வருண். சீக்கிரம் வா,
லேட்டாகுது பாரு.” “இதோ வந்துட்டேன் நிலா” என்றபடியே பழங்கள், ஸ்வீட்ஸ்,
வசதியான புதிய குஷன் அடங்கிய பையுடன் ஓடி வந்தான் வருண். நிலாவின் கையில் சில புத்தகங்கள்.
“போலாமா? செம அழகா இருக்கேடா!”
கணவனை ரசித்துக் கண்ணடித்தாள் நிலா.
“சரி சரி கிளம்பு.” பட்டு வேட்டி சரசரக்க வருண் பில்லியனில் அமர,
ஜீன்ஸ், வருண் வாங்கித் தந்த புதிய டாப்ஸ் அணிந்திருந்த நிலா பைக்கை எடுத்தாள்.
இருவரும் வருணின் நண்பன் மகேஷைப் பார்க்கப் போனார்கள்.
“மகேஷுக்கு என்ன?” “எல்லாம் நல்ல விஷயம்தான்.”
மகேஷுக்கு நேற்றுதான் வாசக்டமி நடந்திருக்கிறது.
ஒரு குழந்தை போதும் என்கிற முடிவுக்கு வந்தவுடன் வீட்டில் சொல்லி வாசக்டமிக்கு ஏற்பாடு செய்துவிட்டாள் மகேஷின் மனைவி மரியா.
நேற்று நல்லவிதமாக சிகிச்சை முடிய, இன்று அதனைக் கொண்டாடும் ‘வாசக்காப்பு’ நிகழ்வு அவர்கள் வீட்டில்.
மகேஷ் வீட்டு வாசலில் வாழை மரம் கட்டப்பட்டிருந்தது.
வீடு முழுவதும் பட்டு வேட்டியில் ஆண்களும் புதிய உடைகளில் பெண்களும் வலம் வந்துகொண்டிருந்தனர்.
பிரியாணி மணத்தது. வாசக்காப்பு நிகழ்வு காணும் தம்பதியருக்கு வாழ்த்துகள் என்கிற பெரிய ஃப்ளெக்ஸ் பேனரை மரியாவின் தோழிகள் வைத்திருந்தனர்.
வாசக்டமி சிகிச்சை முடிந்த கையோடு, மகேஷை ஆதரவாகத் தோளில் சாய்த்தபடி மரியா இருந்த படம் ஃப்ளெக்ஸ் பேனரில் மின்னியது.
வருண் பெருமூச்சு விட்டான். “எனக்கு இப்டிலாம் யாருமே ஃப்ளெக்ஸ் வைக்கல.” செல்லமாகக் கோபித்தான் வருண்.
அச்சோ செல்லம், அப்போ இது ட்ரெண்ட் இல்லல்லடா, அதான்” என்று அவனது கையை எடுத்துக் கொஞ்சி முத்தமிட்டாள் நிலா.
“வாங்க நிலா, வருண் வாங்க வாங்க!” மரியாவும் மகேஷின் மற்ற உறவினர்களும் ஓடிவந்து வரவேற்றனர்.
“சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கீங்க, நலங்கு வைங்க.”
நிலா பெண்களுடன் வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து அரட்டையடிக்கத் தொடங்கினாள்.
வருண் பையுடன் உள்ளே சென்று பாயில் ஆண்களுடன் அமர்ந்துகொண்டான்.
கூடத்தில் சோபாவில் அமர்ந்து காலை ஸ்டூலின் மீது வசதியாக நீட்டியபடி அமரவைக்கப்பட்டிருந்தான்
மகேஷ். கையில் வாசக்டமி நடந்ததை அறிவிக்கும் வகையில் காப்பு அணிவிக்கப்பட்டிருந்தது.
நண்பனைக் கண்டு பூரிப்புடன் சிரித்தான் மகேஷ். கன்னங்களில் சந்தனம், தலையில் அட்சதை, பட்டுச்சட்டை வேட்டியில் இருந்தான்.
