articles

img

சமகால உலக முதலாளித்துவத்தை அறிய வெளிச்சம் தரும் லெனின்.....

தோழர் லெனின் 1870 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 22 நாளில் பிறந்தார். 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று மறைந்தார். ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவாகவே வாழ்ந்த லெனின் மனித சமூக வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். திறமை மிகு தனி நபராக அல்ல. மார்க்சிய அறிஞராக மட்டுமல்ல, அரசியல்-தத்துவ-பொருளாதார அறிஞராக மட்டுமல்ல, தத்துவத்தையும் நடைமுறையையும் மார்க்சிய புரிதலின் அடிப்படையில் இணைத்துவர்க்க- வெகுஜன அமைப்புகளை கூட்டுத்தலைமைமூலமும் களப்போராட்டங்கள் வாயிலாகவும் வளர்த்து பல பத்தாண்டுகள் தத்துவ-நடைமுறை தளங்களில் பாடுபட்டு, கொடுங்கோலன் ஜார் மன்னன் ஆட்சியில் நாடுகடத்தப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் பல ஆண்டுகள் கழித்தார் தோழர் லெனின். இறுதியில்  தனது  நாற்பத்திஏழாவது வயதில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் 1917 அக்டோபர் மாதம் நிகழ்ந்த மாபெரும் சோசலிசப் புரட்சியில் மகத்தான தலைமைப்பங்கு ஆற்றிசோசலிச அமைப்பை ஏற்படுத்தி மானுட வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவராக வரலாற்றில் லெனின் நீங்காதஇடம் பெறுகிறார்.

23 வயதிலேயே
பன்முகத்திறமைகள் கொண்டிருந்த தோழர் லெனினது பங்களிப்புகள் அனைத்தையும் ஒருசிறு கட்டுரையில் விவரிக்க இயலாது. பல புத்தகங்கள் கூட போதாது. www.marxists.org என்ற இணையதள முகவரிக்கு சென்றால் 1893 இல் இருந்து 1923 வரை லெனின் எழுதிய ஏராளமான புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், கடிதங்கள், சிறுகுறிப்புகள் ஆகியவற்றைக்காணலாம். 1893 இல்தனது 23ஆவது வயதில் விவசாயிகள் வாழ்க்கை பற்றியும் சந்தை பிரச்சினை பற்றியும் இரு முக்கியசிறுநூல்களை அவர் எழுதுகிறார். 1899இல் தனது29ஆவது வயதில், இன்றுவரை மார்க்சிஸ்டுகள் மட்டுமின்றி வேளாண்துறையில் முதலாளித்துவம் வளர்வது பற்றி ஆய்வு செய்வோர் அனைவரும் படிக்கும் “ ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” என்ற நூலை அவர் எழுதுகிறார். இன்னும் ஏராளமான சமகால பிரச்சனைகளைப்பற்றியும் புரட்சிகர இயக்கத்தின் முன்னிருந்த அனைத்துப்பிரச்சனைகள் பற்றியும் லெனின் எழுதியுள்ளார். இவற்றை எல்லாம் நாம் இங்கு பேசப்போவதில்லை. இக்கட்டுரையில் சம கால முதலாளித்துவத்தை புரிந்துகொள்ள லெனின் முன்வைத்த கருத்துக்கள் உதவுகின்றன என்பதை மட்டுமே விளக்க முயல்வோம்.

ஏகபோக முதலாளித்துவம்
முதலாளித்துவ அமைப்பு, அதன் இயக்க விதிகள் பற்றி மூலதனம் என்ற தனது மகத்தான நூலில் கார்ல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் காலத்தின் இறுதியில் 1870களில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் பதினைந்து ஆண்டுகள் வரையிலான வளர்ச்சிப்போக்குகளை 1916இல்பிரசுரிக்கப்பட்ட ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்ற தனது  சிறு  நூலில்மார்க்சிய ஆய்வுக்கு உட்படுத்தி சில மிக முக்கியகருத்துக்களை லெனின் முன்மொழிகிறார். அவரதுமுன்மொழிவுகள் சமகால முதலாளித்துவத்திற்கும் பல அம்சங்களில் பொருந்துகின்றன. இந்நூலில்முதலாளித்துவ வளர்ச்சி தனது ஏகபோக கட்டத்தை அடைந்துள்ளது என்பதை லெனின் விளக்குகிறார். கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே உலகம் முழுவதையும் சில ஏகாதிபத்திய வல்லரசுகள் பங்கு போட்டுக்கொண்டதை படம் பிடித்துக்காட்டுகிறார். அதேபோல் முதலாளித்துவ உலகச்சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின் பெரும்ஏகபோக கம்பனிகள் பங்குபோட்டுக்கொண்டுவிட்டன என்பதையும் விளக்குகிறார். நவீன முதலாளித்துவ வளர்ச்சியில் கிடைக்கும் கொள்ளை லாபங்கள் பெரும் நிதி மூலதனங்களாக வளர்ந்து ஒரு சிறிய பெருமுதலாளி கூட்டத்திடம் குவிந்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தகையநிதி மூலதனம் ஒரு நாட்டுக்குள் மட்டும் செயல்படுவதில்லை. உலகெங்கும் லாபம் தேடி சூறாவளியாய்வலம் வருகிறது. பன்னாட்டு வர்த்தகத்தில் சரக்குபரிமாற்றத்தை  விட மூலதன ஏற்றுமதியும் அதன்சுழற்சியும் பன்மடங்கு அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் முதலாளித்துவம் மூலதன ஏற்றுமதி மூலம் பரவுவது ஏகாதிபத்திய அமைப்பு என்ற சங்கிலியால் உலகநாடுகள் பிணைக்கப்படும் நிலையை உருவாக்கிவிட்டது. காலனி ஆதிக்கச்சுரண்டல் ஏகாதிபத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தேச விடுதலைப் போராட்டங்களை உருவாக்கிவிடுகிறது. சோசலிசத்திற்கான உலக தொழிலாளிவர்க்கத்தின் போராட்டம் காலனி நாடுகளில் வெடிக்கும்  தேச விடுதலைப் போராட்டங்களுக்கு துணை நிற்பதுஅவசியம் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். மேலை நாடுகளில் திருத்தல்வாதமும் வர்க்க சமரசப் போக்குகளும் வளர்வதில் காலனி சுரண்டலின் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபங்களும் ஒருபங்கு வகிக்கின்றன என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். 

