நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை ஒரு அரசு மர்மமான பரபரப்பான ஒன்றாக உரு வாக்கும்போது, அந்நிகழ்வை ஊதிப் பெரிதாக்கிட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். பெண்கள் இடஒதுக் கீட்டு மசோதா தொடர்பான போராட்டத்தின் பகுதியாக இருந்த நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, கிட்டத் தட்ட முப்பதாண்டுகள் நாம் நடத்திய போராட்டம், அரசின் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான கருவியாக மாறுவது உண்மை யில் துரதிர்ஷ்டவசமானது ஆகும். நான் ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால் இவ்வ ளவு தாமதமான கட்டத்தில் இம்மசோதா நிறைவேற்றப் படுவது 18ஆவது மக்களவையின் உள்ளடக்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதேயாகும். சுற்றுக்கு விடப்பட்டுள்ள அரசியல் சாசன (128ஆவது திருத்த) மசோதாவின் நகல் இதை போதுமான அளவு தெளிவாக்குகிறது. மக்கள்தொகை கணக்கெடுப் போடு தேவையின்றி இது இணைக்கப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிகள் முடிவு செய்யப்படமாட்டாது என்கிற போது, மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது இம்மசோதா செயல் படுத்தப்படுவதை மேலும் தாமதப்படுத்தும் மற்றொரு காரணமாகும்.
புதிய மக்களவையும் அசமத்துவமாகவே இருக்கும்
எனவே, இந்தியப் பெண்கள் நன்றியோடு இருக்க வேண்டுமா? இக்கேள்விக்கான அழுத்தமான பதில் இல்லை என்பதேயாகும். இந்திய நாட்டின் பெண்கள் தங்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் என 2014-இல் தேர்தல் வாக்குறுதியை பாஜக அளித்தது. 2014/2019 வரையிலான தனது முதல் ஆட்சிக் காலத்தில் அளித்த வாக்குறுதியை பாஜக நிறை வேற்றவில்லை. இதன் காரணமாக பெண்களுக் கான இடஒதுக்கீடு செய்யப்படாததால், 17ஆவது மக்க ளவையில் வெறும் 14 சதவீதமே பெண்கள் இருந்த னர். 2019இல் தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் வாக்குறுதியை அளித்தபோதும், இரண்டாவது ஆட்சிக் காலத்தில் கடந்த நான்காண்டுகளில் ஒருமுறை கூட இம்மசோதாவை பட்டியலிடவில்லை. மேலும், தனது ஆட்சிக் காலத்தின் இறுதித் தருணத்திலேயே இம்மசோ தாவைக் கொண்டு வந்துள்ளதன் மூலம் 18ஆவது மக்க ளவையும் பெண்களுக்கான அசமத்துவத்தை பிரதி பலிப்பதாகவே இருப்பதை உத்தரவாதம் செய்துள்ளது. இத்தகையதொரு நிலைக்கு மோடி அரசே காரணமாகும். இவ்வளவு தாமதமானதொரு கட்டத்தில் இம்மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதற்கு நடைபெற விருக்கும் தேர்தல்களுக்கும், தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச் சாட்டிலிருந்து தப்பிக்கும் ஆசைக்கும் நெருக்கமான தொடர்பிருப்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் ‘ராக்கெட்’ விஞ்ஞானம் அல்ல.
தேர்தல் அறிக்கை போலுள்ள முகப்புரை
ஆனால், ஆட்சேபிக்கப்பட வேண்டியதும் மக்கள வையில் கேள்வி எழுப்ப வேண்டியதும் எதுவென்றால், மிகுந்த ஒருதலைப்பட்சமாக வெளிப்படுத்தப்பட்ட நோக்கங்களும், காரணங்களுமேயாகும். இத்தகைய அறிக்கையானது – எண்ணத்தை, நோக்கத்தை, சட்டத் தின் வரலாற்றை குறிப்பிடுவதாக – துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் போன்றுள்ளது. சமையல் எரிவாயு உருளைகள் முதல் கழிப்பிடங்கள் வரை பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டதாகச் சொல்லப்படும் அனைத்தையும் இது பட்டியலிடுகிறது. பெண்களை இல்லத்தரசிகளாக மட்டுமே பார்க்கும் ஒரு சித்தாந்தம், பெண்களுக்கான இடஒதுக் கீட்டையும் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அமைப்புகளில் அவர்களது பங்கேற்பையும் ஜனநாய கத்தை வலுப்படுத்த தேவையான நடைமுறை என இணைத்திட இன்னமும் தயக்கம் கொண்டுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த பெண்கள் நடத்திய போராட்டத்தை ஆவணப்படுத்திட முகப்புரை மாற்றி எழுதப்பட வேண்டும். பெண்களுக்கான இடஒதுக் கீட்டிற்கான சட்டம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இவர்கள் வெளிப்படுத்தியுள்ள நோக் கங்களுக்காகவும் தேர்தலை கருத்தில் கொண்ட காரணங்களுக்காகவும் இச்சட்டம் மலினப்படுத்தப் படக் கூடாது.
