தோழர் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் திருவிக அவர்கள். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ராமாயணத்தில் குகப்படலம் பாடல் 2405-ல் “ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ வேழ நேடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ ஏழைமை வேடன் இறந்திலன் என்றென்னை ஏசாரோ” என்ற பாடலின் வரிகள்தான் தோழரைத் தந்தது என்று சொல்கிறார். 1918 ஆம் ஆண்டு பல தொழிற்சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். குறிப்பாக காவல்துறைக்கு முதன் முதலாக தொழிற்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தார். 1921 ஆம் ஆண்டு சென்னை சூளையில் இருந்த நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறந்தனர் பலர் காயமுற்றனர்.
ஆனாலும் பிரச்சனை முடிவுக்கு வராமல் ஆறுமாதம் வரை நடைபெற்றது. இதனால் அப்போதைய கவர்னர் வெலிங்டன், திருவிக அவர்களை அழைத்து, பிரச்சனைகளுக்கு காரணம் நீங்கள் தான், உங்களை நாடுகடத்துவேன் என்று எச்சரித்தார். அதற்கு திருவிக சொன்னார்! எல்லாவற்றுக்கும் எல்லோ ருக்கும் ஒருநியாயத் தீர்ப்பு நாள் இருக்கிறது. அது உங்களுக்கும் பொருந்தும்” என்று கவர்னரை எதிர்த்து பேசினார். இப்பிரச்சனையில் நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராசர் தலையிட்டு நாடு கடத்தும் முடிவை தடுத்து நிறுத்தினார். திருவிக அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழக மேடைகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் இதய நேசிப்பிற்குரியவராக திருவிக அவர்கள் இருந்தார். காந்தியின் ஆங்கில உரையை தமிழ் மொழியில் சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பு செய்து பாராட்டைப் பெற்றார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சமரச சன்மார்க்க கூட்டத்தில் தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திருவிக இருவரும் இணைந்து பேசியதன் கருத்தியலே இந்த மண்ணில் சுயமரியாதை இயக்கம் உதயமானது என்று கூறும் திருவிக, சுயமரியாதை இயக்கத்தின் தந்தை பெரி யார் என்றால், நான் அதன் தாய், எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சுயமரியாதை என்று சொல்கிறார். 1933 ஆம் ஆண்டு கோவை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் மாவீரர் லெனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். தமிழகத்தின் மேடைகளில் ஆங்கிலத்தில் பேசுவது தான் நாகரிகம் என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து தமிழால் அரசியலை, அறிவியலை, ஆன்மீகத்தையும், உலக வரலாற்றையும் பேசமுடியும் என்று சாதித்து காட்டிய சாதனையாளர் திருவிக அவர்கள்.
- மல்லை சி.ஏ.சத்யா, மதிமுக துணை பொதுச் செயலாளர், மல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர்
இன்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. பிறந்த நாள்