articles

img

இந்திய அரசமைப்புச் சட்டமும் மாநில அதிகாரங்களும் - பேரா.மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை  பாதுகாப்பு மாநாடு” 
(ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை - 3

கூட்டாட்சி  அமைப்பிற்கான  வரைவிற்கு  (draft constitution) ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலை ஆய்வு செய்து அரசமைப்புச் சட்ட அவைக்குப் பரிந்துரை வழங்கிய போது வல்லபாய் பட்டேல் அவர்களே துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்துத்துவா சார்பு கொள்கையை அவர் கொண்டிருந்தார். எனவே, பிரித்தானிய ஆட்சியில் உருவான சட்டப் பிரிவுகளை ஏற்று, சக்தி வாய்ந்த ஓர் ஒன்றிய  அரசை உருவாக்குவதில் பட்டேல் தலைமையிலான அக்குழு அதிக கவனம் எடுத்துக் கொண்டது.

1950-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பல அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. 1951-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 42 கோடி. 2023-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 142 கோடி. மக்கள்தொகை பெருகி சீனாவைவிட இந்தியா முதல் நாடாகத் திகழ்கிறது. கடந்த 73 ஆண்டுகளாகக் கூட்டாட்சி இயல் தொடர்பாகச் சில மாற்றங்களும், சில சரிவுகளும் இந்திய அரசி யலில் காணப்படுகின்றன. இக்கூறுகளை மறு ஆய்வு செய்து மாநிலங்களின்  உரிமைகளைப் பாது காக்கின்ற தன்மைகளை எடுத்து ஆய்ந்து அதற்கேற்ப பல அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை மேற்கொண் டால்தான் இன்றைக்கு நடைபெறுகிற மதம்சார்ந்த ஒன்றிய ஆட்சியின் மேலாதிக்கம் மீண்டும் ஏற்படா மல் தடுக்க முடியும்.  

கூட்டாட்சி இயல் கூறுகளின் அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டம் முழு அளவில் இயற்றப்படாத தற்குப் பல அரசியல் காரணங்களைப் பலர் சுட்டு கின்றனர். 1947-இல் பாகிஸ்தான் பிரிந்த காரணத்தி னால் காங்கிரசு கட்சியின் பெரும்பாலான தலைவர் கள் ஒரு வலிமை மிக்க  ஒன்றிய அரசை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், அரச மைப்புச் சட்ட அவையில் பெரும்பாலான உறுப்பி னர்கள் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், காங்கிரசு சார்பு நிலை உடையவர்களாகவும் இருந்த னர். அரசமைப்புச் சட்ட அவை பல குழுக்களை அமைத்துப் பல கருத்துக்களைப் பெற்றாலும் இறுதி முடிவினை ஜவகர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் பட்டேல் ஆகியோரே எடுத்தனர். குறிப்பாக, கூட்டாட்சி  அமைப்பிற்கான  வரைவிற்கு (draft constitution) ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலை ஆய்வு செய்து அரசமைப்புச் சட்ட அவைக்குப் பரிந்துரை வழங்கிய போது வல்லபாய் பட்டேல் அவர்களே துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்துத்துவா சார்பு கொள்கையை அவர் கொண்டிருந்தார். எனவே, பிரித்தானிய ஆட்சியில் உருவான சட்டப் பிரிவுகளை ஏற்று, சக்தி வாய்ந்த ஓர் ஒன்றிய  அரசை உரு வாக்குவதில் பட்டேல் தலைமையிலான அக்குழு அதிக கவனம் எடுத்துக் கொண்டது.  

‘‘பிரித்தானிய அரசின் அடக்குமுறை கருவிகள் அனைத்தையும் உடைத்து நொறுக்குவதற்குப் பதி லாக, புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரசுக் காரர்கள், அன்று நிலவிய  அரசியல் நெருக்கடியைத் தீர்க்கவும், ஆட்சியமைப்பை உறுதிப்படுத்தவும், பிரித்தானிய  ஆட்சியின் அதே அதிகார அமைப் பினை அமைத்திட விரும்பினர்’’ என்று கூட்டாட்சி இயல் ஆய்வு அறிஞரான டேவிட் அர்னால்டு குறிப் பிட்டுள்ளார்.   

