சரக்கொன்றை மரத்தடியில் பப்பிக் குட்டியைக் கட்டி வைத்திருந்தார்கள். தன்னைக் கட்டி வைப்பது பப்பிக்குச் சுத்த மாகப் பிடிக்காது. கட்டி வைக்காமல் இருந்தால் எல்லோருடைய செருப்புகளையும் பதம் பார்த்து விடும். தன் செருப்புகள் அறுந்து போன எரிச்சலில் அந்த வீட்டுக்கார ராதாமா பப்பியை இரண்டு போடுபோட்டதால் தான் அமைதியாய் ஒரே இடத்தில் படுத்துக் கொண்டிருந்தது. பப்பி யின் கண்கள் மட்டும் அங்கும் இங்கும் நடப் பவர்களைக் கவனித்துக் கொண்டு இருந்தது. குறும்பு செய்து மாட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தால் பப்பி ஓயாமல் குரைத்துக் கொண்டு இருந்திருக்கும். பப்பி வேறு வழி இல்லாமல் கொன்றை மரத்தடியில் அமைதி யாய் படுத்துக் கொண்டது. அப்போது பப்பி கொன்றை மலரில் தேன் எடுக்க வரும் தேன் சிட்டுவையே பார்த்துக் கொண்டிருந்தது. கருப்பும் நீளமும் கலந்து பளபளப்பாய் இருந்த தேன் சிட்டுவையே இமைக் காமல் வியந்து பார்த்துக் கொண்டிருந்தது. அது பறக்கும் இடமெல்லாம் தலையை சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே இருந்தது. தேன் சிட்டுவைப் போல் நாமும் நீல நிறமாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டது.
பறவைகளும் பல வண்ணங்களில் இருக்கு. வண்ணத்துப்பூச்சிகளும் பல வண்ணங்களில் இருக்கு. மழை நாட்களில் வானத்தில் தெரியும் வானவில்லும் பல வண்ணங்களில் இருக்கு. ஆனா, எங்களுக்கு மட்டும் கருப்பு வெள்ளை பிரவுன் என சில நிறங்களே இருக்கின்றன. என்ன செய்வது நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டது. அடி வாங்கியதை மறந்த பப்பி தன் சுறு சுறுப்பைக் காட்டத் தொடங்கியது. அப்பொழுது என்ன செய்வதென்றே தெரியாத பப்பி மண்ணை தம் கால்களால் பறைத்து விளை யாடிக் கொண்டிருந்தது. வீடு கட்டுவதற்குக் கொட்டி வைத்திருந்த மணலில் பப்பி ஒரு எலி வலையைப் போல் வங்கு பறித்து விளையாடியது. மணலை அது பறிக்க பறிக்க அடியிலிருந்து ஒரு சங்கு மேலே வந்தது. அந்த சங்கை பப்பி தம் கால் களால் தட்டி தட்டி விளையாடியது. பப்பியின் கால்கள் சங்கின் மீது படும்போது எல்லாம் சங்கிலிருந்து ஒரு சத்தம் கேட்கிறது. பப்பி ஒரு சரியான பயந்தாங்கோளி. சங்கின் மீது பப்பியின் கால் பட்டால் மட்டும் சத்தம் கேட்பதைக் கண்டு பயந்து நடுங்கு கிறது. சங்கைப் பார்த்து பயந்து போன பப்பி கண்ணா பின்னா என்று பயத்தில் குரைத்து கொண்டே இருந்தது. பிறகு என்ன செய்வதென்றே தெரியாத பப்பி சுருண்டு படுத்துக் கொண்டது. கண்களை மட்டும் அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்ட பப்பி மீண்டும் கால்களால் லேசாக சங்கைத் தள்ளிப் பார்த்தது. அப்போது சங்கு பப்பி இடம் பேச ஆரம்பித் தது. ஆமாம் உனக்கு என்ன வேண்டும். நீ என்ன கேட்டாலும் தருவேன் என்றது சங்கு. “ஓ அப்படியா...! ஆமா நீ யாரு?” “நானா நான் ஒரு மந்திரச் சங்கு” “அப்படீன்னா.....”
