articles

img

ஆசியாவை சுற்றி வளைப்பது... பைடனின் திட்டமும் கூட...

சீனாவிலிருந்து கொலம்பியா வரையிலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், வாஷிங்டனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிற நிலையில், பைடன் அரசின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்ள உலகநாடுகள் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால் இன்னும் பல்வேறு முக்கியப் பிரச்சனைகளில் பைடன் அரசு தனது நிலைப்பாட்டை உறுதிசெய்யவில்லை.

பைடன் அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஜேக்கப் சுல்லிவான் (ஜேக்) தங்களது அரசின் பார்வை தெளிவாக இருக்கிறது என்று சொன்னாலும் ஜனாதிபதி பைடன் அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ள மிக முக்கியமான வெளியுறவு பிரச்சனைகளில், சவால்களில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளப் போகிறார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஏற்கெனவே சீனாவுடனான ஒரு மறைமுக யுத்தத்தை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சனை முதல், கிட்டத்தட்ட 30 நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் அமலாகிக் கொண்டிருக்கும் பிரச்சனை வரை; ஆப்கானிஸ்தான் மீது தொடரும் அமெரிக்காவின் யுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் வரை ஜோ பைடன் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்வார் என்பதை அறிவதற்கு உலகம் காத்திருக்கிறது.

நிச்சயம், டொனால்டு டிரம்ப்பைப் போல ஜோ பைடன், எதிர்த் தரப்பில் ஆத்திரமூட்டுகிற விதத்திலான அணுகுமுறையை மேற்கொள்ளமாட்டார் என நம்பலாம். ஆனால் பல்வேறு வெளியுறவு கொள்கைப் பிரச்சனைகளில் டிரம்ப் மேற்கொண்ட அணுகுமுறையிலிருந்து அவர் மாறுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. டொனால்டு டிரம்ப் பின்பற்றியுள்ள வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை என்பது அவரது சொந்த அணுகுமுறை அல்ல; மாறாக அது நீண்டகாலமாக உலகில் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற அமெரிக்காவின் அடிப்படையான கொள்கை அணுகுமுறையே ஆகும். இந்தப் பின்னணியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கையானது முற்றிலும் ஆசியாவை மையப்படுத்தியதாகவே இருக்கும் என உறுதியாக சொல்லமுடியும்.

சீனா
பைடன் நிர்வாகத்தின் பிரதானமான பிரச்சனை என்னவென்றால், சீன அரசுடன் அது எந்தவிதத்தில் தனது அணுகுமுறையைக் கொண்டிருக்கப்போகிறது என்பதுதான். பாரக் ஒபாமாவின் கொள்கையை பின்பற்றி, அவருக்குப் பின் வந்த டொனால்டு டிரம்ப், பெய்ஜிங்கிற்கு எதிராக ஒரு தீவிர பகைமைக் கொள்கையை செயல்படுத்தினார். ஒபாமா ஆட்சியிலிருந்த போது “ஆசியாவைச் சுற்றி வளைப்பது” என்ற திட்டத்தை வரையறை செய்தார். அதன் அடிப்படை நோக்கம் வர்த்தக மற்றும் ராணுவ அச்சுறுத்தல்களை உருவாக்கி, சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது என்பதுதான். ஒபாமாவைத் தொடர்ந்து வந்த டிரம்ப், சீனாவுக்கு எதிராக நடத்திய வர்த்தகப் போரும் அதே இலக்கைத் தான் கொண்டிருந்தது. ஆனால் ஒபாமாவைவிட டிரம்ப் மிகக் கடுமையான முறையில் பேசினார். 

சீனாவைச் சுற்றி அமெரிக்க ராணுவக் குவிப்பு என்பது பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. குறிப்பாக தென்சீனக் கடலை மையப்படுத்தி தொடர்ச்சியாக திட்டமிட்ட முரண்பாடுகளையும் மோதல்களையும் உருவாக்குவது என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு இயல்பான அம்சமாகவே மாறிவிட்டது. சீனாவுக்கு எதிராக தொடர்ச்சியாக அமெரிக்கா பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு விரிவடைந்த போதிலும், சீனாவை பலவீனப்படுத்த முடியவில்லை என்பதுதான், ஒபாமா மற்றும் டிரம்ப் ஆகியோரை, இவர்களது முந்தைய ஆட்சியாளரைவிட இன்னும் தீவிரமாக சீன எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆளாக்கியது. இவர்களிடமிருந்து பைடன் தன்னை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடும்.