அம்பேத்கரின் எச்சரிக்கை

இந்திய அரசமைப்புச் சட்ட அவை ஒரு வலிமை யான அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசை உரு வாக்குவதை உணர்ந்த அண்ணல் அம்பேத்கர், சில கருத்துகளை முன் வைக்க தயங்கவில்லை. ‘‘இந்திய அரசமைப்புச் சட்டமானது காலத்தின் சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப ஒற்றையாட்சி முறையாகவும், கூட்டாட்சி முறையாகவும் இருக்கும் என்று கூறினார்.  சாதாரண காலக்கட்டங்களில் கூட்டாட்சி முறையா கவும், போர்க்காலங்களில் ஒற்றையாட்சி முறையாக வும் இயங்கிடும்வண்ணம் அரசமைப்புச் சட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஓர் ஆணையைப் பிறப்பித்ததால் மறுகணமே மொத்த சூழ்நிலையும் மாறி நாடே ஒன்றிய ஆட்சியின் கீழ் வந்துவிடும்’’ என்று குறிப்பிட்டார். இந்தக் கூற்று உண்மை என்பதை ஒன்றிய அரசின் மேலாதிக்க நடவடிக்கைகளால் இன்று உணர முடி கிறது. சான்றாக, 2016ஆம் ஆண்டு வரை 115 முறை அரசமைப்புச்சட்ட 356 விதியைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. அண்ணல் அம்பேத் கர் குறிப்பிட்டபடி எவ்வித போர்ச்சூழல் இல்லாத நிலையில், 1975-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் தனது அரசியல் சுயநலத்திற்காக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அடிப்படை உரி மைகள் முழுமையாக முடக்கப்பட்டன.  2014க்குப் பிறகு ஒன்றிய அரசின் ஆட்சியில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் தன்மைகள்  சிதைக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீருக்குக் குறிப்பிட்ட சிறப்பு அதிகாரங்களை வழங்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின்; 370- ஆவது பிரிவைத் தன்னிச்சையாக ஒன்றிய அரசு மாற்றி ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று மூன்று பிரிவு களாகப் பிரித்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக மீறும் செயலாக அமைந்துவிட்டது. 370வது பிரிவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்  என்றால் மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பது அரசமைப்புச் சட்டப் பிரிவில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சிதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைக்கு பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்க ளில் ஆளுநர்கள் அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிராகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள். இது ஜனநாயகக் கூட்டாட்சி இயலுக்கு முழுமையாக எதிரானதாகும்.  இதற்கு முதன்மையான காரணம்  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் பிரித்தானிய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மையான பிரிவுகளை 1950-இல் உருவாக்கப்பட்ட அரச மைப்புச் சட்ட விதிகளை ஏற்றுக்கொண்டதே ஆகும்.   1935-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, கோகலே அரசியல் பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் (Gokhale Institute of Economics and Politics) பொருளா தாரப் பேராசிரியர் காட்கில் அழைப்பை ஏற்று 1939ஆம் ஆண்டு சனவரி 20ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார். அவ்வுரை பல உண்மை களை  வெளிப்படுத்தியது. வட்ட மேசை மாநாட்டின் அடிப்படையில்தான் 1935ஆம் ஆண்டு பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒட்டு மொத்த நலன்கள் வட்ட மேசை மாநாட்டில் எதிரொ லிக்கவில்லை என்பதையும் அறிஞர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளார். 

‘‘நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே ஆண்ட அரச வம்சாவளியினர் தங்களுடைய  நலன்கள்  எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை  செலுத்தி  சுயநலவாதிகளாகச் செயல் பட்டனர். இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டு அவர்களுக்குச் சட்டமன்றத்தில் தனியாக இட ஒதுக்கீடும், குறிப்பிட்ட அளவிற்குப்  பிரதிநிதித்துவம் தேவை என்றும் விரும்பி னர்  குறிப்பாக, பெரும்பான்மையான  இஸ்லாமியர் வசிக்கும் இடங்களில் தங்களுக்கென ஒரு மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என விரும்பினர். இந்து மகாசபை ஒரே ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டது. இஸ்லாமியர்களின் தொல்லைகள் என்று  எண்ணிய வற்றை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் இந்து மகா சபையின் கவலையாகும். மன்னர்களுக்கு அதிகார மளிப்பதே இந்துக்களுடைய பலத்தைப் பெருக்கு மெனக் கருதினர். இந்திய வணிகர் சமூகம் விரும்பிய தெல்லாம், ஐரோப்பியர்களை வர்த்தகம், வணிகத்தி லிருந்து அப்புறப்படுத்திவிட்டு, தாங்கள் அந்த இடத்தில் எப்படி அமர்வது என்பது பற்றித்தான் சிந்தித்த னர்.  இச்செயலைத் தேசியம் என்ற பெயரால் கோ ரிக்கையாக எழுப்பினார்கள்.  அவர்களைப் பொறுத்த மட்டில், அந்நியச் செலாவணி மாற்று வீதம் குறைக்கப் பட்டு, வெளிநாட்டு வணிகத்தில் அதிக இலாபம் பெற வேண்டும் என்பது நோக்கமாகும். மேற்கூறிய கருத்துகளைக் குறிப்பிட்டுவிட்டு, கூட்டாட்சியில் ஏழைகளுக்கு என்ன பங்கு? என்ற வினாவை எழுப்பி விடையும் அளித்தார் அம்பேத்கர். ஏழைகளுக்குக் கிடைக்கப் போவது இடையூறுகள்தான்’’ என்றார். 