சற்றே களைப்புடன் காணப்பட்டாலும் முகம் மலர்ந்த மகிழ்ச்சியில் இருந்தான்.
ஆண்கள் சூழ்ந்துகொண்டு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்தனர்.
பின்பு பலவித அறிவுரைகளை அன்புடன் வழங்கிக் கொண்டிருந்தனர்.
“இங்க பாரு மகேஷ், ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுக்கணும். வெயிட் தூக்கக் கூடாது. காலை ஸ்டூல் மேலத் தூக்கி வெச்சுக்கணும், சரியா?”
வருண் தான் கொண்டு போயிருந்த குஷனை மகேஷின் முதுகுக்குப் பின்னால் வைத்தான். மகேஷ் அன்புடன் நண்பனின் கையைப் பிடித்துக்கொண்டான்.
“வலிக்குதா? ஐஸ் பேக் எடுத்துட்டு வரவா?” என்று கத்திக் கேட்ட குறும்புக்காரச் சித்தி மகனை முறைத்தான் மகேஷ்.
இதுல என்ன இருக்கு? ஆணாகப் பொறந்தா இதை எல்லாம் சுகமா பழகிக்கணும். ப்ரொசீஜர் நடந்த இடத்தில ஐஸ் கண்டிப்பா வெக்கணும். மறந்துடாதே.”
“சரி, சரி, அப்புறம் வெச்சிக்கிறேன். ஃபங்ஷன் முடியட்டும்.”
மகேஷின் அப்பா டாக்டர் கொடுத்த மருந்துகளையும் தம்ளரில் தண்ணீரும் எடுத்து வந்தார்.
“சரி, எல்லாரும் நலங்கு வெச்சாச்சுல்ல, சாப்பிடப் போங்க. மகேஷ் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.”
வருண் கைத்தாங்கலாக நண்பனை அழைத்துச் சென்று அறையில் படுக்க வைத்தான். “டாக்டர் ரெண்டு, மூணு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். எப்போ நார்மலாகும்?”
“ஒவ்வொருத்தர் உடலைப் பொறுத்து மகேஷ். ரெண்டு நாள்லயே நார்மலாகி நடந்தவங்களும் உண்டு. ஒரு வாரம்ங்கிறது அதிகப்படிதான். நல்லா ரெஸ்ட் எடேன், என்ன இப்போ?”
“ஹேய்! ரெஸ்டையா கேக்குறேன்?” கண்ணடித்துச் சிரித்தான் மகேஷ். “48 மணி நேரத்துக்கு அப்புறமே ஐயா ஜமாய்க்கலாம். ஆனா, ஒண்ணு ஞாபகம் வெச்சிக்கணும்.
15 அல்லது 20 தடவை வரைக்கும், அதாவது சுமார் இரண்டு மாசம் வரைக்கும் விந்தணு வெளியேறிட்டுதான் இருக்கும்.
அதுனால அது வரைக்கும் வேறு பாதுகாப்புக் கருவி கட்டாயம் பயன்படுத்தணும். ரெண்டு மூணு மாசத்துக்கு அப்புறம்தான் வாசக்டமி பண்ணதோட பயனை அனுபவிக்க முடியும்.” அப்புறம்..?” “புரியுது நீ என்ன கேட்கப் போறன்னு. வலியோ கிருமித் தொற்றோ இருக்கக் கூடாதுன்னா, சுயமைதுனம்கூட ஒருவாரம் பண்ணாம இருக்குறது நல்லது. ஒரு வாரம் அடக்க ஒடுக்கமாதான் இரேன்.” “சரி, ஏன் எல்லாரும் இது பெண்கள் கருத்தடையவிட நல்லதுனு சொல்றாங்க?” “ஏன்னா அதுதான் 100% உண்மை. இப்ப உனக்கு லோக்கல் அனஸ்தீஷியாதான் குடுத்தாங்க. ரெண்டு நாள்ல இயல்பாகிடுவே. ஆனா,
பெண்கள் கருத்தடை ரொம்ப சிக்கல். அதுக்கு ஜெனரல் அனஸ்தீஷியா கொடுக்கணும். குணமாகவும் ரொம்ப லேட்டாகும். முன்னாடி காலத்துல அறிவில்லாம அப்படிலாம் பண்ணி இருக்காங்க. இடியட்ஸ்.” “சரி, நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னா ரிவர்ஸ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொன்னார். நிஜமாவா?”