உலகின் மைய முரண்பாடு 
இங்கு மிக முக்கியமாக அவர் குறிப்பிடுவது முதலாளித்துவம் தனது ஏகபோக கட்டத்தில் உலகம் தழுவிய  ஏகாதிபத்திய அமைப்பாக உருப்பெற்றது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் மட்டுமல்ல, அதன் இறுதி கட்டமும் ஆகும் என்பதாகும்.இக்கட்டத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்குமான முரண்பாடு தான்  உலகின் மைய முரண்பாடாக இருக்க முடியும். ஆகவே தான் தனது ஏகாதிபத்தியம் நூலில் “ஏகாதிபத்தியம் பாட்டாளிவர்க்கப்புரட்சியின் நுழைவா­­ய்” என்று லெனின் கூறுகிறார். இதை லெனின் எழுதியது 1916 இல். லெனின்  கூற்றை நிரூபிக்கும் வகையில் அடுத்த ஆண்டு 1917 இல் ரஷ்யாவில் நிகழ்ந்த  பாட்டாளிவர்க்கப்புரட்சிக்கு போல்ஷெவிக்கட்சி தலைமை தாங்கி உலகின் முதல் முழு சோசலிச நாட்டை நிர்மாணித்தது என்பது வரலாறு.லெனின் தனது ‘ஏகாதிபத்தியம்’ நூலை எழுதியபொழுது முதலாளித்துவம் உலகெங்கும் கொடிகட்டிப்பறந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி  மிக விரைவாக உலகையே வென்ற முதலாளித்துவம் வீழும் என்று 1916 ஆம் ஆண்டில் லெனின் கூறினார் என்றால் அது ஆரூடமல்ல, மார்க்சிய விஞ்ஞானம்.

ஏகாதிபத்தியத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோசலிச சோவியத் ஒன்றியம் மகத்தான சாதனைகளை படைத்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த சோசலிச பின்னடைவுக்கு முன்பாக உலகில் ஆறில் ஒருபங்கு நிலப்பரப்பும் மூன்றில் ஒரு பங்குமக்களும் சோசலிசப்பதாகையின் கீழ் வாழ்ந்தனர் என்பதை மறக்கலாகாது.

மானுட விடுதலையின் முதல்படி
1991இல் சோவியத் ஒன்றியம் சிதைந்தபொழுது லெனினியம் இறந்துவிட்டது என்று ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் கொக்கரித்தனர். ஆனால் இன்றும் அனைத்து நாடுகளிலும் சோசலிச கருத்துக்களும் இயக்கங்களும் ஆளும் வர்க்கங்களின் தாக்குதல்களை எதிர்கொண்டு  வளர்ந்து வருகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகஉலக முதலாளித்துவம் ஆழமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மானுடத்தின் பிரச்சனைகளுக்கு அதனால் தீர்வு காண முடியாது என்பதும் தெளிவாகி வருகிறது. கோவிட் பெரும் தொற்று,லாபவெறியை பின் தள்ளி மானுட நலனை முன்னிறுத்துவதன் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்திவருகிறது. உலக முதலாளித்துவத்தின் எதிர்காலம் பற்றி லெனின் முன்வைத்த பல கருத்துக்களின் சமகால பொருத்தப்பாட்டை - நிதிமூலதன ஆதிக்கத்தின் கோரமான விளைவுகளை – நாம் காண முடிகிறது. இந்த அமைப்பை எதிர்த்துமானுடம் எழும். அதுவே முழு மானுட விடுதலைக்கான முதல் படியாக  இருக்கமுடியும்.  

வெல்க லெனினியம்!

கட்டுரையாளர் ; பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

;