articles

img

உலக கிரிக்கெட்டில் பார்வை மாற்றுத்திறனாளி சாதனை -சி.முருகேசன், விக்னேஷ்

சர்வதேச பார்வை மாற்றுத்திற னாளிகள் விளையாட்டு கூட்டமைப்பால் (ஐபிஎஸ்ஏ) 2023 இல் நடத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளை யாடி வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் தூத்துக்குடி இளைஞர் மகாராஜா (27). பட்டதாரியான இவருடன் விளை யாடிய இளைஞர்களுக்கு ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகள் தலா ரூ.15  லட்சம் ஊக்கத்தொகை அளித்துள் ளது. ஆனால், இந்த ஏழை மாணவர், தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறையில் விண்ணப் பித்து உதவிக்காகக் காத்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எப்போதும் வென்றான் அருகே உள்ள  கே.துரைசாமிபுரம் பகுதியை  சேர்ந்த  சிவசுப்பிரமணியன் -சண்முகத்தாய் தம்பதியின் மூன்றாவது  மகன் மகா ராஜா (27). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் தனது எட்டு வயதில் பார்வை முழுவதுமாக இழந்ததைத் தொடர்ந்து பாளையங் கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பார்வை மாற்றுத்திறன் மாண வர்களுக்கான மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளார். அங்கு மீண்டும் முதலா வது வகுப்பிலிருந்து தனது படிப்பை  தொடங்கி அதே பள்ளியில் பன்னிரண் டாம் வகுப்பில் முதலிடம் பெற்றார். மாவட்ட அளவில் பார்வை மாற்றுத் திறன் மாணவனாக முதலிடத்தையும், மாநில அளவில் நான்காவது இடத்தை யும் பிடித்துள்ளார்.

கிரிக்கெட் மீது ஆர்வம்
கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பள்ளிப் படிப்பின் போதே திறம்பட விளை யாடி வந்துள்ளார். இவரது விடாமுயற்சி யால் 2012 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட பார்வை மாற்றுத்திறனாளி கள் கிரிக்கெட் அணிக்காக தேர்வு  செய்யப்பட்டு விளையாடி உள்ளார். அவரது விளையாட்டு திறமையை கொண்டு 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக பார்வை மாற்றுத்திறனாளி களுக்கான கிரிக்கெட் அணியில் விளை யாடி வருகிறார். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். உலக நாடு களுக்கிடையே இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பார்வை  மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடி னார். இதில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஒடிசா அரசின் பாராட்டு
இவருடன் விளையாடிய ஒடிசா வைச் சேர்ந்த நகுலா பட்நாயக், பங்கஜ் பூகே, ஜாபர் இக்பால் ஆகியோருக்கு அம்மாநில அரசு தலா ரூ.15 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்காக மாணவனான நகுலா பட்நாயக் தவிர ஒருவருக்கு மாநில அரசுப் பணியும், மற்றொருவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற பார்வை மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை வழங்கும் புகைப்படத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது எக்ஸ்  தளத்தில் 2023 செப்டம்பர் 8 ஆம் தேதி பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசின் ஆதரவு தேவை
தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 29.4.2019 தேதியிட்ட அரசாணை எண் 18 இல் தேசிய சர்வதேச போட்டிகளில் சாதனை படைக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத் தொகைக்கான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதன்படி அந்த துறை யிடம் மகாராஜனுக்கு ஊக்கத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க செயலாளர் மகேந்திரன்கூறினார். 

தமிழ்நாடு அரசாணையை பின்பற்றி தான் ஒடிசா அரசு 8 மாதங்களுக்கு முன்பே இவருடன் விளையாடிய அம்மாநில வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் விளையாடு வதற்கான திடல்கள் எளிதில் கிடைக்க வேண்டும். விளையாட்டு உபகரணங் கள், உணவு போன்றவை கிடைப்பதை மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலம் உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.

அணி கேப்டனுக்கு  அர்ஜுனா விருது
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பார்வை மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் அஜய்குமார் ரெட்டிக்கு அர்ஜுனா விருது வழங்கி சிறப்பித்தார். இவர்தான் மகாராஜா விளையாடிய உலகப் போட்டியின் கேப்டனாவார். இதே விழா வில் முன்னாள் கேப்டன் சேகர் நாயக்கு க்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து தேசிய பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க  (சிஏபிஐ) தலைவர் டாக்டர் மகந்தேஷ்  கிவாதேசன்னவார் செய்தியாளர்களி டம் கூறுகையில், இந்த விருதின் மூலம் சிஏபிஐ-க்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 

அதே அணியில் விளையாடிய தமிழக வீரர் மகாராஜனின் திறமையை அங்கீகரித்து இதர விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் ஊக்கமும் வாய்ப்பும் தமிழக அரசால் வழங்கப் பட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.  

-சி.முருகேசன், விக்னேஷ்

;