவான தமுஎகச அடுத்துவந்த காலம் நெடுகிலும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக நடத்திவந்துள்ளப் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒரு கார்ட்டூன் வெளியிட்டதற்காக ஆனந்த விகடன் ஆசிரியர் கைது, சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் திரைப்படங்களைத் தடை செய்யும் சூப்பர் தணிக்கைச் சட்ட முன்வரைவு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி அந்த ஒடுக்குமுறைகளை முறியடித்த அமைப்பு தமுஎகச. ஒன்றிய அரசை கைப்பற்றியுள்ள சங்பரிவாரம் கருத்துரிமைக்கு எதிராக மேற்கொண்டுவரும் எந்தவொரு முயற்சியையும் அம்பலப்படுத்துவதிலும் ஜனநாயகச் சக்திகளை ஒன்றுதிரட்டுவதிலும் தமுஎகச முன்னணிப்படையாகச் செயல்படுகிறது.
மொழி, பண்பாட்டுத் தளத்தில்...
தமிழைச் செம்மொழியாக்க தில்லியில் போராட்டம், தமிழர் பண்பாட்டு மாநாடு, தமிழர் உரிமை மாநாடு, இந்தி/ சமஸ்கிருத ஆதிக்கத்திற்கெதிரான மாநாடு என்று தமிழர் பண்பாடு, தமிழ்மொழி வளர்ச்சி, சிந்துவெளி அகழாய்வின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள், கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் என தமுஎகச விளைதிறன் மிக்க வேலைகளைச் செய்துள்ளது. நாடு கல்வியிலும் சமூக நீதியிலும் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பின்னிழுக்கும் கெடுநோக்கில் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையை அதன் அறிமுக நிலையிலிருந்தே அம்பலப்படுத்திப் போராடிய அமைப்பு தமுஎகச. அந்தக் கொள்கைக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் போராட்டங்கள் அனைத்திற்கும் வித்திட்டது தமுஎகச. இயற்கைப் பேரிடர்களின் போதும் கொரோனா பெருந்தொற்றுக்காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளில் தமுஎகச தோழர்கள் உணர்வுப்பூர்வமாகப் பங்கெடுத்தனர்.
சமத்துவத்துக்கான போரில்...
பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்கிற இயற்கை நீதியை இடைமறித்த மனுநீதி, சனா தனத்தின் பெயரால் பாகுபாட்டையும் அதை நிலை நிறுத்த ஒடுக்குமுறையையும் நிறுவியது. மனுநீதியின் கொடுமைகளைத் தகர்த்து சமநீதிக்குத் திரும்பு வதற்கு முந்தைய இடைக்கால ஏற்பாடாக உருவானது சமூக நீதி. நெடிய போராட்டங்களால் சமூகநீதிப் பாதையில் பெண்களும் தலித்துகளும் பழங்குடிகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் அடைந்துள்ள முன்னேற்றங் களை முடக்குவதற்கு பழமைவாதிகள் முயன்றுவரும் வேளையில் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாடு உலகளாவிய விவாதத்திற்கு வழிவகுத்தது. இந்த விவாதங்கள், சமத்துவத்திற்கான போராட்டத்தில் நாம் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு கருத்தியல் போராட்டத்தை கண்டும் காணாமல் கடந்துவிட முடியாது என்பதை உணர்த்தியது.
வெறுப்பின் கொற்றம் வீழ... அன்பே அறமென எழ...
சமூகத்தில் மேலாதிக்கம் பெறுவதற்கு முயற்சித்துவரும் பார்ப்பனியச் சக்திகள் அதற்காக மதப் பெரும்பான்மைவாதத்தை முன்னிறுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்தும் போக்கு அரசதிகாரத்தின் துணையுடன் வேகமெடுத்துள்ள காலத்தில் அதுகுறித்து எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கவனப்படுத்தும் பொறுப்பினை தமுஎகச மேற்கொண்டுள்ளது. சமூகத்தை நாம் அவர்கள் என்று எதிர்நிலைப்படுத்தி பிரிப்பதற்காக மதச் சிறுபான்மையினரை எதிரிகளாக கட்டமைத்து அவர்களுக்கு எதிரான வெறுப்பு பரப்பப்பட்டு வருவதை தமது ஆக்கங்களின் வழியே தடுப்பதற்காக கலை இலக்கியவாதிகளை ஓரணிப்படுத்துவதே இன்றைய தேவை. அதன்பொருட்டே ஐம்பதாண்டை நிறைவுசெய்யும் தமுஎகச, வெறுப்பின் கொற்றம் வீழ்க! அன்பே அறமென எழுக! என்பதை உடனடிச் செயல்முழக்கமாக முன்வைக்கிறது. அந்த முழக்கத்தை மெய்யாக்கத் தேவையான புத்தெழுச்சியையும் போராட்டத் திண்மையையும் இன்றைய பொன்விழா நிறைவுக் கொண்டாட்டம் வழங்குவதாகுக.