அக்காலக்கட்டத்தில் ஜவகர்லால் நேரு, 1935-ஆம் ஆண்டு சட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரி வித்தார். ‘‘1935-ஆம் ஆண்டு சட்டம் கூட்டாட்சி அமைப் பையும், மாகாணங்களுக்குச் சிறிதளவு தன்னாட்சி அதிகாரங்களை வழங்கினாலும்  பல தடைகளும், மாற்றுக் கருத்துகளும் இருந்தன. அதாவது அரசியல் அதிகாரமும், பொருளாதார அதிகாரமும் பிரித்தா னிய அரசிடமே குவிந்திருந்தன. எந்த உண்மை யான முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியாத அளவிற்குக்  கூட்டாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டி ருந்தது’’ என்று கூறினார். மேலும், 1952க்குப் பிறகு, ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரசு, அரசியலில் மிக வலிமை யான கட்சியாக விளங்கியது. பெரும்பான்மையான மாநிலங்களிலும்  காங்கிரசுக் கட்சியே ஆட்சி செய்தது. இதன் காரணமாக மாநில அரசின் பல அதிகாரங் கள் மறைமுகமாகப் பறிக்கப்பட்டன. ஒன்றிய அரசின் அதிகாரமே மேலோங்கியது. சான்றாக, 1957இல் இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் ஆட்சியமைத்தது. மறைந்த தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வரா னார். பல முற்போக்குச் சட்டங்களை  முன்மொழிந்த  கம்யூனிஸ்ட் ஆட்சியை 356-ஆவது விதியைப் பயன்படுத்தி கேரளா மாநில அரசைக் கலைத்தனர். தமிழ்நாட்டில் 1991-ஆம் ஆண்டு ஆளுநராக இருந்த பர்னாலாவின் பரிந்துரையின்றியே ‘Otherwise’ என்கிற பிரிவைப் பயன்படுத்தி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 

356 -இறந்த எழுத்தல்ல; மரணத்துக்கனுப்பிய எழுத்து

1994-ஆம் ஆண்டு கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை முதல்வராக  ஆட்சியிலிருந்தபோது 356 பிரிவு பயன்படுத்தப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த ஆட்சிக் கலைப்பை எதிர்த்து உச்ச நீதிமன் றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு (Constitutional Bench) விசாரித்தது. வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பினையும் வழங்கியது. 356ஆவது பிரிவைக் கண்மூடித்தனமாக மாநில அரசிற்கு எதிராகப் பயன்படுத்துவதைக் கண்டனம் செய்தது. 356-ஆவது பிரிவைப் பயன்படுத்துவது தொடர்பாக சில புதிய நெறிமுறைகளையும் வகுத்தது. இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த 6 நீதிபதிகள் ஒன்றிய  அரசின் மீதும், ஆளுநர் மீதும், குடியரசுத் தலைவர் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். குறிப்பாக, நீதிபதி ஜீவன் ரெட்டி, ‘‘இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஏறக்குறைய 90 முறைகளுக்கு மேல் 356 பிரிவைக் குடியரசுத் தலைவர் பயன்படுத்தியுள்ளார். 356ஆவது பிரிவு ஒரு இறந்த எழுத்தாக இல்லாமல், பல மாநில அரசுகளையும், சட்டமன்றங்களையும் மரணத்திற்கு அனுப்பிய எழுத்தாக மாறி விட்டது’’ என்று குறிப்பிட்டார்.