“கண்டிப்பா. ஈசியா ரிவர்ஸ் பண்ணக் கூடிய சர்ஜரிதான் இது.” “ம்… டாக்டரும் இதைத்தான் சொன்னார். இருந்தாலும் நீ சொல்லும்போது நல்லா மனசுல பதியுது. தாங்க்ஸ் வருண்!” “சே, தாங்க்ஸ்லாம் எதுக்கு? ஆணுக்கு ஆண் இந்த உதவியெல்லாம் செய்ய வேண்டியது நம்ம கடமை. பெண்கள் நமக்கு எவ்ளோ அரிய பொக்கிஷத்தைப் பரிசா தராங்க.
அவங்களுக்குத் திருப்பிச் செய்யக் கூடிய ஒரு சின்ன உதவி இந்த வாசக்டமி. அதைக் கொண்டாடறது எவ்ளோ பெருமையான விஷயம் தெரியுமா!”
“அதெல்லாம் சரி. இதுனால நிஜமா எனக்கு வேற எந்தப் பிரச்னையும் வந்துடாதுல்ல?” வாய் விட்டுச் சிரித்த வருண், “என்னடா சிவாஜி படத்துல ஹனீஃபா ப்ரெய்னுக்கு டேமேஜ் வராதுல்லன்னு கேட்குற மாதிரி கேட்குற? விந்தணு வர குழாயைத்தான் கட்டி இருக்காங்க. உன்னோட செக்ஸ் ஆர்வத்துலயோ செயல்பாட்டுலயோ ஒரு வித்தியாசமும் இருக்காது. நானே சாட்சி.” வருண் சிரித்த வசீகரச் சிரிப்பில் மகேஷுக்குத் தனது கேள்வியின் முட்டாள்தனம் புரிந்தது.
“உண்மைதான் வருண்! நீதான் எனக்கு ரோல் மாடல். ரொம்பப் பயந்திருந்தேன்.” “சீ, பயப்படத் தேவையே இல்ல. மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கிற எந்த கெத்தான ஆணும் வாசக்டமி செஞ்சுக்கப் பயப்பட மாட்டான்.” மகேஷ் வருணின் கையைப் பிடித்து நெகிழ்ந்தான். உள்ளே வந்த மரியா மகேஷை மென்மையாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
பின்னாடியே வந்த நிலா வருணைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளது முகத்தில் பெருமிதம் பொங்கிவழிந்தது. பி.கு.: ஆண்கள் நலன் மட்டுமல்ல குடும்ப நலன் வாசக்டமியில் அடங்கி இருக்கிறது. தாய்மையையும் குழந்தைப் பேறையும் கொண்டாடும் சமூகத்தில், ஆண்மைக் குறைவுக்கும் குழந்தையின்மைக்கும் தடுக்கி விழுந்தால் க்ளினிக்குகள் இருக்கும் நாட்டில், வாடகைத் தாய் முறையை நார்மலைஸ் செய்யத் துடிக்கும் சுரண்டல் அமைப்பில், மிக எளிமையானதும் பக்க விளைவுகள் இல்லாததுமான வாசக்டமி குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாதது வியப்பில்லை,
ஆனால் கொடிய வேதனை. ஆகவே, ஊரைக் கூட்டி வாசக்காப்பு நிகழ்வு நடத்திக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக ஆண்கள் வாசக்டமி செய்து கொள்வதே சாலச் சிறந்தது என்பதை மறவாதீர்கள்.