“நீ என்ன வேணும்னு சொன்னாலும் தருவேன்” “எங்கே என்னை அவிழ்த்து விடு பார்ப்போம்” என்றவுடன் கட்டு தானாகவே அவிழ்கிறது. மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது பப்பி. “மந்திரச் சங்கே மந்திர சங்கே நான் ஒன்னு உன்கிட்ட கேட்கட்டுமா” “என்ன வேண்டுமானாலும் கேளு” என்னை தேன் சிட்டுவைப்போல் நீல நிறமாக மாற்ற முடியுமா? இவ்வளவுதானா இதோ இப்பொழுதே மாற்றுகிறேன் பார் என்று கூறி கருப்பாக இருந்த பப்பியை நீல நிறமாக மாற்றியது. நீல நிறமாக மாறிய தன்னை முழுவதும் பார்க்க ஆசைப்பட்டது பப்பி. “ஏ சங்கு எனக்கு ஒரு கண்ணாடி கொடுக்கிறியா? என்ன முழுசா பாக்கணும்னு ஆசையா இருக்கு” என்றது பப்பி. சொல்லி முடிப்பதற்குள் பப்பியின் முன்னாள் ஒரு பெரிய கண்ணாடி வந்து நிற்கிறது. அதில் தன் நீல நிறமாய் மாறிப்போன அழகைப் பார்த்து ஆஹா.... ஆஹா... என்று மகிழ்ந்தது. அந்த நேரத்தில் நீல நிற தேன் சிட்டு ஒன்று அந்த கொன்றை மலர் மலர்ந்திருக்கும் மரத்திற்கு வந்தது. பப்பி தான் நீல நிறமாக மாறி இருப்பதைக் காட்ட வேண்டி அந்த தேன் சிட்டு பார்க்கும்படி அங்கும் இங்கும் நகர்ந்து தம்மை காணும்படி நகர்ந்து நகர்ந்து நிற்கிறது.
அப்போது, அந்த தேன் சிட்டு யாருடா இது? என்று கீழே பார்க்கிறது. பப்பியைப் பார்த்த அதிர்ச்சியில் தேன்சிட்டு பறக்கவே முடியாமல் பயத்தில் திண்டாடுகிறது. எப்படியோ அங்கிருந்து வேகமாய் பறந்து விடுகிறது. தேன் சிட்டு தன்னை யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் பயந்து கொண்டு வேகமாகப் பறந்து போனதில் பப்பிக்கு மிகுந்த வருத்தம். சங்கிடம் என்ன பார்த்தா பயமாகவா இருக்கு? ம் .... இப்படி ஓடிப் போச்சே என்று மிகவும் கவலைப்பட்டது. அந்த நேரம் பார்த்து பசியும் பப்பியை வாட்டியது. சாப்பிட ஏதாவது இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்த போது .... சங்கு சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்றது. என்ன வேண்டுமானாலும் கேள். இப்பொழுதே தருகிறேன் என்றது. “நிஜமாகவா சொல்ற” “ம்.....கேளு”
லெக்பீஸ் வேணும் தர முடியுமா? உடனே ஒரு தட்டு நிறைய லெக் பீஸ் பப்பியின் முன்னால் வந்து விடுகிறது. பப்பிக்குப் பயங்கர சந்தோஷம். என்னடா, என்ன நடக்குது இங்கு என ஆச்சரியப்பட்டு போனது. சந்தோஷமா சாப்பிட்டுக் கொண்டி ருந்த பொழுது பப்பியின் முதலாளி ராதாமா பப்பிக்கு உணவு கொடுக்கச் சென்றாள். ராதாமாவைக் கண்டவுடன் பப்பி துள்ளிக் குதித்து லொள்... லொள்.... என்று குரைத்துக் கொண்டு அவளிடத்தில் ஓடியது. ஓடிவரும் பப்பியைப் பார்த்த ராதாமாவிற்கு மயக்கமே வருவது போல் ஆகிவிட்டது. உணவைத் தூக்கி வீசிவிட்டு அவளுடைய கால்கள் பிடரியில் வந்து படும்படி வேகமாக வீட்டிற்குள் ஓடி தாழிட்டுக் கொண்டாள். பப்பி எவ்வளவு முயற்சி செய்தும் கதவு திறக்கவே இல்லை. நீல நிறமாக மாறிய தகவல் அலைபேசி வழியாக ராதாமா மூலம் ஊரெங்கும் தீயாய் பரவியது.
