articles

img

சாதிய சமூகத்தின் நீட்சியாக கல்வி நிலையங்கள் மாறக்கூடாது! - கே.சாமுவேல்ராஜ்

பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் சாதி மற்றும் குறுகிய சமூக உணர்வுகளின் அடிப்படையிலான வன்முறையைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் வழிகாட்டல்கள் வழங்கிட, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு  தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது; அந்த ஆணையம் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய கல்வி வளாகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரைகளாகவே இதனைக் கருத வேண்டியதுள்ளது. எனவே முதலில் ஆணையம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

பாடத்திட்டம்

1.    கள்ளர் மீட்பு மற்றும் “ஆதி திராவிடர் நலன்” என்ற பெயர்களை நீக்குதல்; அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள சாதி முன்னொட்டு அல்லது பின்னொட்டை நீக்குதல்.
2.    அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.
3.    உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும்.கல்வி அதிகாரிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அப்பகுதியில்   ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களைச் சார்ந்தவராக இருக்கக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும்.
4.    ஆசிரியர்கள் பயிற்சியின் போதும்,பணி நியமனத்தின் போதும், பணிக்காலத்தின் போதும் பட்டியல் சமூகத்தினர் மீதான அவர்களின் அணுகுமுறைகள் மதிப்பிடப்பட வேண்டும்.     ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் சமூக நீதி,சாதி,பாலியல் பிரச்சனைகள், போதைப் பிரச்சனைகள், ராகிங்  குறித்த சட்டங்களில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தற்போதைய பாடத்திட்டத்தை  மறு ஆய்வு செய்ய வேண்டும்; குழந்தைகளுக்கான கல்வி நிபுணர் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தவறான கண்ணோட்டங்களை அகற்றி சமத்துவக் கருத்துக்களுடன் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
5  .பாடத்திட்டத்தில் (Curriculum) மாற்றம் செய்வதற்காக சமூக நீதி கண்காணிப்புக் குழுவை  அரசு நியமிக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம், சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாமை ஆகியவற்றை பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்த ஆலோசனைகளை கல்வியாளர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் கொண்ட இக்குழு வழங்கிட வேண்டும்.இதனை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.\

மாணவர் பேரவைத் தேர்தல்

6.    மாற்றுத்திறன் மாணவர்கள் இருப்பின் முன்வரிசை தரப்பட வேண்டும்.இதர அனைத்து மாணவர்களும் அகர வரிசைப்படி  தான் அமர வேண்டும்.
7.    வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் சாதி குறிப்பிடக்கூடாது.கல்வி ஊக்கத்தொகை போன்ற விபரங்கள் அலுவலகம் சார்ந்தே இருக்க வேண்டும் அவை வகுப்பறைக்கானதல்ல.மாணவரின் சாதியை வெளிப்படுத்தும் விதமாக எந்தவிதத்திலும் ஆசிரியர் நடந்து கொள்ளக்கூடாது.இதனை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாணவரின் சாதி பற்றிய விபரங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் பார்வையிடும் விதத்தில் தான் இருக்க வேண்டும்.
8.    மாணவர்களுக்கான ஒழுக்க விதிகள் உருவாக்கி, செயல்படுத்திடவேண்டும். கையில் கயிறு,  மோதிரம், பொட்டு  ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.  சைக்கிளில்  சாதியை வெளிப்படுத்தும் வண்ணங்கள் மற்றும் சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தல் கூடாது.    ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி கட்டாயமாக வழங்கிட வேண்டும்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் பேரவைகள் அமைக்க அனுமதித்து,தேர்தல்கள் மூலம் மாணவர் தலைவர்களைத் தேர்வு செய்து தலைமைப் பண்பை வளர்க்க வேண்டும்.
9.    மாநில பாடத்திட்டத்தின் படி இயங்குகிற பள்ளிகளில் மட்டுமல்லாமல், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ போன்ற பிற வாரியங்களின் பள்ளிகளிலும் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்தக் கூடாது.

