articles

img

இந்திய ஜவுளித் தொழிலும், தொழிலாளர்களும்

இந்திய ஜவுளித் தொழிலானது நமது பொருளாதாரத்தில் பல நூற்றாண்டுக ளுக்கு முந்தைய பழமையான தொழில் களில் ஒன்றாகும்.  இழையை துணியாக அல்லது ஆடையாக மாற்றுவதற்குத் தேவை யான நூல் நூற்றல், நெசவு செய்தல், சாய மிடுதல், அச்சிடுதல், இறுதி வடிவம் அளித்தல் உள்ளிட்ட இதர பல செயல்முறைகளில் ஈடு பட்டுள்ள பல தொழிற்சாலைகளை உள்ளடக்கி யதாக ஜவுளித்துறை உள்ளது.  4.5 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறை முகமாகவும் வேலைவாய்ப்பை அளித்து, விவ சாயத்திற்கு அடுத்தபடியாக  பெரிய அளவில் வேலைவாய்ப்பை வழங்குகிற இரண்டாவது துறையாக இது உள்ளது.    நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) ஜவுளித்துறை மறைமுகமாக 5% அளவுக்கும், நேரடியாக 2.2% அளவுக்கும் பங்களிப்பு செய்கிறது.  தேசிய கணக்கியல் புள்ளி விவரங்கள், 2018ன்படி,  2017-18ஆம் ஆண்டில் நாட்டின மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறை யின் பங்களிப்பில் ஜவுளித் துறையின் பங்களிப்பு என்பது 12.2 சதவீதமாக இருந்தது.  தொழிற்சாலைகளின் உற்பத்தியின் அள வில் (மதிப்பின் அடிப்படையில்) இந்திய ஜவு ளித்துறை 7% என்ற அளவிற்கு பங்களிப்பு செய் கிறது.  மேலும், இந்தியாவின் ஏற்றுமதியின் மூலம் ஈட்டும் வருமானங்களில் கிட்டத்தட்ட 15% என்ற அளவில் உள்ளது.  2019-20இல் நடைபெற்ற இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் ஜவுளி மற்றும் துணிகளின் வர்த்தகத்தின் பங்கு 5.38% ஆக உள்ளது. 

இரண்டாவது பெரிய துறை

மூலப்பொருளுக்கான – அதாவது பருத்தி – மிகப் பெரிய அடித்தளத்தை கொண்டிருப்பதன் அடிப்படையிலும், மதிப்புச் சங்கிலியில் உற் பத்தி வலிமையின் அடிப்படையிலும் இந்திய ஜவுளித் துறையானது உலகிலேயே மிகப் பெரிய தொழில்துறைகளில் ஒன்றாக உள்ளது.  இத் துறையின் தனித்துவம் கைத்தறித் துறையிலும், அதிக மூலதனம் தேவைப்படும் மில் துறையிலும் உள்ளது.  ஜவுளி அமைச்சகத்தின் 2017-18ஆ ம்  ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையின்படி, 50 மில்லியனுக்கும் மேற்பட்ட ஸ்பிண்டில்கள் மற்றும் 8,42,000 ரோட்டர்கள் நிறுவப்பட்ட 3400 ஜவுளி ஆலைகளைக் கொண்டு ஜவுளித் துறையானது உலகின் இரண்டாவது பெரிய துறையாக உள்ளது.  பாரம்பரிய துறைகளான கைத்தறி, கைவினைத்திறன் மற்றும் சிறிய அளவிலான விசைத்தறிகள் ஆகியன கிராமப் புறத்திலும், சிறிய நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளி லும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது.  ஆனால், தற்போதைய நிலைமை பாழ டைந்து வருகிறது.  2014 மற்றும் 2017க்கு இடை யேயான வருடங்களில் சீனாவிற்கு அடுத்தபடி யாக, ஜவுளிப் பொருட்களையும், ஆடைகளை யும் ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நாடாக இருந்த இந்தியா, ஜெர்மனி, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிடம் தனது இடத்தை இழந்து தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது.  2016-17ஆம் ஆண்டில் 2,65,3440 கோடி ரூபாய்களாக இருந்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்டு ஜவுளித்துறையின் ஏற்று மதியானது, 2018-19இல் 2,55,337 கோடி ரூபாய் களாக வீழ்ச்சியடைந்தது.  ஜவுளித் துறையின் ஏற்றுமதி என்பது (-)8.74% என்ற அளவில் வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில் 2019-2020ஆம் ஆண்டில் ஜவுளித்துறை இறக்குமதி என்பது 10.33% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஜவுளி மற்றும் ஆடைகள் துறையின் பங்கு என்பது 2019-20ல் 11.34% ஆக இருந்தது.

