articles

img

கரிசல் காட்டில் இருந்து மற்றொரு நாவல்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜ நாராயணனைத் தொடர்ந்து வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எஸ்.இலட்சுமணப்பெருமாள். இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. இப்போது தனது முதல் நாவலை  வெளியிட்டுப்  பெருமை சேர்த்துள்ளார். இயற்கையை அழித்து, சூழலை நாசம் செய்து, ஒரு நதியையே சீரழித்து, மனித வாழ்வையே கேள்விக்குரியதாக்கிய பெரும் கதை இது. கயவர்களின் கொடுமை, கண்ணீர் சிந்தும் மக்களின் துயரம் கதையில் நவரசங்களால் தொகுக்கப் பட்டுள்ளது. வாசிக்கும் போது கண்ணீரை வர வழைக்கும் காட்சிகள் வரை நேர்த்தியாக கோர்க்கப்பட்டுள்ளது. வாசகனை எளிதாக நாவல் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது. கேரளத்திலிருந்து கசிந்து வரும் நீரினால் உருவான வைப்பாறு, வரும் வழியெங்கும் பசுமை வளம் கொழிக்க செய்கிறது. மகிழ்ச்சி யோடு விவசாயிகள் வாழுகிறார்கள்.

நவீன காலக் கொள்ளைகளால் ஆறு வளம் குறைந்து மக்கள் வாழ்வு சீரழிகிறது. இதைப் பொதுமக்கள் சகித்துக் கொண்டனர். இடையில்  ஒரு நம்ப முடியாத கதை கூறப்படுகிறது. குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துக் கைப்பற்றினான். அவன் பாண்டிய நாட்டு மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டுமென்று கேரளத்தி லிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ஆறுகளை மேற்கு நோக்கித் திருப்பிவிட்டதாய் கதை கூறு கிறது. ஆறுகளைத் ‘திசை திருப்பியதாய்’ கூறப் படும் கதை ஒருவேளை சோழன் மீதான கோபத்தில் உருவான கட்டுக்கதையாக இருக்கலாம். நாவல் ஒரு நூறாண்டு கால உமிழ்வைச்  சொல்கிறது. நாவல் சாத்தூரை மையங்கொண்டு ள்ளது. கதை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிடுகிறது. மன்றோ கட்டிய பாலம்  அதைக்காட்டுகிறது. ஒருகாலத்தில் கல்லுக் காட்டில் கூட விவசாயம் செய்ய வைத்த வைப்பாறு  வறண்டுபோனது மக்களின்  வாழ்வை சோகத்தில் ஆழ்த்துகிறது. அத்தகைய குடும்பங்களின் அவலக் கதைகள் இதில் தொடர்ச்சியாக வருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியைப் போலவே விடு தலைக்குப் பிறகும் வழக்கம் போலவே போலீஸ் அட்டூழியங்கள், லஞ்சம் ஊழலும் அதிகரித்து சாமானிய மக்களின் வாழ்வைச் சூறையாடுகின்ற காட்சிகள் துயரத்தை தருகின்றன. மக்கள் கோவி லுக்கு  பெருங்கூட்டமாய் தாய் பகவதியாவது காப்பாற்றுவாள் என்று சென்று அங்கும் ரௌடி கள், போலீஸ் அட்டூழியங்களுக்கு ஆளாகிறார்கள்.  அந்த இருண்ட காட்சிகளில் நாவல் வாசகனையே மிரட்டுகிறது. இரவில் கோவில் பகுதியில் கூட்ட மாய் தங்கி தூங்கும் போது ரௌடிகள் வந்து பெண்களை வாயைப் பொத்தி தூக்கிப் போய் வல்லுறவு செய்து கொலை செய்வதும் அங்கு வாடிக்கை. பெற்றோர் எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் இது நடக்கும்.  காலையில் பிணம் தான் கிடைக்கும். மணலைப் பறி கொடுத்த ஆறு எலும்புக் கூடு தான். அதில் சீமைக் கருவேலங்காடு வளர்ந்து  அது பல செயல்களுக்கு மறைவிடமாகிறது. அக்காட்சிகளில் வட்டார வழக்கில் கூறப்பட்டுள்ள வை நம்மை விழுந்து சிரிக்க வைக்கின்றன. இந்த நையாண்டி இலட்சுமணப்பெருமாளுக்கு கை கண்ட கலையாகும். 

விவசாயம் சீரழிந்த பின் பேனா நிப்பு, தீப்பெட்டி போன்ற தொழில்கள் வந்தன. இன்று நிப்புத் தொழிலும் அழிந்துவிட்டது. தீப்பெட்டி ஆபீசு களும் எந்திரங்களின் வருகையால் களையிழந்து போயுள்ளன. கடைசியாய் பார்த்தால் சாத்தூர் வெள்ளரிக்காயும், சேவும் தான் மிச்சம். நாவலின் மையச்சரடாக இருப்பது ஒரு தகரக்குழாய்தான். அதற்குள் வெள்ளை அதி காரி எழுதிக் கொடுத்த பட்டாபத்திரம் உள்ளது. அது மன்றோ குடும்பத்திற்கு இருநூறு ஏக்கர் நிலம்  தானமாய் வழங்கப்பட்ட  பத்திரம். அதைச் கொண்டுபோய் ஒரு வக்கீலிடம் காட்ட அவன் மோசடி செய்கிறான். உரியவர்கள் வறுமையில் வாட வக்கீல் கொழிக்கிறான். இறுதியில் உண்மை வெல்கிறது. எளிய விவசாயி மக்களின் துயரங்கள், கீழ்தட்டு மக்களின் தவிப்பு என வாசிக்கும் நம் மனதை வாட்டுகிறது நாவல்.

நிட்சாப நதித்துறை,
எஸ்.இலட்சுமணப் பெருமாள்
வாசக சாலை பதிப்பகம்
9942633833
விலை : ரூ.400