articles

img

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆதாரமற்ற, அவசர ஒப்புதல் ஏன் ?

இந்தியாவில் கோவிட் 19 நோயிற்கான இரண்டு தடுப்பு மருந்துகளை சிறப்பு நிபுணர் குழுவின் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி, ஒப்புதல் பெற்றுள்ளது.இதன் பின்னர் மருந்து கட்டுப்பாட்டு டைரக்டர் ஜெனரல் மருந்தை எல்லோருக்கும் வழங்கலாம் என் ஒப்புதல் தர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் மருந்து கட்டுப்பாட்டு டைரக்டர் ஜெனரல் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

ஒன்று இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்து. இது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி மையமும் தனியார் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் தயாரித்த மருந்தாகும். சீரம் இன்ஸ்டிடியூட் லைசன்ஸ் பெற்று இந்தியாவில் தயாரிக்கிறது. மற்றொன்று இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த  கோவாக்சின்.இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் வைராலஜி மையம் உதவியுடன் உள்ளூர் ஆராய்ச்சியின் மூலம் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசி.தடுப்பூசிகள் வழங்குவதற்கான ‘ட்ரை ரன்’ என அழைக்கப்படும் ஒத்திகை நடைபெற்றுள்ள்ளது. இதில் யாருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்படவில்லை. எவ்வாறு தடுப்பு மருந்து பாதுகாப்பாக விரைவாக தனி மனிதருக்கு  சென்றடையும் என்ற ஒத்திகை தான்நடைபெற்றுள்ளது.

தடுப்பூசி1: கோவிஷீல்ட்...
இந்தியாவில் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றுள்ள கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது.தடுப்பூசிகள் பல வகைகளில் உருவாக்கப்படுகின்றன. இந்த தடுப்பு ஊசி மனிதக் குரங்கை பாதிக்கும் ஜலதோஷம் தரும் அடினோவைரஸ்  டிஎன்ஏவை செயலிழக்க மாற்றியமைத்து அதில் கோரோனாவைரசின் ஸ்பைக் புரதத்தை உருவாக்கும் டிஎன்ஏவைப் பொருத்தி தயாரிக்கப்படுகிறது. இந்ததடுப்பு மருந்து நமது செல்களின்  உள்ளே போய் ஸ்பைக் புரதத்தினை உருவாக்கும். இதனால் உடலில் நாவல் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்திற்கு எதிரான பொருட்களை உருவாக்கி தயார் நிலையில் இருக்கும். மேலும் இது நினைவு செல்கள் எனக் கூறக்கூடிய பி மற்றும் டி செல்களை உருவாக்கி பிற்காலத்தில் தடுப்பூசி தேவையில்லாமல் செய்து விடும்.இந்தியாவில் இதை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற தனியார் நிறுவனம் லைசன்ஸ் பெற்று உற்பத்தி செய்து வருகிறது.சுமார் 5 கோடி யூனிட்டுகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் இரண்டரைக் கோடி மக்களுக்கு நான்கு வார இடைவெளியில் வழங்கு வார்கள்.இந்த தடுப்பூசி 70% திறன் கொண்டது என்கிறார்கள். 2-8 டிகிரி குளிர்பதன நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் விலை சுமார் 4 டாலர். அதாவது சுமார் 300 ரூபாய்.இந்த தடுப்பூசி நமது நாட்டில் மூன்றாம்கட்ட சோதனை செய்யப்படாமல் இங்கிலாந்தில் செய்த சோதனையின் அடிப்படையில் அவசரப் பயன்பாட்டு அனுமதி பெற்றுள்ளது. இன்று வரை இந்த தடுப்பூசியின் தரவுகள் பொது வெளியில் இல்லை. 

தடுப்பூசி 2:  கோவாக்சின்
இது பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரிக்கும்  கொரோனா தடுப்பூசி ஆகும். இது ஐசிஎம்ஆர், இந்திய வைராலஜி மையம் உதவியுடன் பெறப்பட்ட இந்திய கொரோனா வைரஸ்ஸைப் பயன்படுத்தி அதனைக் கொன்று தயாரிக்கப்பட்டதாகும். அதாவது நாவல் கொரோனா வைரஸின்மரபணு அதாவது ஆர்என்ஏ செயலிழக்கப்பட்டு அந்த முழு வைரஸை மேலுறையுடன் ஸ்பைக் புரோட்டீன் உட்பட தடுப்பூசியாகப் பயன்படுத்துகிறார்கள். இது செலுத்தியவுடன் நமது உடலில் ஸ்பைக் புரோட்டீனுக்கும் வைரசின் மற்ற புரதங்களுக்கும் எதிரான ஆன்டிபாடீஸ் உருவாகும். மேலும் இது நினைவு செல்கள் எனக் கூறக்கூடிய பி மற்றும் டி செல்களை உருவாக்கி பிற்காலத்தில் தடுப்பூசிதேவையில்லாமல் செய்து விடும். இவை உள்ளே நுழையும் கோவிட் 19ன் வைரஸை கண்டறிந்து  நிர்மூலமாக்க உதவும்.