கடந்த இரண்டாண்டுகளாக புதியதொரு சூழலை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.  கொ ரோனா நோய்த்தொற்றின் மூன்று அலைகள் தாக்கியதை அடுத்து கடுமையான ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டன.  முதல் இரண்டு ஊரடங்குகள் சொல்லொணா துயரத்தையும், கடுந்துன்பங்க ளையும் பொதுவாக மக்களுக்கும், பெருமளவி லான ஊதிய வெட்டுடன் உழைப்பாளி மக்களுக்கும் ஏற்படுத்தியது.  அதேபோன்று, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தனியார் விசைத்தறிகளில் வேலை பார்க் கும் பெருமளவிலான புலம்பெயர் தொழிலா ளர்களின் நிலைமையை விவரிக்க இயலாது.  2020இல், 74 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பினைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆடை தயாரிப்பு துறை. கிட்டத்தட்ட 10-15% வீழ்ச்சியை எட்டும் என தற் போது எதிர்பார்க்கப்படுகிறது.  வேலைவாய்ப்பு களில் இது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்து கிறது.  ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட ஒரு கோடி வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டது.  இந்திய ஜவுளித் துறையில், பஞ்சைத் (இந்தியாவின் பிரதான சந்தையாக உள்ள) தாண்டி துணிகள் மற்றும் ஆடைகளை பல்வகைப்படுத்தியதும், மனிதர்களால் தயாரிக்கப்படும் இழைகள் மற்றும் சிந்தடிக் வகைகள் பிரதானமாக மாற்றமாக இருந்தி ருக்கக் கூடும். 

தொழில்துறை பற்றிய இந்த சுருக்கமான பின்னணியோடு, ஜவுளித் துறையிலுள்ள இரண்டு முக்கியமான துறைகளான பஞ்சாலை மற்றும் விசைத்தறி பற்றியும், தொழிலாளர்களின் பணி நிலை குறித்தும் நாம் பரிசீலித்திடலாம்.  ஜவுளி உற்பத்தியின் கட்டமைப்பு பிரதானமாக பின்வருமாறு உள்ளது: H நெசவு, பின்னல், பதப்படுத்துதல் மற்றும் ஆடைத் துறை ஆகியவற்றின் பெரும்பகுதி முறைசாரா துறையிலேயே உள்ளது.  H நூற்புத் துறை என்பது ஒப்பீட்டளவில் மேம் பட்டு அணிதிரட்டப்பட்ட துறையில் உள்ளது.  Hநூற்பு மற்றும் நெசவு என இரண்டிலும் ஈடுபட்டு மில் துறையானது அணி திரட்டப்பட்ட துறையில் உள்ளது.  Hவிசைத்தறி (நெசவு), கைத்தறி (நெசவு) மற்றும் உள்ளாடை (பின்னல் மற்றும் ஆடை கள்) ஆகியன முறைசாரா துறையாக உள்ளன.