இட ஒதுக்கீடு

10. ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டும் புத்தகத்தின் அடிப்படையிலான அறநெறி வகுப்புகள் வாரம் ஒருமுறை நடத்திட வேண்டும்.
11.    ஒன்றியத்திற்கு ஒரு ஆற்றுப்படுத்துநரை (Counsellor) நியமித்து, பள்ளிகளில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.அடையாளம் காணப்பட்ட மாணவர் எவரும் இருப்பின் அவரை கண்காணித்துதேவையெனில் பெற்றோர் ஒப்புதலுடன் சிகிச்சை அளிக்கலாம்.போதை போன்றவைகளுக்கும் அரசு செலவில் மறுவாழ்வு சிகிச்சை அளிக்க வேண்டும்.
12.மேல்நிலைப் பள்ளி அளவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் “பள்ளி நல அலுவலர்”(SWO) நியமிக்க வேண்டும். இரு பால் மாணவர்கள் எனில்  பாலினத்திற்கு ஒருவர் என இரண்டு அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.    ராகிங், போதை, பாலியல், தாக்குதல் மற்றும் சாதியப் பிரச்சனைகளை 
கண்காணித்து தீர்வு  காண வேண்டும். 500-க்கும் குறைவான மாணவர்கள்  உள்ள பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலர், ‘பள்ளி நல அலுவலராகச்’ செயல்பட வேண்டும். மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவிடம் இவர்கள் அறிக்கை அளிக்க வேண்டும்.இவர்களின் நியமனத் தகுதியை அரசு வரையறுக்க வேண்டும்.தேவை எனில் இவர்கள் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்யலாம்.
13.ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் பள்ளி நல அலுவலர் பரிந்துரைகள் செய்யலாம்.
14.மாணவர்கள் புகார் பெட்டியின் சாவி பள்ளி நல அலுவலரின் கையில் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது திறக்க வேண்டும். புகார் அளிக்கும் மாணவர் பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்பட வேண்டும். புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
15.  பள்ளி மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் உள்பட அனைத்துப் பாடப்பிரிவுகளிலும்  இட ஒதுக்கீட்டிற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

சமூக நீதி மாணவர் படை\

16.ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை நாட்டு நலப் பணித் திட்டத்தில் (NSS)  சேர்த்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரிவாக செயல்படுத்திட வேண்டும்.
17.சமூக நீதி மாணவர் படை என்ற ஒரு புதிய படையை உருவாக்கி ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாடு இன்றி இயக்கிட வேண்டும்.சாதி,மத பாகுபாடுகள் இன்றி அமைக்கப்பட்ட  இப்படை சமூகத் தீமைகளை 
ஒழிக்க பாடுபடும். அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கி கிராம அளவிலும் ஒன்றிய அளவிலும் சீருடையுடன் இப்படை செயல்படும்.    சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாதது போன்ற உயர்ந்த விழுமியங்களை இப்படை ஊக்குவிக்க வேண்டும்.
18.பள்ளிகளில் சமயலறைகள் என்பதற்கு மாறாக ஒன்றிய அளவில் சமயலறையில் உணவு தயாரித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விநியோகம் செய்திட வேண்டும்.
19.கல்வி நோக்கம் அல்லாத பிற நோக்கங்களுக்காக பள்ளி அரங்கு களை, அறைகளை, பொருட்களை பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும்.
20.சாதியப் பாகுபாடுகள் உள்ள பகுதிகளை கண்டறிவது, சாதிப் பாகுபாட்டைத் தூண்டும் நபர்களையும்,அமைப்புகளையும் அடையாளம் காண வேண்டும்.இதற்கு ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைக்கலாம். கல்வி காவிமயமாவது மற்றும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவது, சாதி மற்றும் மத நல்லிணக்கத்தை குலைப்பது தொடர்பான புகார்களை விசாரிக்க வல்லுநர் குழு அல்லது ஒரு முகமை நியமிக்கப்படலாம்.
21.மத நல்லிணக்கம் மற்றும் சாதி ஒழிப்புக்காக சமூக அளவில் பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- உடனடியான இப்பரிந்துரைகளோடு பின்வரும் நீண்டகால பரிந்துரைகளும்  சொல்லப்பட்டுள்ளது;
- வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரை உள்ளடக்கும் சமூக உள்ளடக்கக் கொள்கையை அமல்படுத்தவும், சாதிப் பாகுபாட்டை ஒழிக்கவும் பள்ளி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் வரை அனைத்து மாணவர்களையும் கையாளும் வகையில் தனிச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்; பாடத்திட்டம், வகுப்புகள் மற்றும் பொதுத் தேர்வுகள் தவிர பள்ளியின் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதிப் பெயர் வைப்பதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சொசைட்டிகள் பதிவுச் சட்டம் 1975 ல் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும்.
- இதுதான் நீதிபதி சந்துரு ஆணையப் பரிந்துரையின் சாராம்சம்.