(Since the commencement of the Constitution, the President has invoked Article 356 on as many as ninety or more occasi ons. Quite a performance for a provision which was supposed to remain a ‘dead letter’ Instead of remaining a ‘dead letter’ it has proved to be the ‘death-letter’ of scores of State Govern ments and Legislative Assemblies)..  இத்தீர்ப்பிற்குப் பிறகும் பல முறை ஒன்றிய அரசு மாநில அரசுகளைக் கலைக்க முற்பட்டபோது உச்ச நீதிமன்றம்  பல தடைகளை விதித்தது. தற்போதுள்ள பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாற்றுக் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களின் அரசியல் தன்மையைச் சீர்குலைப்பதற்கு ஒன்றிய அரசின்  பல அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.  மராட்டிய மாநிலத்தில் முதலில் சிவசேனா க ட்சியைப் பிளந்தார்கள். தற்போது சரத் பவார் தலை மையில் இயங்கி வரும் தேசியவாத காங்கிரசுக் கட்சியைப் பிளந்து பாஜக கூட்டணி ஆட்சித் தொடர்வதற்குப் பல அரசமைப்புச் சட்ட விதிக ளுக்கு எதிராக வழிவகுத்துள்ளனர். மேலும், 6 மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களைக் கட்சி மாறச் செய்து பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை உருவாக்கி னர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு வித மான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மாநிலங்க ளில் இயங்குகிற மாற்றுக் கட்சியினரின் ஆட்சிகளைக்  குலைப்பதில் முழுக் கவனம் செலுத்துகின்றனர். 

அதிகார எல்லை மீறல்

ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதித்துறை, வங்கித்துறை, காப்பீட்டுத்துறை ஆகிய வற்றில் தனியார் துறை பங்கேற்கத் தன்னிச்சை யாக முடிவெடுத்து முதலாளித்துவ ஆட்சி முறையைக் கொண்டு வந்துள்ளனர். துறைமுகம், விமானப் போக்குவரத்துத் துறைகள் தனியார் பெருமுதலாளி களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. இந்திய அரச மைப்புச் சட்டத்தின் ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டிய லில் உள்ள முதன்மையான துறைகள் தனியார் துறை களுக்கு மாற்றப்படுகின்றன. இவ்வகை அதிகார எல்லைமீறல்கள் கூட்டாட்சி இயலுக்கு முற்றிலும் முரணானதாகும்.  முற்றுரிமை முதலாளித்துவமுறை (Monopoly Capitalism) நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு சில பெரு முதலாளிகள் மட்டுமே இத்துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்து வருகிறது.  இதன் காரணமாக 2012 முதல் 2021 வரை 40 விழுக்காட்டு அளவு சொத்தும், செல்வமும் ஒரு விழுக்காட்டு மக்களிடமே உள்ளது. 50 விழுக்காடு மக்கள் 3 விழுக்காட்டு அளவு சொத்தையும், செல்வத் தையும் மட்டுமே வைத்துள்ளனர். 2020இல் 102ஆக இருந்த பெரு முதலாளிகளின் எண்ணிக்கை 2022இல் 166 என உயர்ந்துள்ளது. 100 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 54 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. உலகின் பசியால் வாடும் மக்கள் தொகையில் 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107ஆம் இடத்தில் உள்ளது.

2016 நவம்பர் 8 அன்று ரூ.500, ரூ.1000 பணத் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறி வித்தார். இதனால் மாநிலங்கள் பெருமளவில் பாதிக் கப்பட்டன. பொருளாதார மந்த நிலை வெகு விரை வாகப் பரவி இன்றைக்குப் பல மாநிலங்களினுடைய வரி வருவாய் குறைந்து வருகின்றன.  மாநில அரசுக ளுக்கும், ஒன்றிய அரசிற்கும் பணவியல் துறையில் நடுநிலையாக இயங்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்திய ரிசர்வ் வங்கி தன்னாட்சி அமைப்பாக உரு வாக்கப்பட்டது. பல மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறை காலத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாகக் கடன்களைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தியுள்ளன. மேலும், பிரதமரின் பொருளாதார ஆலோசகராக நிய மனம் செய்யப்பட்ட மூன்று பொருளாதார அறிஞர்க ளும் 2016க்குப் பிறகு தங்களது பதவியிலிருந்து விலகி விட்டனர்.

இராஜமன்னார் குழு

வரிவிதிப்பு அதிகாரங்களில் மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகளை ஆய்வதற்குத் தமிழ் நாட்டில் 1969ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் நீதிபதி இராஜ மன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுப் பரிந்துரைகள் பெறப்பட்டன. 1974ஆம் ஆண்டு இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்ப டையில் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பப் பட்டது.

...தொடரும்


 

;