articles

img

வேருக்கும் நீருக்கும் நன்றி சொல்லி திசை தோறும் கிளை பரப்பும் தீக்கதிர் - மதுக்கூர் இராமலிங்கம்

புரட்சிக்கான இந்தியப் பாதை எது என்பது குறித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கடுமையான விவாதங்கள் வெடித்துக் கிளம்பி நடந்து கொண்டிருந்த காலம் அது. பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களின் கருத்துக்க ளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஏடு ஒன்றை துவக்குவதென முடிவு செய்யப்பட்டது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான தோழர் எல்.அப்பு என்ற அற்புதசாமியை ஆசிரி யராகக் கொண்டு தீக்கதிர் ஏடு துவக்கப்பட்டது. சிறுவாணி நதிக்கரையோரம் அமைந்துள்ள கோவையின் தொழிலாளர்கள் உண்டியல் மூலம் நிதி திரட்டி தீக்கதிருக்கான முதலை சிறு வாட்டுக் காசு போல திரட்டிக் கொடுத்தனர். 1963 ஆம் ஆண்டு ஜுன் 29 அன்று தீக்கதிரின் முதல் ஏடு சென்னையிலிருந்து அச்சிடப்பட்டு வெளியானது. மாமேதை லெனின் நடத்திய ‘இஸ்க்ரா’ ஏட்டின் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘தீப்பொறி’ என்ற  பெயர் கேட்கப்பட்டது. ஆனால் அந்தப் பெயரில் ஏற்கெனவே ஒரு பத்திரிகை பதிவு செய்யப்பட்டி ருந்ததால் தீக்கதிர் என்ற பெயரை கேட்பது என்றும் அதுவும் கிடைக்கவில்லை என்றால், தீச்சுடர் என்ற பெயரை கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தீக்கதிர் என்ற பெயர் கிடைத்தது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆண்டவர் நகரில் அமைந்திருந்த கட்டடம் ஒன்றில் முதல் தீக்கதிர் அலுவலகம் செயல்பட்டது. நான்கு பக்கங்கள் கொண்ட ஏடு பத்து பைசா விலையில் முதன் முதலாக வெளியானது. மின்சாரம் வசதி இல்லாத எந்திரத்தில் காலால் மிதித்து ஒவ்வொரு பக்கமாக அச்சிடப்பட்டு நான்கு பக்கங்களுடன் வார ஏடாக முதன் முதலில் தீக்கதிர் வெளியானது. தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், வி.பி.சிந்தன், கே.முத்தையா ஆகியோர் புனைபெயரில் கட்டு ரைகளை எழுதினர். ஆசிரியர் குழுவிற்கு தோழர் என்.சங்கரய்யாவும், நிர்வாகத்திற்கு தோழர் வி.பி.சிந்தனும் பொறுப்பாக இருந்தனர். பின்னர் சென்னை சைதாப்பேட்டையில் சத்யநாராயணன் நடத்தி வந்த கீதா அச்சகத்தில் சிலிண்டர் மிஷினில் தீக்கதிர் அச்சிடப்பட்டது. தீக்கதிரின் விலையும் பக்கங்களும் அதிகரிக் கப்பட்டன. சைதாப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தின் ஒரு சிறு அறையில் தீக்கதிர் அலுவலகம் செயல்பட்டது.  அப்புவைத் தொடர்ந்து எம்.என்.ராவுண்ணி ஆசிரியராகச் செயல்பட்டார். 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. அப்போது முதல் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கியது. 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம்தேதி கம்யூனிஸ்ட் வார ஏடு என்ற குறிப்புடன் என்.சங்கரய்யாவை ஆசிரியராகக் கொண்டு தீக்கதிர் வெளிவந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தீக்கதிரை அச்சிட்டுக் கொடுத்த ஒரே காரணத்திற்காக கட்சி உறுப்பினர் அல்லாத போதும் சத்யநாராய ணனும் கைது செய்யப்பட்டார். 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடை பெறவிருந்த நிலையில் சிலிண்டர் எந்திரம் ஒன்றை விலைக்கு வாங்கி தீக்கதிர் சொந்த மிஷினில் முதன்முறையாக அச்சிடப்பட்டது. தீக்கதிர் ஆசிரியராக தோழர் கே.முத்தையா நியமிக்கப்பட்டார்.  1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்டது. வடக்கு சித்திரை வீதி முதலாம் சந்தில் வாடகைக் கட்டிடம் ஒன்றின் மாடியில் மாநிலக்குழு அலுவலகமும், கீழ்ப்பகுதியில் தீக்கதிர் அலுவலகமும் செயல்பட்டது. 1971ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது நான்கு பக்கங்களுடன் தீக்கதிர் நாளேடாக சில காலம் வெளிவந்தது.  1973ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாளேடாக வெளிவரத் துவங்கியது. அதே ஆண்டில் புறவழிச்சாலையில் உள்ள இடம் தீக்கதிர் அலுவலகத்திற்கென்று விலைக்கு வாங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி மதுரை புறவழிச்சாலை தீக்கதிர் அலு வலகத்தை தோழர் பி.ராமமூர்த்தி திறந்து வைத் தார். இதே இடத்தில் கட்சியின் மாநிலக்குழு அலு வலகமும் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

1973ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தொடர்ந்து நாளேடாக தீக்கதிர் வெளிவந்து கொண்டிருப்பது ஒரு மகத்தான சாதனையாகும். 1975ஆம் ஆண்டு அவசரநிலைக் காலம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடுமையான அடக்கு முறைக்கு தீக்கதிர் நாளேடும் உள்ளானது. 1987ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் புதிய வெப் ஆப்செட் இயந்திரத்தை கேரள முதல்வராக இருந்த இ.கே.நாயனார் தொடங்கி வைத்தார். 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொடூர மாக கொல்லப்பட்ட போது எவ்விதக் காரண மும் இல்லாமல் மதுரை தீக்கதிர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அன்றும் கூட எரிந்த பேப்பர் ரீல்களைக் கொண்டு தீக்கதிர் அச்சிடப் பட்டு வெளியானது என்பது தோழர்களின் நெஞ்சுரத்திற்கு சாட்சி சொல்வதாகும். 1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி சென்னை பதிப்பை தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் துவக்கி வைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதல் இதழை பெற்றுக் கொண்டார்.

