articles

img

அழித்து நிற்பார் (கோவி.பால.முருகு)

ஆழமாய் மண்ணை அள்ளி  விட்டார்-வளத்தை  

   ஆனமட்டு  மிங்கே  கொள்ளை  யிட்டார்!

வாழையடி வாழையை வெட்டு கின்றார்-வாழும்  

   வளத்தை  அழித்தே  உண்ணு கின்றார்!  

நீரின்  கருப்பை  அறுத்து விட்டார் -எங்கும்      

நெகிழிக்  குப்பை விதைத்து விட்டார்!

வேரிலே வெந்நீர் ஊற்றி விட்டார்-இயற்கை    

   வெந்திடும் வேலை செய்து விட்டார்!  

மழைதரும் காட்டை சூறை இட்டார்-அதை      

மகிழ்ச்சியாய் சிலருக்கு மாற்றி விட்டார்!

பிழைதரும் செயலைச் செய்து விட்டார்-அவர்    

   பிழைப்பே இதுவெனப்  பழகி  விட்டார்!  

வயல்களில் கருங்கல் நட்டு விட்டார்-அதை      

 வகையாய் விலைக்கே விற்று விட்டார்!

உயர்ந்த மாளிகை கட்டி விட்டார்-பசி      

 உணவின் வழியை அடைத்து விட்டார்!  

கடல்வளம் அழிக்கத்  திட்டம் கொண்டார் -அதை  

   கார்ப்பரேட்   சுரண்டும் வழியைக் கொண்டார்!

உடலினை அறுத்திடத் துணிந்து நிற்பார்-இயற்கை      

உறுப்பாம்  ஐம்பூதம் அழித்து நிற்பார்!  மலைகளைக் குடைந்து மறைத்து விட்டார்-விலை    

  மதிப்பிலா  கற்களை விற்று விட்டார்! விலையாய்ப் போனது இயற்கைச் செல்வம் -கெட்ட    

  விடமாய் ஆனது  மனித உள்ளம்