சீனாவைப் பொறுத்தவரை அதன் சமூக மற்றும் பொருளாதார சாதனைகள், எதையும் எதிர்கொள்ளும் விதத்தில் தனது நலன்காப்பதற்காக துணிவுடன் எழுந்து நிற்பதற்கான ஒரு புதிய அரசியல் உறுதிப்பாட்டை அந்த நாட்டிற்கு அளித்திருக்கிறது. சீனாவின் இந்த உறுதிதான், ஒபாமாவின் காலத்திலிருந்து அமெரிக்க கொள்கை இன்னும் ஆபத்தானதாக மாறுவதற்கு காரணமாக இருந்தது. அமெரிக்க ஆதிக்கத்திற்கு சீனா அடிபணியாது என்பதும், சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவின் அதிகாரம் ஒருபோதும் அனுமதிக்க ஒப்புக்கொள்ளாது என்பதும்தான் இன்றைய உச்சக்கட்டப் பிரச்சனை.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற கூப்பாடு
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த கொள்கையின் தொடர்ச்சியாகத்தான், இப்போது பைடன் அரசின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆண்டனி பிளிங்க்கன், சீனாவுடனான அணுகுமுறையை இன்னும் கடினமானதாக ஆக்குவோம் எனக் கூறியிருக்கிறார். டிரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவைப் போலவே பிளிங்க்கனும் சீனாவுக்கு எதிரான பிரச்சனையை தைவான், ஹாங்காங் என திசைதிருப்ப முயற்சிக்கிறார். தைவான், ஹாங்காங், ஜின்ஜியாங் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீன எதிர்ப்பு உணர்வுகளை, ஜனநாயகம் என்ற பெயரில் விசிறி விடுவதற்கான கொள்கை முன்மொழிவுகளை பிளிங்க்கன் முயற்சித்துப் பார்க்கக்கூடும். சீனா இந்தக் காலக்கட்டத்தில் உலகிலேயே மிக வேகமான முறையில், மிகவும் வீச்சான முறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எட்டியிருக்கிறது; எதிர்காலத்தில் இது சீனாவை மிகப்பெரும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்ற அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப பிரதேசமான சிலிகான் பள்ளத்தாக்கின் ஆதங்கத்தை கணக்கில் கொள்வதற்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் பிளிங்க்கன், “மனித உரிமைகள்” என்ற பிரச்சனையை மையப்படுத்தி சீனாவுக்கான எதிர்நிலையை எடுக்க முயற்சிக்கிறார். எத்தகைய பின்னணியில் இவர்கள் ஜனநாயகத்தையும் மனிதஉரிமைகளையும் பற்றி பேசுகிறார்கள்? ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கொடிய யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது; வெனிசுலாவிலும், பொலிவியாவிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகளை வீழ்த்துவதற்கும் அழிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றது; இதன் மூலம் அங்கு ஜனநாயகத்தை பலிகடா ஆக்க முயற்சிக்கிறது; எல்லா இடங்களிலும் ஜனநாயகத்தையும் மனிதஉரிமைகளையும் அப்பட்டமாக மீறி வருகிற அமெரிக்கா, சீனாவைப் பற்றி பேசும்போது மட்டும் ஜனநாயக முகமூடியை அணிந்து கொள்கிறது.

ஆனால் உண்மையான பிரச்சனை இப்போது மனித உரிமைகள் பற்றியது அல்ல; மாறாக பொருளாதார ஆதிக்கம் பற்றியது. ஜனாதிபதி பைடனின் கருவூலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜானட் எல்லென், பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். சீனாவின் வர்த்தக கொள்கைகள், நியாயமற்றவையாகவும், சட்டவிரோதமானவையாகவும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரைக்கும் சீனாவுடனான முக்கியமான பிரச்சனை என்பது, அறிவுசார் சொத்துரிமை பற்றியதாகும். அமெரிக்காவின் அறிவுசார் வளங்களையெல்லாம் சீனா திருடிக் கொண்டிருக்கிறது என்றும் இதன்மூலமாக தொழில்நுட்பத்துறையில் சீனா நியாயமற்ற முறையில் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது என்றும் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களையெல்லாம் பலவந்தமாக தனது கைகளுக்கு சீனா மாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும் ஜானட் எல்லென் புலம்பியிருக்கிறார்.

