articles

img

மீண்டும் திரும்புகிறதா காலனி ஆட்சிக்காலம்?

“என்ன விலை கொடுத்தாலும் விவசாயிகள் நலன்களை பாதுகாப்போம்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இதுவரை 11 பேர் தங்களது உயிரை விலையாகக் கொடுத்துள்ளனர்.
விவசாயிகள் நலன்களை பாதுகாப்பது குறித்து இந்திய முதலாளிகளின் அமைப்பான பிக்கி ஆண்டு மாநாட்டில் பேசும்போது பிரதமர் இவ்வாறு பேசியிருக்கிறார். தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் கூறுவதற்கேற்பமாற்றும் விசித்திரமான ஆட்சி இது. இந்த பெருமுதலாளி களின் நலன்களுக்காகவே கோடிக்கணக்கான விவசாயிகளின் நலன்களை பறிக்கும் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதலாளிகளிடம் பேசும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை அழைத்து பேச மனமில்லை.

விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைகளில் மட்டுமல்லாது அதற்கு வெளியே உள்ளவர்களிடமும் விற்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. அவர் சந்தைக்கு வெளியே என்று கூறுவது பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களைத்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. இந்த மாநாட்டில் பேசிய அவர், குளிர்சேமிப்புப் போன்ற துறைகளுக்கு உள்ள பழைய தடைகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.பிரதமர் யாருக்கான தடைகளை நீக்கியுள்ளார் என்று தெரிந்துகொள்வது நல்லது. இந்தியாவில் முதல் பெரும் பணக்கார முதலாளியாக உருவெடுத்து வரும் அதானி நிறுவனம் மோடி அரசு இந்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முன்பே அறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமான விவசாயப் பொருட்களை சேமிக்கும் கிடங்குகளை உருவாக்கி வருகிறது. 

ரயில்வே பணிகளுக்காக என்று கையகப்படுத்தப்பட்ட நிலம் அதானிக்கு கைமாற்றப்பட்டு அந்த இடத்தில் விவசாயப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கு உருவாக்கப் பட்டுள்ளது. இது குறித்து அகர்ஷன் உப்பல் என்ற ஊடகவியலாளர் தான் பணியாற்றும் ஐபிஎன் 24 என்ற தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதானி, அம்பானி வகையறாக்களுக்கு இருந்த தடைகள் தகர்க்கப்பட்டதைத்தான் பிரதமர் கூறுகிறார். அதானி குழுமத்திற்கான தடை தகர்க்கப்பட்டு 9லட்சம் டன் உணவுதானிய சேமிப்புக் கிடங்குகள் தயாராகவைக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்காண்டுகளில் அதானி குழுமம் வடமாநிலங்களில் 22 விவசாயப் பொருள் போக்குவரத்து மெகா நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இதில் 20 நிறுவனங்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் கார்ப்பரேட்டுகளின் நம்பிக்கையை இழந்துவிடுவோம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதை இதனுடன் இணைத்துப் பார்த்தால் உண்மை புரியும்.ஆனாலும் பிரதமருக்கு இது திருப்தியளிக்கவில்லை. விவசாயத்துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு போதாது என்று ஆதங்கப்பட்டுள்ளார். அவர் எந்த நிறுவனங்களைக் கூறுகிறார் என்பது தெரிந்ததே. தனியார் துறையினர் விவசாயத்துறையில் இன்னமும் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் உசுப்பிவிட்டுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் பொதுத்துறையின் கீழ் நடைபெறவில்லை. தனித்தனியாக கோடிக்கணக்கான விவசாயிகள்தான் இப்போது இதில் ஈடுபட்டுள்ளனர். இதில் தனியார் என்று பிரதமர் அழுத்திக் கூறுவது பெருமுதலாளிகளை மட்டுமே.

இந்தியாவில் கடந்த காலங்களில் வரி பயங்கரவாதம் இருந்ததாகவும் தற்போது பெரு நிறுவனங்களுக்கான வரிகளும், போட்டியிடத்தக்க விதத்தில் மிதமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலத்திலும் கூட பெருமுதலாளிகளுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அனைத்துத் துறை வளர்ச்சியும் சரிந்து உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 27 என்று எதிர்மறை விகிதத்தில் சென்ற போதும் கூட கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 85 மகா கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அதானியின் சொத்து மதிப்பு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. அம்பானியின் சொத்துமதிப்பு 2017ல் 26.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2020 டிசம்பரில் 74.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்கு ஆதரவான மிதமான வரிக்கொள்கை தான். 

புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது விவசாயிகள் தங்களிடம் உள்ள பாரம்பரிய விதை உரிமையை இழந்துவிடுவார்கள். விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பெருநிறுவனங்கள் தரும் விதையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதை மறுமுறை பயன்படுத்த முடியாது. அந்த விதைகள் நோய்களையும் சேர்த்தே கொண்டுவரும். அதற்கான பூச்சிமருந்துகளையும் அவர்களிடம்தான் பெற வேண்டும். இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் நினைக்கலாம்.