இந்த தடுப்பூசிக்கு  போதிய மூன்று கட்ட கிளினிக்கல் சோதனைகள் செய்யப்படவில்லை. முதல் இரண்டு கட்டச் சோதனைகளில் இருந்து அது பாதுகாப்பாகவும் எதிர்ப்புசக்தி உருவாக்கக் கூடிய திறன் உள்ளதாகவும் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் சோதனைக்குரிய புள்ளி விபரங்கள் ஆதாரப்பூர்வ ஆராய்ச்சி இதழ்களில் பதிவாகவில்லை. மூன்றாம் கட்ட சோதனை முற்றிலும்செய்யப்படவில்லை.  கோவாக்சின் தடுப்பூசி தற்போது வழங்குவதே மூன்றாம் கட்ட கிளினிக்கல் சோதனை வகை என்று சற்றும் கூச்சமின்றி சொல்கிறார்கள். இதைக் குழந்தைகளுக்கும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள் உட்பட கொடுக்கப்படும் என்பதாகவும் தெரிகிறது. இது வரைகுழந்தைகளுக்கோ கர்ப்பிணிப் பெண்களுக்கோ இது போன்று கிளினிக்கல் சோதனை செய்யப்பட்டதில்லை.ஆறுமாத காலம் கண்காணிப்பும் நடைபெறும் என்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கோவேக்சின் என்பது அவசர காலப் பயன்பாட்டுக்கு மட்டும் தான் என்றும் கதைக்கிறார்கள். அதாவது ஏற்கனவே பல நோய்கள் உள்ளவர்களுக்கு இதைக் கொடுப்பதால் நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள்.மேலும் தற்போது சற்று மாறுபட்ட தீவிர வகை கோவிட் 19 வைரஸையும் எதிர்க்கும் என்று ஆதாரம் இல்லாமல் கூறுகிறார்கள். சீனாவில் இது போன்று தான் சைனோவேக் கொடுக்கப்பட்டது; ஆறு மாத காலமாக சீனாவில் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள். சீனா கொடுக்கும் பொழுது நையாண்டி செய்தவர்கள் தான் இவர்கள்.மலேரியா மருந்து உட்பட சில மருந்துகள் இப்படித்தான் பயன்பாட்டுக்கு வந்தன என வேறு கூறுகின்றனர். 

கோவாக்சின் 60% திறன்மிக்கதென்றும் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாததுஎன்றும் கூறுகின்றனர்.  110% பாதுகாப்பானது என்ற பேச்சு வேறு. இதற்கு எந்த விதமான தரவுகளும் பொதுவெளியில் இல்லை. இருப்பினும் 2021 மார்ச் முதல் அக்டோபர் மாதத்திற்குள் எல்லாத் தரவுகளும் பொது வெளியில் கொண்டு வரப்பட்டு நம்பிக்கை உருவாக்கப்படும் என்கிறார்கள். அப்படியானால் முழுவதுமான தரவுகளுடன் கூடிய அங்கீகாரத்திற்குப் பின் அனுமதிகொடுத்திருக்கலாமல்லவா? இத்தனை பிரச்சனைகளுடன் கூடிய கோவாக்சின் எதற்குஅவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளது என கேட்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். ஒரு மாதம் கழித்து ட்ரையல்ஸ் எவ்வாறு செல்கிறது என்று பார்த்துவிட்டு அனுமதி வழங்கலாமா என்று பார்த்திருந்தால் என்னஆகிவிடும்? கோவிட் 19 உலகத் தொற்றைக்காட்டி அனுமதி கொடுத்தாலும் அறிவியலில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்கிறார்கள் அறிஞர்கள்.ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா என்று மக்கள் கேட்கிறார்கள். ஆனால்இதில்  மறைந்திருப்பது குடியரசு தினமும் அப்போது ஒலிக்கும் பிரதமரின் ஓங்கார ‘சுயசார்பு’ பாரத திட்டமும் தான்; ‘பாரதப் பெருமை’யின் அறிவிப்பிற்காக இருக்கலாம் என சிலர்  கருதுகிறார்கள்.அதற்காக அறிவியல் வழிமுறைகளை கைவிட்டு   நமது அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தகுதியையும்  கேள்விக்குறி யாக்கலாமா? 

===பேரா. பொ. இராஜமாணிக்கம் & டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி===