தில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையினரால், கைது செய்யப்பட்டிருப்பது, இந்தியாவில் ஜனநாயகம் தொடர்ந்து அரிக்கப்பட்டுவந்ததில் ஒரு திருப்புமுனையாகும். ஜனநாயக அமைப்பின் மீது வெட்கக்கேடான முறையில் இவ்வாறு தாக்குதல் தொடுத்திருப்பது பல விதங்களிலும் முதலாவதாகும்.
நடத்தை விதி அமலுக்குப் பின் முதல் முறை
சட்டமன்றத்தில் உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கும் மேல் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு கட்சியின் முதல்வர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னே அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் இதுவே முதன்முறையாகும். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின்னர் இத்தகையதொரு கைது நடைபெற்றிருப்பதும் இதுவே முதன்முறையாகும். அரசு எந்திரத்தின் பல கருவிகளையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆளும் பாஜக நினைக்கிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து தாக்கிட ஒன்றிய அரசின்கீழ் இயங்கிவரும் புலனாய்வு முகமைகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், அமலாக்கத்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டார். இதற்கு முன்னதாக தில்லி மாநில அரசின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, சுமார் ஓராண்டு காலம் சிறையில் இருக்கிறார்.
பாஜகவுக்கு தாவ அச்சுறுத்தல் மிரட்டல்...
இதேபோன்று பாஜக அல்லாத மாநில அரசுகளைச் சேர்ந்த பல தலைவர்களும், அமைச்சர்களும் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் புலனாய்வு முகமைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவற்றின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த புலனாய்வு முகமைகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜக-விற்குத் தாவ வேண்டும் என்பதற்காக பல வடிவங்களில் அச்சுறுத்தப்படுவதற்காக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் விவரங்கள் வெளிவந்தபின்னர், அமலாக்கத் துறையின் அசிங்கமான பங்களிப்பும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் சம்பந்தப்படுத்தப்பட்டு, ஒரு மருந்துக் கம்பெனியின் மேலாண் இயக்குநரை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது. இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின் 2022 நவம்பரில் அரபிந்தோ ஃபார்மா என்னும் மருந்துக் கம்பெனியைச் சேர்ந்த சரத் சந்திரா ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக-விற்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார்.
அப்ரூவராக்கி வழக்கு ஜோடிப்பு
அதன்பின்னர் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்கில் அப்ரூவர் ஆகி இருக்கிறார். அதன்பின்னர் நான்கு மாதங்கள் கழித்து, பாஜக-விற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, எப்படியெல்லாம் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் வழக்குகள் ஜோடிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
வங்கிக் கணக்குகள் முடக்கம்
இவ்வாறாக எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத் துறையினரும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தினரும் வலுக்கட்டாய நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்க்கட்சிகள் அவற்றின் நிதி சம்பந்தமாக, வருமான வரித் துறையினரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டு வருகின்றன. நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு 2018-19இற்கான நிதியாண்டில், சுமார் 135 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை இந்தத் தொகையை வசூலிப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் சிபிஎம் வழக்கு
இதேபோன்றே இதர எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2016-17ஆம் ஆண்டுக்கு வரி விதிப்பிலிருந்து அளிக்கப்பட்டிருந்த சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டு, நாடு முழுதும் கட்சிக்கு இருந்து வரும் நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் முழுமையாக அளிக்கப்படவில்லை என்று கூறி 15 கோடியே 59 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால் இந்தப் பிரச்சனையில் இதற்குமேல் இப்போது நாம் எதுவும் சொல்ல முடியாது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சட்டப்பூர்வமாக நிதி வருவதை முடக்கியதோடு மட்டுமல்லாமல், தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் மூலம் கார்ப்பரேட்டுகள் அளிக்கும் நன்கொடைகள் தனக்கே வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தையும் மாற்றியமைத்த பின்னர், இப்போது மோடி அரசாங்கம் எதிர்க்கட்சிகள் வரி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டன என்று குற்றஞ்சாட்டி அவற்றின் கழுத்தை நெரிக்கும் வேலையிலும் பாஜக இறங்கி இருக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது தாக்குதல்களை படிப்படியாக மேற்கொண்ட பின்னர், கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது இப்போது நடந்திருக்கிறது, எதிர்க்கட்சிகளைத் தாக்கியதுபோன்றே, கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் எதிர்க்கட்சிகள் தலைமையில் இயங்கும் அரசாங்கங்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது பார்க்கப்பட வேண்டும்.
கண்டுகொள்ள மறுக்கும் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள்
பாஜக தாங்கள் ஒரு ஜனநாயக அமைப்பு போல செயல்பட்டுவந்த முகமூடி எல்லாம் கலைக்கப்பட்டுவிட்டது. கொடுங்கோன்மை ஆட்சியாளர்கள், தங்கள் தேர்தல் எதேச்சதிகாரத்தை நிறுவி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்கள் கட்டளைகளுக் கேற்ற விதத்தில் ஆடிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களும் மதவெறியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசாங்கத்தை எதிர்கொள்ள மறுத்து வருகின்றன.
நாடு முழுவதும் போராட வழிகாட்டும் கேரளம்
மார்ச் 31 அன்றைய தினம் இந்தியா கூட்டணி சார்பில் தில்லி, நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பரவ வேண்டும். மாநிலம் முழுவதும் வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வழியை கேரளம் காட்டி இருக்கிறது. இவ்வாறு கிளர்ச்சிப் போராட்டங்கள் நாடு முழுதும் நடத்தப்பட வேண்டும். இத்தகைய மக்கள் திரளின் போராட்டங்களும், வெகுஜனப் பிரச்சாரங்களும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு மக்களை அணிதிரட்டுவது என்பது பாஜக-வை நிச்சயமாகக் கடுமையாகப் பாதித்திடும்.
மார்ச் 27, 2024
- தமிழில்: ச.வீரமணி