கடந்த ஆண்டு குஜராத் விவசாயிகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை புரிந்து கொண்டால், பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும். பன்னாட்டு நிறுவனமான பெப்சி தண்ணீர் மற்றும் குளிர்பான வியாபாரத்தில் மட்டும் ஈடுபடவில்லை. லேஸ் எனப்படும் உருளைக்கிழங்கு வறுவலையும் விற்கிறது. பெப்சிகோ நிறுவனம் குஜராத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள் மீது வழக்கு தொடுத்தது. எப்சி5 எனப்படும் உருளைக்கிழங்கை விவசாயிகள் பயிரிட்டது குற்றமாம். அந்த வகை உருளைக்கிழங்கு தங்களுக்கே சொந்தம் என்றார்கள். நல்லவேளை உருளைக்கிழங்கை கண்டுபிடித்ததே நாங்கள்தான் என்று கூறவில்லை. விவசாயிகளிடம் ரூ.1 கோடியே 5லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டது பெப்சி.இந்த ரக உருளைக்கிழங்கை எந்த விவசாயிகளுக்கு கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும்தான் பயிரிட்டு அதை தங்களுக்கு விற்பனை செய்யவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

ஆனால் இந்த நான்கு விவசாயிகளும் அவர்களாக இந்த உருளைக்கிழங்கை பயிரிட்டுள்ளனர் என வழக்கு தொடுக்கப்பட்டது. இது பரபரப்பாக பேசப்பட்டு உருளைக்கிழங்கு வறுவல் விற்கும் பெப்சியை சமூக ஊடகங்கள் வறுத்தெடுத்தன. இதைத்தொடர்ந்து விவசாயிகளுடன் சமரசமாகப் போவதாக அறிவித்தது. ஆனால்தற்போதைய விவசாயத் திருத்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தும்போது இத்தகைய வழக்குகள் ஏராளமாக வரும். புதிய திருத்தச் சட்டங்களின்படி பன்னாட்டு நிறுவனங்களை ஒன்றும் செய்ய முடியாது. அப்பாவி விவசாயிகள்தான் தண்டிக்கப்படுவார்கள். இந்த விசயத்தில் மாநில அரசுகள் கூட தலையிட முடியாத அளவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளும் நீதிமன்றத்திற்கு போகலாம் என்று அளக்கிறார்கள். பெப்சி, இந்துஸ்தான் லிவர், கோக், அம்பானி, அதானி வகையறாக்களை எதிர்த்து ஏழை, எளிய விவசாயிகள் வாதாடி ஜெயிக்க முடியுமா இதைத்தான் மச்ச நியாயம் என்பார்கள். சிறிய மீனைப் பார்த்து பெரிய மீன் சொன்னதாம் நான் உன்னை விழுங்குகிறேன். முடிந்தால் நீயும் என்னை விழுங்கிக் கொள்ளலாம் என்று. 

பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ஒப்பந்த விவசாயம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே ம.பி.யில் இந்துஸ்தான் லிவர், குஜராத்தில் பெப்சி கோ ஆகிய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று வக்காலத்து வாங்கியுள்ளார். இந்துஸ்தான் லிவர்  என்ற நிறுவனத்தின் தாய் நிறுவனம் யுனிலிவர். அது நாட்டுக்கு நாடு பெயரை மாற்றிக் கொள்ளும் ஒரு பன்னாட்டு நிறுவனம். அவர்கள் இந்திய விவசாயிகளின் நலன்களுக்காக உழைக்கிறார்களாம். கேப்பையில் நெய் வடிகிறது என்கிறார் ராஜா. கேட்பவர்கள்தான் அறிவோடு சிந்திக்க வேண்டும்.

காலனி ஆதிக்கக் காலம் மீண்டும் திரும்புகிறதோ என்று நினைக்குமளவுக்கு அமைந்துள்ளன வேளாண் திருத்தச் சட்டங்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் அபினிச் செடிகளை விளையச் செய்து சீனாவுக்கு அபினி போதைப் பொருளை அனுப்பி கொள்ளையடித்தது பிரிட்டிஷ் அரசு. அடுத்து இங்கிலாந்து நூற்பு ஆலைகளில் பயன்படுத்துவதற்காக பணப்பயிரான அவுரிச் செடியை மட்டுமே பயிரிட பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தின. இதற்காக ஏழை விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் உணவுப் பயிர்கள் பயிரிடப்படுவது தடுக்கப்பட்டு செயற்கையான பஞ்சம் உருவாக்கப்பட்டது.

அவுரி விவசாயத்திற்காக பீகார் மாநிலத்தில் முசாபர் பூர், தர்பங்கா, சம்ப்ரான், சரண் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பிரிட்டிஷ்காரர்கள் அவுரித் தோட்டங்களை உருவாக்கினர். உள்ளூர் ஜமீன்தார்களை இதற்கு துணைக்கு அழைத்துக் கொண்டனர். ஒரு சாயத்தோட்டம் என்பது ஆயிரம் முதல் 10ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இதில் உள்ளூர் விவசாயிகள் ஒன்றரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதை நிர்வகிக்க 200 பிரிட்டிஷ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த விவசாயம் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபம் முழுவதும் 16 பிரிட்டிஷ் வர்த்தக நிறுவனங்களுக்கே சென்றன. அவுரிச் செடி பயிரிட மறுத்த விவசாயிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் கொலைசெய்யவும் பட்டனர்.அவுரி விவசாயத்திற்கு துணையாக இருந்த ஜமீன்தார்களுக்கு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது, துப்பாக்கி மற்றும் பட்டம் பதவிகளும் வழங்கப்பட்டன. அவுரி விவசாயத்தில் 16 வயது சிறுவர்கள் முதல் 80 வயதுமுதியவர்கள் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.

1848ஆம் ஆண்டு வங்க மாநிலம் பரிப்பூர் மாவட்ட நீதிபதியான டி.டி.லதுர் ‘‘இங்கிலாந்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு இண்டிகோ சாய பெட்டியின் மீது ரத்தக்கறை படிந்துள்ளது, பல விவசாயிகளின் உடல்கள் மீது ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவசாய முறை ரத்தம் சிந்த வைக்கும் கொடூரமான முறை’’ என்று கண்டித்திருந்தார். 1868ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. பலர் மாண்டனர். செயற்கை சாயம் புழக்கத்திற்கு வந்த பிறகுதான் அவுரி அநியாயமும் முடிவுக்கு வந்தது.

இப்போதும் கூட ஒப்பந்த முறையில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு லாபம் தரக்கூடிய பயிர் வகைகளையே ஊக்கப்படுத்துவார்கள். அடுத்து கட்டாயப்படுத்துவார்கள். இதனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்தது போல செயற்கையான பஞ்சங்கள் உருவாக்கப்படும் ஆபத்தும் உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களே கொள்முதல் செய்யமுடியும்என்பதால் அதை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க முடியும். பின்னர் அதிக விலைக்குவிற்கவும் முடியும். அதற்கான சேமிப்புக்கிடங்குகள் இப்பொழுதே தயாராக உள்ளன. இதற்கேற்ப அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் விலக்கப்பட்டுள்ளன. நடந்து கொண்டிருப்பது தனித்த சம்பவங்கள் அல்ல. ஒரு மிகப்பெரிய சதிவலைப் பின்னல். இதை உணர்ந்ததால்தான் விவசாயிகள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்த சீனா தூண்டுவிடுகிறது, பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது என்று சொல்லி வந்தவர்கள் இப்போது மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவிவிட்டார்கள் என்று சொல்லத் துவங்கியுள்ளனர். முன்பு ‘அர்பன் நக்சல்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர்கள், இப்பொழுது ‘அல்ட்ரா லெப்ட்’ என்று பெயர் சூட்டத் துவங்கியுள்ளனர். உண்மையில்போராட்டத்தை தூண்டிவிடுவது மத்திய ஆட்சியாளர்கள் தான். விவசாயிகள் கேட்பது ஒன்றுதான். இந்தச் சட்டங்களை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதைச் செய்தால் போராட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேளாண் சட்டத்தில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் இந்தச் சட்டத்தால் நாட்டின் எந்தப் பகுதிக்கும் கொண்டு சென்று விளை பொருட்களை விற்கலாம் என்றும், யாரிடம் விற்பது என்று விவசாயிகளே முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பிட்ட நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து பயிரிடும் போது அவர்களிடம்தான் விற்க வேண்டியிருக்கும். பிறகு எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம் என்பதன் பொருள் என்ன? இப்போது விவசாயிகளின் பிரச்சனை விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதுதான். அதற்கான குறைந்தபட்ச ஆதார விலையையும் நீக்கிவிட்டு எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோய் விற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி தொடர்ந்து ஏமாற்றுவதில் ஏதேனும் அர்த்தம் உண்டா? 

இவர்தான் தேர்தலின்போது பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளித்தவர் ஆகும். ஆதார விலைக்கு நாங்கள் உத்தரவாதம் என்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். ஆனால் அவர்களது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை தருவோம் என்றார்களே. அது நடைமுறைக்கு வந்துவிட்டதா? இந்தச் சட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் விவசாயம் இருக்கலாம். ஆனால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் கையில் நிலம் இருக்காது.

===மதுரை சொக்கன்==

;