மில் துறை

கிடைக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, 2016-17ஆம் ஆண்டுக்கான மில்கள் தொடர்பான விவரங்கள் பின்வருமாறு உள்ளன – பஞ்சு மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இழைகளின் ஆலைகள் – நூற்பாலைகள் (சிறுதொழில் அல்லா தவை) – 1803, காம்போசிட் ஆலைகள் (சிறு தொழில் அல்லாதவை) -205, நூற்பாலைகள் (சிறுதொழில்)- 1352, பிரத்யேக நெசவாலைகள் (சிறுதொழில் அல்லாதவை) - 175, 100% ஏற்று மதி சார்ந்த ஆலைகள் (சிறுதொழில் அல்லா தவை) (நூற்பு+காம்போசிட்) – 16, 100%  ஏற்றுமதி சார்ந்த ஆலைகள் நெசவு (சிறு தொழில் அல்லாதவை) - 6, மனிதனால் தயா ரிக்கப்படும் பைபர் இழைகளின் ஆலைகள் - 32, மனிதனால் தயாரிக்கப்படும் பிளமென்ட் இழை களின் ஆலைகள் – 74, மொத்தம் – 3663 மொத்தமுள்ள 3663 ஆலைகளில், 2041 தமிழகத்தில் மட்டுமே உள்ளன.  சிறுதொழில் அல்லாத நூற்பாலைகள் பிரிவில், தமிழ கத்தில் உள்ள ஆலைகள் 51.64% ஆகும்.  சிறுதொழில் பிரிவைச் சார்ந்த நூற்பாலைக ளில், தமிழகத்தின் பங்கு 76.11% ஆகும் (நாட்டி லுள்ள 1352 ஆலைகளில் 1029 தமிழகத்தில் மட்டுமே உள்ளன).

தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்த மான 24 பொதுத்துறை பஞ்சாலைகள் உள்ளன.  அதேபோன்று, முழுக்க முழுக்க மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவுத் துறையில் சில பஞ்சாலைகள் உள்ளன.  இதர பஞ்சாலைகள் தனியார் துறையில் உள்ளன. 2016-2018க்கான தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர ஆய்வின்படி, அணி திரட்டப்பட்ட உற்பத்தித் துறையில் பணியாற்றும் மொத்த தொழிலாளர்கள் 1,49,11,189 பேரில் 26,97,123 பேர் ஜவுளித்துறையிலும், ஆடை கள் துறையிலும் பணியில் உள்ளனர் / செயல் பட்டு வருகின்றனர்.  அப்படியானால், நமது நாட்டில் உற்பத்தித் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 18.09% ஜவுளித் தொழிலா ளர்களாக உள்ளனர்.  பஞ்சாலைத் துறையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.  இந்தியாவில் கிட்டத்தட்ட 2300 பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன.  இவற்றில் பெரும்பாலா னவை சுயேச்சையாக செயல்பட்டு வருகின்றன. 22 ஆலைகள் மட்டுமே நூற்பு, நெசவு அல்லது பின்னல் ஆலைகளோடு இணைக்கப்பட்ட வையாக உள்ளன. 

என்டிசி ஆலைகள்

தேசிய பஞ்சாலைக் கழகம் (என்டிசி) என்பது இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் வரம்பிற்குள் வரும் அட்டவணை  “ஏ” பொதுத் துறை நிறுவனமாகும்.  7.68 லட்சம் ஸ்பிண்டில் கள், 408 நெசவுத்தறிகளோடு ஆண்டுதோறும் சுமார் 550 லட்சம் கிலோ நூலிழைகளையும், 200 லட்சம் மீட்டர் துணிகளையும் உற்பத்தி செய்து இந்திய நாடு முழுவதிலும் செயல்பட்டு வருகிற 23 பஞ்சாலைகளின் மூலம் நூலிழைக ளையும், துணிகளையும் உற்பத்தி செய்யும் பணி யில் ஈடுபட்டு வருகிறது.  தன்னுடன் இணைந் துள்ள நிறுவனங்களின் வாயிலாக ஆடைக ளையும் என்டிசி உற்பத்தி செய்து வருகிறது.  அதுமட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள தனது 85 சில்லரை விற்பனை கடைகளின் மூலம் நன்கு நிறுவப்பட்ட சில்லரை வர்த்தக இணைப்பையும் என்டிசி கொண்டுள்ளது.  இதன் தற்போதைய பணியாளர் எண்ணிக்கை 10,449 ஆகும்.  இந்தியாவில் முதன் முறையாக ஊரடங்கு நிலை செயல்படுத்தப்பட்டபோது 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் என்டிசிக்கு சொந்தமான அனைத்து 23 பஞ்சாலைகளும் மூடப்பட்டன.  நாளது தேதி வரை அவை திறக்கப்படவில்லை.  அனைத்துத் தொழிலாளர்களும் வேலையை இழந்து, நடுத்தெருவில் உள்ளனர்.  5 என்டிசி பஞ்சாலைகளோடு கோயம்புத்தூர் நகரமானது என்டிசியின் முக்கியமான உற்பத்தி மையங்க ளில் ஒன்றாக உள்ளது.  மூடப்பட்ட என்டிசி பஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்பட போராட்ட இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.  என்டிசி பஞ்சாலைகளை மீண்டும் திறக்க மோடி தலை மையிலான அரசு ஆர்வமெதுவும் கொண்டி ருப்பதாகத் தெரியவில்லை.  ஆனால், என்டிசி யின் சொத்துக்களை – பிரதான நிலமாக உள்ள சொத்துக்களை – பணமாக்க விரும்புவதாகத் தெரிகிறது.  எனவே, இத்தகைய தேச விரோத தற் போதைய அரசியல் பங்கீட்டை நாம் எதிர்த்திடுவோம். 