பாஜகவின் பதற்றம்

மாணவர்கள்  கைகளில் கயிறு,நெற்றியில் பொட்டு,சைக்கிள் போன்ற உடமைகளில்  சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வண்ணங்கள் கூடாது என்று மேற்கண்ட பரிந்துரை  கூறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 441பள்ளிகளில் 664 மாணவர்களிடம் மேற்கொண்ட நேரடி கள ஆய்வுகளில், கயிறு, பொட்டு மட்டுமல்ல; டாலர், செயின், கடுக்கன், பச்சை குத்துதல், தொப்பி, சாதி அடையாளத்துடன்  தலைவர்கள் படம்,டீ சர்ட்டுகள்,உள் பனியன்கள் என்று இந்த பட்டியல் நீள்கிறது.இவை எல்லாம் எடுத்த எடுப்பிலேயே மாணவர்களை வெளிப்படையாகப் பாகுபடுத்துகிற அடையாளங்கள். ஆனால் இவற்றைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் படாத ஆர்.எஸ்.எஸ். பாஜக தலைவர்கள் நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று பரிந்துரைப்பது இந்துக்களுக்கு எதிரானது என்று கூப்பாடு போடுகிறார்கள். பாஜகவின் சென்னை மாமன்ற உறுப்பினர் உமா, ஆணையத்தின் அறிக்கையை கிழித்து வீசுகிறார். இவர்களின் பதற்றம் பொட்டு வைக்கக் கூடாது என்பதால் வந்ததல்ல; சாதியப் பாகுபாடுகளை ஒழிப்பதா என்பதால் வந்த பதற்றமாகவே தெரிகிறது.பொட்டு தான் உண்மையில் பிரச்சனை என்றால் அவர்கள் வேறு மாதிரி பேசியிருக்க முடியும்.பள்ளியின் சீருடை வண்ணத்தில் தான் ரிப்பன் கட்டப்படுகிறது; அது போலவே சீருடை வண்ணத்தில் பொட்டு வைக்கலாம் என்று அவர்கள் பேசியிருக்க முடியும்.அது சாதிக்கொரு வண்ணம் என்பதாகாது என வாதிட்டிருக்க முடியும்.ஆனால் அவர்களின் நோக்கம் அதுவல்ல.இதனைக் காரணமாக்கி ஒட்டு மொத்த அறிக்கையையே மறுதலித்து முடக்குவதே ஆகும்.

வரவேற்கத்தக்கவை

ஆசிரியர் பயிற்சி மற்றும் பணி நியமனத்தில் சமூக நீதி விழுமியங்கள் மதிப்பிடப்படுதல், வல்லுநர்களைக் கொண்டு சமத்துவக் கருத்துக்களுடன் பாடத்திட்டம், அகர வரிசையில் மாணவர்களின் இருக்கை, பள்ளிகளின் பெயரில் இருந்து சாதி ஒட்டு நீக்குதல், மாணவர் தலைவர் தேர்தல், அறநெறி வகுப்புகள், சமூக நீதி மாணவர் படை, பன்னிரண்டாம் வகுப்பின் அனைத்து பாடப்பிரிவுகளிலும் இடஒதுக்கீடு இவைகள் எல்லாம் பிற்போக்காளர்களின் தலையில் இடியென இறங்கியிருக்கிறது எனில், அதில் விதிவிலக்காக பாஜக இருக்க முடியாதே! கல்வி உதவித் தொகை போன்றவைகளுக்காக மாணவர்களின் சாதி தேவைப்படுகிறது. ஆனால் அது வருகைப் பதிவேடு வரை வரக்கூடாது என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வில் எண்ணற்றவர்கள் குறிப்பிட்டார்கள். அதனை ஆணையம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. பள்ளி நல அலுவலர், புகார் பெட்டியை கையாளுதல், பிற நோக்கங்களுக்காக பள்ளியை பயன்படுத்தக்கூடாது- குறிப்பாக வகுப்புவாத அல்லது சாதி தொடர்பான நிகழ்வுகள், அணி வகுப்புகள் போன்றவை குற்றமாக கருதப்படும், கல்வி காவிமயமாவது மற்றும் கல்வி நிறுவனங்களை ஊடுருவுவது, சாதி மற்றும் மத நல்லிணக்கத்தை குலைப்பது தொடர்பான புகார்களை விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் - என்பவை  மிக முக்கியமான பரிந்துரைகள் ஆகும். நீண்டகால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கும் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளிடம் பள்ளி நிர்வாகம் என்பவையும் குறிப்பிடத்தக்கவையே! இவற்றை உறுதிப்பாட்டுடன் நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.\

சாத்தியமற்றது

அதேநேரத்தில் ஏற்க முடியாத - பொருத்தமில்லாத  பரிந்துரைகளில் ஒன்று ஒன்றிய அளவிலான சமையல் அறை.பல பத்து கி.மீ பரப்பளவுள்ள ஒன்றியத்தின் ஒரு இடத்தில் சமையல் செய்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும். சுகாதாரக் குறைபாடுகளும்,நேர விரயமும் எண்ணிப்பார்க்க முடியாதவைகளாக இருக்கும். சத்துணவுக் கூடங்கள் மூடலுக்கும் சத்துணவு ஊழியர் வேலை பறிப்புக்கும் இட்டுச் செல்லும். எனவே இது முற்றிலும் ஏற்க முடியாதது. அதேபோல் கள்ளர் மீட்பு மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் தொடர்பாகவும் ஏற்கத்தக்க வகையிலான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.

நிறைவேற்றுக!

மேற்கண்ட ஓரிரு தவிர்க்க வேண்டியதை தவிர நீதிபதி கே.சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையும் செயல்பாட்டிற்கு வர வேண்டியவையும் ஆகும்.