நீண்ட வரலாறு கொண்ட மசோதா
இம்மசோதாவின் வரலாறு குறித்த செய்திகளால் ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. நாடு முழுவதிலு முள்ள மாதர் அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் உறுதியான, நீடித்த அணிதிரட்டல், பெண்களுக்கான இடஒதுக்கீடு பஞ்சாயத்துகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்ட பின், இதனை முதன்முறையாகச் செயல்படுத்துபவர்களாக இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் குறிப்பி டத்தக்க பணிகளால் வலுப்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாக, தனக்கான ஒரு வரலாற்றை இம்மசோதா கொண்டுள்ளது என்பதும் 1996ஆம் ஆண்டு முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்ட பின் குழி தோண்டி புதைக்கப்படவில்லை என்பதும் உண்மை யாகும். அவமதிப்பு, நிராகரிக்கும் மனப்பான்மை, முடிவெடுக்கும் அமைப்புகளில் வேரூன்றியிருந்த ஆணாக்க அதிகாரம் ஏற்படுத்திய தடைகள் என அனைத்தையும் முறியடித்து, தாங்கள் ‘பினாமிகள்’ இல்லை என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் நிரூபித்தனர். இம்மசோதாவை உயிர்ப்பு டன் வைத்திருந்த பெண் போராளிகளையும், மாதர் இயக்கங்களையும் இந்நாடு நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
பாஜகவின் சீர்குலைவு முயற்சி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் மார்ச் 2010-இல் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அங்கு நடைபெற்ற விவாதங்களில் நான் தீவிரமாகப் பங்கேற்றேன். மேலும், அவ்விவாதங்களில் பங்கேற்ற பல்வேறு நபர்க ளின் கேடுகெட்ட செயல்களுக்கு சாட்சியாகவும் இருந் தேன். அவைத் தலைவரின் அறையில் நடந்த விவாதங் களின்போது பல பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. “அவையின் ஒழுங்கு” இம்மசோதா நிறைவேற் றப்படுவதற்கான நிபந்தனையாக இருக்க வேண்டு மென பாஜக தலைவர் ஒருவர் எழுப்பிய பிரச்சனை அவற்றில் ஒன்றாகும். இம்மசோதா நிறைவேற்றப்படா மல் இருப்பதையும், மசோதா நிறைவேற்றப்படுவ தற்கான பெருமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சுக்கு போய்விடக் கூடாது என்பதையும் உறுதி செய்திட, மாநிலங்களவையின் நடவடிக்கைகளை சீர்குலைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தவர்களுக்கு கொடுக்கப் படும் அனுமதியாகவே எனக்கு இது தோன்றியது.
சோனியாகாந்தி, ஹமீது அன்சாரியின் உறுதியான ஆதரவு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றி ருந்தவர்களோடு இடஒதுக்கீடு தொடர்பாக நடை பெற்ற விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர் உட்பட, அக்கட்சியிலும் இவ்விஷ யத்தில் ஆர்வம் காட்டாதவர்கள் இருந்தனர். இருந்த போதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அப்போ தைய தலைவர் சோனியா காந்தி மசோதாவுக்கு அளித்த ஆதரவு, இம்மசோதாவை மீண்டும் சீர் குலைக்க தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்களை தடுப் பதை உறுதி செய்தது. மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி எடுத்த உறுதியான நிலைபாடு இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முக்கியமான காரணியாக இருந்தது. எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த சமாஜ்வாதி கட்சி யின் உறுப்பினர் ஒருவர் கண்ணாடியை உடைத்து, தனது கையை அறுத்துக் கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட மேசையின் மீது பாய்ந்து மசோதாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்த பலர் சத்தமாக கூச்சலெழுப்பிக் கொண்டிருந்த னர். இத்தகைய நடவடிக்கைகள் எதனாலும் பதற்ற மடையாதிருந்த அவைத்தலைவர், இவர்கள் அனைவ ரையும் எந்த தயக்கமுமின்றி அவையிலிருந்து அகற்றி, அவையை ஒழுங்குக்கு கொண்டு வந்தார். பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது நிறைவேற்றப் பட்ட தருணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
காத்திருந்த சுஷ்மா சுவராஜ்
இரவு குளிர்ந்த காற்றில் நாங்கள் வெளியே நடந்து சென்றபோது, மக்களவையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எங்களுக் காகக் காத்திருந்தார். கட்சி வேறுபாடு எதுவுமின்றி, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இத னைக் கொண்டாடினர். மிகப் பெரியதொரு விஷயத் திற்காக ஒன்றிணைவதற்கு இது மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். இத்தகைய இணைப்பு, இன்று ஆளும் கட்சியைச் சார்ந்த பெண் தலைவர்களிடமும், அமைச்சர்களிடமும் இல்லை. பெண்களின் போராட்டங்களுக்கு கிடைத்த கூடுதல் பலம் மசோதா மீண்டும் கொண்டு வரப்படுவதை உறுதி செய்தது. மேலும், அதன் மூலம் இந்திய ஜனநாய கத்தை வலுப்படுத்த உதவியது.
தமிழில் : எம்.கிரிஜா