அந்த நேரம் பார்த்து பப்பியின் பக்கத்து வீட்டு நண்பனும் பப்பியைக் கண்டு பயந்து ஓடிவிட்டது. அந்த வீட்டுக் குழந்தை நிலவழகிக்கு பப்பியை மிகவும் பிடிக்கும். நண்பர்களோடு ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த நிலவழகி பப்பி குரைத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு கட்டி அணைத்துக் கொஞ்சலாம் என பப்பி அருகில் ஓடினாள். ஓடிய வேகத்தில் திரும்பி வந்த நிலவழகி பப்பிக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்கிறாள். பப்பிக்கு அப்பொழுது ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது. என் மீது மிகுந்த அன்பு செலுத்திய நிலவழகியே என்னை கண்டு பயந்து ஓடிவிட்டாள். தான் செய்தது சரியான முட்டாள்தனம். ச்சே.... தனக்கு இந்த நீல நிறமே வேண்டாம் என முடிவு செய்தது. நிறத்தில் என்ன இருக்கு எல்லாம் நம் மனசு தான் காரணம் என்று பப்பி நினைத்துக் கொண்டது. பப்பி மந்திரச் சங்கிடம், “மந்திரச்சங்கே மந்திரச்சங்கே. தயவு செய்து என்னை பழையபடி கருப்பாகவே மாத்தி விடு. யாருக்குமே என்னை அடையாளம் தெரியல. என் நண்பனே என்னைக் கண்டு பயந்து ஓடுகிறான். என் மீது ஆசை வைத்த நிலவழகியே பயந்து நடுங்குகிறாள். அதனால எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. வேண்டவே வேண்டாம் அந்த நீல நிறம் . எனக்கு என் நிறமே போதும்” என்று பப்பி புலம்பிக் கொண்டிருந்தபோது பப்பியை பழையபடி மாற்றி விடுகிறது மந்திரச் சங்கு.
பப்பி எப்போதும் போல கருப்பு நிறமாகப் படுத்துக் கொண்டிருக்கிறது. வீட்டுக்காரர் அம்மாவிற்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. என்னடா கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீல நிறமா பார்த்தேன். இப்ப எப்பயும் போல கருப்பா படுத்துகிட்டு இருக்கேனு என்று ஆச்சரியப்பட்டாள். அவள் கண்களைத் தேய்த்து விட்டு கூர்ந்துப் பார்க்கிறாள். நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தானே பப்பியை நீல நிறமாகப் பார்த்தேன். என்னவானது என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு பப்பியை அதன் வீட்டுக்குள் கொண்டு விடுகிறாள். பப்பியோ மந்திரச் சங்கை மரத்தடியில் விட்டுவிட்டு வந்து விட்டோமே என்று வருந்துகிறது. நாளை மீண்டும் மரத்தடியில் கட்டி வைக்கும் போது அதனுடன் பேசிக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டது. காலையில் பப்பிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மரத்தடியில் இருந்த மணலை வீடு கட்ட அள்ளிக் கொண்டு போய் விட்டார்கள். பப்பிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பப்பி மீண்டும் மண்ணை பறிக்கத் தொடங்கியது. அதனுடைய காலில் மாயச் சங்கை போல் ஏதோ ஒன்று மீண்டும் தட்டப்பட்டது.
அது என்னவா இருக்கும் ...?
ஆமாம் அது என்னவா இருக்கும்...?