வெளியுறவு அமைச்சர் பிளிங்க்கனைப் போல இவர் மனித உரிமைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சீனா தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை, குறிப்பாக தொலைதொடர்பு மற்றும் பசுமை தொழில்நுட்பத்துறைகளில் அடைந்துவரும் பிரம்மாண்டமான வளர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய தீர்மானகரமான கொள்கை அணுகுமுறையை உருவாக்குவதே இப்போது அடிப்படைத் தேவை என்கிறார் எல்லென்.

இந்தோ-பசிபிக் படைத் தளம்
2007ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யு புஷ் அரசு இருந்த போது அமெரிக்கா ஒரு புதிய ராணுவ கூட்டணியை உருவாக்கியது. அதன் பெயர், முத்தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை (Quardriateral Security Dialogue) என்பதாகும். சுருக்கமாக இதை ‘குவாட்’ (Quad) என்று அழைத்தார்கள். ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்றிணைந்து இந்த ராணுவக் கூட்டணியை உருவாக்கின. அமெரிக்காவின் தலைமையில் ஆசியாவின் மிக முக்கிய நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகியவை கொண்டுவரப்பட்டதன் அடிப்படை நோக்கம், சீனாவின் புதிய எழுச்சிக்கு எதிராக குறிப்பிடத்தக்க தடைகளை உருவாக்குவதுதான். இந்த நான்கு நாடுகளின் கூட்டு நடவடிக்கைகளில் பிரதானமானது கூட்டு ராணுவப் பயிற்சிகள். ஆனால் இந்தக் கூட்டணி 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரதமராக கெவின் ரூட் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிறகு அமெரிக்கா எதிர்ப்பார்த்த திசையில் நகரவில்லை. அதேபோல இந்தியாவில் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற பிறகு, அவரது அரசு, சீனாவுக்கு எதிரான கொள்கை இந்தியாவின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவி செய்யாது என்று தீர்மானித்தது. இந்தப் பின்னணியில் மேற்கண்ட குவாட் கூட்டணி, 2017 வரை அடுத்தக்கட்ட நகர்வு ஏதும் இல்லாததாகவே இருந்தது.

இதற்கிடையில்தான் 2011ல் ஒபாமா பொறுப்புக்கு வந்த நிலையில் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிடம், ஆசியாவை சுற்றி வளைப்பதுதான் அமெரிக்காவின் நீண்டகால நோக்கங்களுக்குப் பயன்படும் என்ற திட்டத்தை முன்வைத்தார். ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் எல்லா இடங்களிலும் நமது இருப்பும், ராணுவ நடவடிக்கைகளும் கட்டாயமாக இருக்க வேண்டும் என ஒபாமா கூறினார். ஒபாமாவைப் பொறுத்தவரை, சீனா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறிச்செல்வதைவிட, ஐரோப்பாவோ, லத்தீன் அமெரிக்காவோ மேற்கு ஆசியாவோ தமது நாட்டிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தல் அல்ல என்பதுதான். அதனால்தான் அவர் “ஆசியாவை சுற்றி வளைப்பது” என்ற அணுகுமுறையை தீவிரமாக மேற்கொண்டார். இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக குர்ட் கேம்ப்பெல் என்ற அதிகாரியை கிழக்காசிய மற்றும் பசிபிக் உபகார துறை இணை அமைச்சராக நியமித்தார்.

ஆனால் கேம்ப் பெல் சீனாவுக்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டும் அதை நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, வாஷிங்டனிலும், ஹாங்காங்கிலும் இயங்குகிற ஆசியா குரூப் என்ற தனியார் நிறுவனத்தை துவக்கினார். ஒபாமா அரசின் நடவடிக்கைகள் 2015 பசிபிக் பிராந்திய கூட்டு என்ற அடிப்படையில் மிகப்பெரும் அளவிலான வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் சீனாவைச் சுற்றிலும் அமெரிக்க ராணுவ படைகளின் தளங்களை வலுப்படுத்துவது என்பதாகவே அமைந்திருந்தன. இது எந்த அளவிற்கு சென்றது என்றால், ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை நான் அகற்றுவேன் என்று ஒரு கூட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் யுஹியோ ஹதோயமா பேசியதைத் தொடர்ந்து அவரை ஜப்பான் பிரதமர் பதவியிலிருந்தே நீக்கும் அளவிற்கு அந்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து செல்வாக்கு செலுத்தியது ஒபாமா நிர்வாகம்.

இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், “ஆசியாவைச் சுற்றி வளைப்பது” என்ற ஒபாமாவின் திட்டமே மேலும் ஆழமாக செயல்படுத்தப்பட்டது. மறுபுறத்தில் ஒபாமாவின் வர்த்தகக் கொள்கையை பின்பற்றுவதில்லை என டிரம்ப் முடிவு செய்தார். அதன்படி அவர் நடைமுறையில் இருந்து வந்த பசிபிக் பிராந்திய கூட்டு என்ற அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான உடனே இயல்பாகவே அந்த கூட்டமைப்பும் செத்துப்போனது. இதைத்தொடர்ந்து அவர் சீனாவுக்கு எதிரான அராஜகமான ஒரு வர்த்தகப் போரினை துவக்கினார். அதேவேளையில் டிரம்ப்பின் ராணுவத் தலைமையானது, முற்றிலும் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்தோ - பசிபிக் படைப்பிரிவையே உருவாக்கினர் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் படைப்பிரிவு முற்றிலும் சீனாவை குறியாகக் கொண்டு நகர்வது என்ற ராணுவக் கொள்கையை கொண்டது. இதேகாலக்கட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளிலும் வலதுசாரி புதிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்தனர். இது டிரம்ப்புக்கு மிகவும் வசதியாகப் போனது. 2008ஆம் ஆண்டுடன் செயலிழந்து நின்றுபோயிருந்த குவாட் கூட்டணியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார் டிரம்ப். இதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், சீனாவுக்கு எதிராக ராணுவ நிர்ப்பந்தத்தை தருவது என்பதுதான். இதன் ஒரு பகுதியாகத்தான் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘லெஜன் ஆப் மெரிட்’ என்ற விருதினை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகிய மூன்று பேருக்கும் வழங்கிவிட்டுச் சென்றார். குவாட் ராணுவக் கூட்டமைப்பை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு இந்த வலதுசாரி தலைவர்கள் ஆற்றிய உதவிக்காக செய்த கைமாறுதான் அந்த அமெரிக்க உயரிய விருதுகள்.

இப்போது புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள பைடனும் இந்த நடவடிக்கைகளையெல்லாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதையே தற்போது கிடைத்துவரும் தகவல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. ஒபாமா காலத்தில் கிழக்காசிய மற்றும் பசிபிக் விவகாரத்துறை துணை அமைச்சராக இருந்த குர்ட்கேம்ப்பெல்லை பைடன் மீண்டும் தனது அமைச்சக வட்டத்திற்குள் கொண்டுவந்தார். கேம்ப்பெல் இந்தத்துறையை தொடர்ந்து கவனிப்பார் என்று கூறப்பட்டவுடன், அவர் அலுவலகத்திற்கு வந்து அந்தக் கட்டமைப்பை உடனடியாக மாற்றி அமைத்துள்ளார். ஒபாமா காலத்தில் இருந்த மூன்று மூத்த அதிகாரிகளை தனது அமைச்சகத்தின் முக்கியப் பொறுப்புகளில் நியமித்துள்ளார். தெற்காசிய விவகாரங்களைக் கவனிப்பதற்காக சுமோனாகுஹா, ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஆன்ட்ரியா ஹென்றெல் மற்றும் சீனாவை கவனிப்பதற்காக லாரா ரோசன் பெர்க்கர் என மூன்று அதிகாரிகளை நியமித்துள்ளார். இவர்களில் லாரா ரோசன் பெர்க்கர், பைடன் அரசின் வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்க்கனுடன் மிக நெருக்கமான நபராவார். இந்த லாரா ரோசன் பெர்க்கர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதற்கு எதிராக மக்கள் சீனம் நடத்திய மிகச்சிறந்த மேலாண்மை நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிப்பவர். அவர் எப்போதுமே சீனாவையும், இந்திய - பசிபிக் பிராந்தியத்தையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் சரியானவைதான் என்று தொடர்ந்து பேசி வருபவர். டிரம்ப் ஆட்சியில் சீனாவுக்கு எதிராக தொடர்ந்து விசம் கக்கியவர் மைக் பாம்பியோவின் செயல்பாடுகளை தீவிரமாக ஆதரித்தவர். 

ஜப்பானும் அமெரிக்காவும்
2020 நவம்பர் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த தருணத்தில், ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் சில தீவுகள் குறித்து தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுஹாவுடன் தொடர்பு கொண்டு ஜோ பைடன் பேசினார். அந்த சமயத்தில் பைடனின் வெற்றி உறுதி என்ற போதிலும் முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் கூட, இந்தப் பிரச்சனையில் ஜப்பானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்தப் பிரச்சனை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கூட்டணியின் ஒப்பந்தம் பிரிவு 5ன்கீழ் வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்பொருள் என்னவென்றால், ஜப்பானின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தை பயன்படுத்துவதற்குக் கூட அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதுதான். 

