articles

img

அக்னி பாதையா? போராட்டப் பாதையா? - தொகுப்பு: அ.மாரிமுத்து

நான்காண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று நான்காவது நாளாக 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பீகாரில் முழு அடைப்பு நடைபெற்றதுடன், பாஜக ஆளும் உ.பி., ஹரியானா மாநிலங்களிலும், முதன்முறையாக கேரளத்திலும் இளைஞர்கள் மோடி அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்தனர். ராணுவப் பணியை லட்சியமாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள், அந்த லட்சியத்தை நரேந்திர மோடி அரசு அவர்களின் கண் முன்னாலேயே சுக்குநூறாக உடைத்து நொறுக்கியதைப் பொறுக்க முடியாமல் வீதிகளில் குவிந்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான நிலையில், ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபகரமான முறையில் தூக்குப் போட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

போராட்ட அலை

வெள்ளியன்று பீகார் மாநிலத்தில் லக்கிசராய், சமஸ்திபூர் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களுக்கும் போராட்டக்காரா்கள் தீ வைத்தனர். பேத்தியா நகரில் ரயில் என்ஜினுக்கு தீ வைக்கப்பட்டது. பாட்னாவை அடுத்த தீதா்கஞ்சில் உள்ள சுங்கச் சாவடியும், நவாடாவில் போலீஸ் வாகனம் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா நகரில் ரயிலுக்குத் தீவைத்த இளைஞா்கள், மேலும் சில ரயில்களை சேதப்படுத்தினர். வாரணாசி, பெரோஸாபாத், அமேதி நகரங்களில் அரசுப் பேருந்துகளும் இதர பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. போராட்டம் காரணமாக பல்லியாவில் 2 மாதங்களுக்கு ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள லட்சுமிபாய் நகர் ரயில் நிலையத்தில் 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவா்களில் சிலா் ரயில்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். 

ஹரியானாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் ஆங்காங்கே டயர்களைக் கொளுத்தினர். சிலர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பரீதாபாத் மாவட்டத்தில் கைப்பேசி இணைய சேவை, குறுந்தகவல் சேவை நிறுத்தப்பட்டது. பல்வல் மாவட்டத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது அங்குள்ள பாஜக அரசு வழக்கு பதிவு செய்தது. தெலுங்கானா மாநிலம், செகந்திராபாதில் உள்ள ரயில் நிலையத்தில் திரண்ட 300-க்கும் மேற்பட்டோர் பயணிகள் ரயிலுக்குத் தீ வைத்தனர். அப்போது கூட்டத்தைக் கலைக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். 12 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த ஏராளமானோர், ஜோத்பூர், சிகார், ஜெய்ப்பூா், அஜ்மீர், ஜுன்ஜுனு ஆகிய மாவட்டங்களில் ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியினருடன் (ஆா்எல்பி) இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூரில் நடந்த போராட்டத்தில் ஆர்எல்பி எம்.பி. ஹனுமான் பெனிவால் கலந்து கொண்டார். ஒட்டுமொத்தமாக பீகாரில் 2 ரயில்கள், உத்தரப் பிரதேசம், தெலங்கானாவில் தலா ஒரு ரயில் என வெள்ளிக்கிழமையன்று 4 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.

15 மாநிலங்களில்  வெடித்த போராட்டம்

பீகாரில் துவங்கிய போராட்டம், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கேரளா என நாடு முழுவதும் 14-க்கும் அதிகமான மாநிலங்களில் தற்போது கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் காண்ட்ராக்ட் திட்டத்தால் அதிருப்தியடைந்த இளைஞர்கள், அந்த அதிருப்தியை, கோபத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல், ரயில்களையும், ரயில் நிலையங்களையும் குறிவைத்து, அவற்றுக்கு தீவைக்கும் சம்பவங்களில் இறங்கியுள்ளனர்.

பாஜக தலைவர்களின் வீடு, அலுவலகங்கள் மீது தாக்குதல்

போராடும் இளைஞர்கள், ஒன்றிய ஆளும் பாஜக அரசு மீதான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர். பீகாரில் பாஜகவைச் சேர்ந்த அம்மாநிலத் துணை முதல்வர் ரேணு தேவி, பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடுகள் தாக்கப்பட்டன. சபாராவில் பாஜக எம்எல்ஏ சி.என். குப்தாவின் வீடு சூறையாடப்பட்டது. வாசிசாலிகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ அருணாதேவி காரில் சென்றபோது, அவரது கார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் எம்எல்ஏ, கார் ஓட்டுநர்,  2 பாதுகாவலர்கள், 2 உதவியாளர்கள் காயமடைந்தனர். நவாடா அருகே உள்ள பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டது.