2007ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி கோவை பதிப்பு துவங்கப்பட்டது. முதல் இதழை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் பிரகாஷ் காரத் வெளியிட கட்சியின் மாநிலச் செயலா ளர் என்.வரதராஜன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம்தேதி திருச்சி பதிப்பு துவங்கப்பட்டது. முதல் இதழை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட முதல் இதழை முதுபெரும் தலைவர்கள் ஆர்.உமாநாத், கே.வரதராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தீக்கதிர் இ-பதிப்பை 2012 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் பிரகாஷ் காரத் வெளியிட்டார்.  தீக்கதிரின் எண்மப் பதிப்பு 2015 ஆம் ஆண்டு முதல் வெளிவரத் துவங்கியது. அச்சுப் பதிப்பு மற்றும் எண்மப் பதிப்புகள் மட்டுமின்றி, தீக்கதிர் செயலி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டுவிட்டர்), கூகுள் ஆப், யூடியுப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் தீக்கதிர் வெளிவந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகைகளை அச்சிட்டு அனுப்ப முடியாத நிலையில், தினந்தோறும் தீக்கதிரை வடிவ மைத்து எண்மப் பதிப்பாக வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திலும் கூட தீக்கதிர் தனது பணியை ஒருநாள் கூட நிறுத்தவில்லை.  ஒருமுறை மதுரை தீக்கதிர் அலுவலகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. ஒருமுறை தீ விபத்துக்கு அலுவலகம் உள்ளானது. அன்றைய நாட்களிலும்கூட தீக்கதிர் அச்சிடப் பட்டு வெளியானது என்பது தீக்கதிரோடு தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றும் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு சாட்சியம் கூறுவதாகும். 1993ஆம் ஆண்டு தீக்கதிர் 30ஆம் ஆண்டு விழா மதுரையில் கோலாகலமாக நடை பெற்றது. 2013ஆம் ஆண்டு தீக்கதிர் பொன்விழா  திருவாரூரில் துவங்கி மதுரையில் நிறைவு பெற்றது. தீக்கதிர் வைரவிழா மதுரை அலுவல கத்திலும், கோவையிலும் மிகச் சிறப்பாக நடை பெற்றது. கோவை சிறுவாணி நதிக்கரைத் தொழிலா ளர்கள் தந்த முதலீட்டுடன், கூவம் ஆற்றின் சென்னையில் துவங்கி, வைகை நதிக்கரை மதுரைக்கு இடம்பெயர்ந்து, மீண்டும் கூவம் நதிக்கரையில் ஒரு பதிப்பினை துவங்கி, சிறு வாணி நதிக்கரை கோவையில் ஒரு பதிப்பினை துவங்கி காவிரிக் கரையின் திருச்சியில் ஒரு பதிப்பினை துவங்கி தற்போது தாமிரபரணிக் கரையில் தடம்பதித்து முன்னேறி வந்துள்ளது தீக்கதிர் ஏடு.

அரசியல் கட்சிகள் நடத்துகிற பத்திரிகையில் இத்தனை பதிப்புகளோடு வெளிவரும் ஒரே ஏடு, தீக்கதிரே என்பதை தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்ள முடியும். இந்த சரித்திர சாதனையை சாத்தியமாக்கியது தீக்கதிருக்கு நீராக இருக்கும் வாசகர்களே ஆகும். அந்த நீரை கொண்டு வந்து சேர்க்கும் வேராக விளங்குகிற முகவர்கள் துவங்கி, தீக்கதிரின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் தோழர்களே இந்த பெருமைமிகு பணியை அயர்வில்லாமல் செய்து வந்துள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசம், ஜனநாய கம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மாநில உரி மைகள், பெண்ணுரிமை, மனித உரிமைகள், தொழிலாளர், விவசாயிகளின்  வர்க்கப் போராட் டங்கள், தீண்டாமைக்கு எதிரான களப்போராட் டங்கள் என தீக்கதிர் உழைக்கும் வர்க்க கண்ணோட் டத்தோடு முன்பின் முரணின்றி சமரசத்திற்கு இடம் தராமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் என்ற பெயரில் வளைக்க முயன்ற போதும் அதற்கு இடம்தராமல் உழைக்கும் மக்களின் பக்கமே நின்று வருகிறது தீக்கதிர். தீக்கதிர் அலுவலகத்தில் 1970ஆம் ஆண்டு துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய மாத ஏடு பொன் விழா கண்ட பெருமிதத்தோடு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தும் உயரிய நோக்கத்தோடு எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கின்ற சோசலிச பொன்னு லகை படைக்கும் லட்சியப் படைவீரனாக செயல் படும் தீக்கதிர் தனது இலக்கை நோக்கி முன்னே றிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண் டுள்ள அனைவருக்கும் நன்றி சொல்லி திசை கள் தோறும் தீக்கதிர் தனது கிளைகளைப் பரப்ப உறுதி கொள்கிறது.