அதேபோல பைடன் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பிளிங்க்கன் பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில், சம்பந்தமே இல்லாமல் தைவான் நாட்டைப் பற்றி பேசினார். “உலக அளவில் தைவான் மிகப்பெரிய பங்கினை ஆற்றப்போவதை விரைவில் நாம் பார்க்கப்போகிறோம்” என்று பேசிய பிளிங்க்கன், “தைவானுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக நிற்போம்” என்றும் கூறினார். இதன் பொருள் என்னவென்றால், சீனாவுக்கு எதிராக தைவானை அப்பட்டமாக தூண்டிவிடுவதே ஆகும். தைவான் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, டிரம்ப் அரசு தைவானுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய தயாராக இருக்கிறது என்பதே இதன் பொருள். அதுமட்டுமல்ல, சீனாவுக்கு எதிராக தைவானுக்கு டிரம்ப் அரசு அளித்து வந்த ராணுவ உதவி பைடன் ஆட்சியிலும் தொடரும் என்பதும் இதன் பொருள் ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகள், பைடன் ஆட்சியானது சீனாவுக்கு எதிராக ஒரு வீரியமிக்க யுத்தத்தினை மேலும் தீவிரமாக நடத்தும் என்பதையே உணர்த்துகின்றன. பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஆசியா தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளார். ஜப்பான் பிரதமர் சுஹாவிடம் பேசிய அவர், ஜப்பானுக்கு எத்தகைய ராணுவ உதவிகள் வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டணிதான், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தாராளமாகவும், திறந்தவெளிச் சந்தை போல செயல்படுவதற்கும், அமைதி மற்றும் வளங்களுடன் இருப்பதற்கும் அடிப்படையானது என்று இரு நாடுகளும் கூறி வருகின்றன. இதே கருத்தினைத்தான் இந்தியா -அமெரிக்கா இடையிலான உறவு பற்றியும், ஜேக் சுல்லிவன் கூறியுள்ளார். இவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராவார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இருவரும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் மிக நெருக்கமாக இருந்து பணியாற்ற வேண்டியது அவசியம் எனப் பேசியிருக்கிறார்கள்.

பைடன் அரசின் வெளியுறவுக் கொள்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை முழுமையாக அறிய சில காலம் ஆகலாம். ஆனால் சீனா மீதான மிகவும் பாரபட்சமான, மோசடியான, வீரியமிக்க ஒரு யுத்தத்தினை அமெரிக்கா நடத்தி வருகிறது. அது தொடர்ந்து நீடிக்கும் என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்த நோக்கத்திற்காகத்தான் குவாட் ராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் மட்டுமல்ல தென்கொரியாவையும் அதில் இணைத்துக் கொள்வதற்கு அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சீனாவுடன் வர்த்தக உறவுகளை வைத்துக் கொண்டுள்ள நாடுகள்தான்; ஆனால் ராணுவ ரீதியாக சீனாவை ஒடுக்குவதற்கு போடுகிற திட்டத்தில் இந்த நாடுகளை இணைக்க முடிந்த அமெரிக்காவால், சீனாவுடனான வர்த்தக உறவை துண்டிக்க வைக்க முடியவில்லை. இந்த நாடுகள் எல்லாம் மறுபுறத்தில் பொருளாதார ஒத்துழைப்புக்காக சீனாவுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புகின்றன. இன்னும் அமைக்கப்படாமல் இருக்கிற பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார கூட்டு (ஆர்இசிபி) என்ற அமைப்பில் இப்போதே உறுப்பினராகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடன் ராணுவ ரீதியாக மிக நெருக்கமாக இருக்கிற நாடுகள் கூட தங்களது பொருளாதார பலம் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு 2020 நவம்பரிலேயே மேற்கண்ட ஆர்இசிபி-யில் இணைந்து கொண்டன; ஆனால் இந்தியா மட்டும் அதற்கு வெளியில் நிற்கிறது; ஏனென்றால் இந்திய அரசு வாஷிங்டனுக்கு தலைவணங்கி நிற்கிறது.

கட்டுரையாளர் : பேரா. விஜய் பிரசாத்

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

;