12 ரயில்கள் தீக்கிரை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 214 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், 300-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆதரவு

இளைஞர்களின் கோபத்தில் நியாயம் உள்ளதாகவும், ‘அக்னிபாத்’ திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளான - மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா, லெப்டினன்ட் ஜெனரலான வினோத் பாட்டியா, லெப்டினண்ட் ஜெனரல் பி.ஆர். சங்கர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். “ராணுவத்தில் காண்ட்ராக்ட் அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு, நாட்டிற்கே ஆபத்து; அது ராணுவக் கட்டமைப்பைக் குலைப்பதுடன், ஒட்டுமொத்த சமூகத்தையும் ராணுவமயமாக்கும் ஆபத்து உள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில், பணத்தை சேமிப்பதற்காக தயவு செய்து, நமது ராணுவ கட்டமைப்புகளை (Let’s not destory our instutions) அழித்து விடாதீர்கள்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒன்றிய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங்கும், “இந்தத் திட்டத்தை வகுப்பதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும், அதைப் பற்றி தனக்கு அதிகம் தெரியாது. இது களத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே விஷயங்கள் தெளிவாகும்” என்று மறைமுகமாக தனது அதிருப்தியை வெளியிட்டார்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் சவுத்ரி ஜெயந்த் சிங், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, பாஜக கூட்டணியிலிருக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், மூத்த தலைவர் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் அவாம் ஆகியோரும் ‘அக்னிபாத்’ திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கூட்டணி கட்சிகளும் அதிருப்தி

‘‘அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இப்புதிய திட்டத்தால் இளைஞா்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு வாக்குறுதி அளிக்க வேண்டும்’’ என்று நிதிஷ்குமாரும், ‘‘அக்னிபாத் திட்டம் காரணமாக, பீகார் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் அதிருப்தி, விரக்தி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்பு உடன் தொடர்புடையது” என்று ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கூறினர். இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவர் அவாம் கூறுகையில், “அக்னிபாத் திட்டம் நாட்டிற்கும், இளைஞர்களுக்கும் ஆபத்தானது, எனவே உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். பழைய முறையைப் பின்பற்றுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.

வயது வரம்பு தளர்வு

அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு முன்பு 17.5 முதல் 21 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மட்டும் 2 ஆண்டுகள் உயர்த்தி 23 வயது வரை ராணுவத்தில் சேரலாம் என்று மாற்றியமைத்தது. “அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனக்குத்தானே கைதட்டிக் கொண்டார்.

சமாதானம் அடையாத இளைஞர்கள் 

வயது வரம்பு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், இளைஞர்கள் சமாதானம் அடைவதாக இல்லை. இத்திட்டத்தையே கைவிட வேண்டும் என்று தங்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று நான்காவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்தன. பீகார் மாநிலத்தில் பந்த் நடைபெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. பஞ்சாப் மாநிலத்தில் ரயில் நிலையமே சூறையாடப்பட்டது. முதன்முறையாக, கேரள மாநிலத்திலும் சனிக்கிழமையன்று அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரத்திலுள்ள தம்பனூரிலிருந்து ஆளுநர் மாளிகை வரை 500 பேர் கலந்துகொண்ட பேரணி நடத்தப்பட்டது. கோழிகோட் ரயில் நிலையம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திருவனந்தபுரத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த சுற்றுக்காகக் காத்திருப்பவர்கள். 6 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வினை விரைவில் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரோசாபாத், அலிகார், வாராணசி மற்றும் கவுதம் புத்த நகர் மாவட்டங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக, பல்லியாவைச் சேர்ந்த 109 பேர், மதுராவைச் சேர்ந்த 70 பேர், அலிகாரைச் சேர்ந்த 31 பேர், வாரணாசியைச் சேர்ந்த 27 பேர், கவுதம் புத்தர் நகரைச் சேர்ந்த 15 பேர் என 260 பேரை உ.பி. பாஜக அரசு கைது செய்தது.

தளபதிகளுடன்  ராஜ்நாத் சிங் ஆய்வு

நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமையன்று முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடற்படைத் தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆயுதப் படைகளில்  10 சதவிகித ஒதுக்கீடு

‘அக்னிபாத்’ திட்டத்தின் கீழ் நான்காண்டு பணிமுடித்து வெளியேவரும் வீரர்களுக்கு, மத்திய ஆயுதக் காவல் படைகள், (Central Armed Police Force - CAPF) மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸில் (ASSAM RIFLES) 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.  மேலும், சிஏபிஎப் (CAPF) மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்புக்காக ‘அக்னி வீரர்’களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி மூன்று ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். அதிலும், அக்னிபாத் திட்டத்தின் முதல் பேட்ஜ் வீரர்களுக்கு மட்டும் ஆயுதப் படைகளில் சேருவதற்கு 5 வயது வரை வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இளைஞர்கள் போராட்டம் தணிக்கும் இந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

“அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், இந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்; ரயில்வே உள்பட பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும்; அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஆய்வு நடத்த, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆதரவாளர்கள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

 


 

;