விசைத்தறி துறை

துணி உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஜவுளித் துறையின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றாக பரவலாக்கப்பட்ட விசைத்தறித் துறை உள்ளது.  2013ஆம் ஆண்டில் நீல்சன் பேஸ்லைன் பவர்லூம் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி 44.18 லட்சம் பேருக்கு இத்துறை வேலை வாய்ப்பை அளித்துள்ளது.  ஆனால், ஜவு ளித்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்க ளின்படி 2015-16ல் சுமார் 62.78 லட்சம் தொழிலாளர்கள் இதில் வேலை பார்த்து வரு கின்றனர்.  ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப் படும் துணியில் 60%க்கும் கூடுதல் விசைத் தறித் துறையிலிருந்தே அளிக்கப்படுகிறது.   ஆயத்த ஆடைகள் மற்றும் உள்நாட்டு பஞ்சா லைகள் தங்களது துணித் தேவைகளுக்கு விசைத்தறி துறையையே பெருமளவில் சார்ந்திருக்கின்றன.  அக்டோபர் 31, 2017 அன்று இந்தியாவில் சுமார் 27.01 லட்சம் பதிவு செய்யப்பட்ட விசைத் தறிகள் உள்ளன.  2006-07இல் 19.9 லட்சம் விசைத்தறிகள் மட்டுமே இருந்தன.  இதே எண்ணிக்கையளவில் பதிவு செய்யப்படாத விசைத்தறிகள் இருந்திருக்கக் கூடும்.  இவை பெரும்பாலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தன.  இத்துறையின் தொழில்நுட்பம் என்பது சாதாரண நெசவுத் தறியில் துவங்கி நெசவுத்தறி நாடாக்கட்டடை இல்லாத உயர்தொழில்நுட்ப நெசவுத்தறிகள் வரை உள்ளன.  இத்துறையில் சுமார் 1.50 லட்சம் நெசவுத்தறி நாடாக்கட்டை இல்லாத நெசவுத்தறிகள் உள்ளன.   மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 லட்சம் விசைத்தறிகள் – அதாவது நாட்டில் மொத்தம் உள்ள விசைத்தறிகளில் கிட்டத்தட்ட 50% - இருப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.  அம் மாநிலத்தில் பூகோளரீதியாக பரந்துபட்டு தானே மாவட்டத்தில் பிவாண்டி, கோலாப்பூர் மாவட்டத் தில் சோலாப்பூர், இச்சல்கரஞ்சி, நாசிக் மாவட்டத்தில் மாலேகாவ் மற்றும் சாங்லி ஆகிய பகுதிகளில் இந்த விசைத்தறிகள் அமைந்துள்ளன. 

பருத்தி

உள்நாட்டு ஜவுளித்துறைக்குத் தேவைப் படும் பிரதான மூலப்பொருளாக பருத்தி உள்ளது.  பருத்தித் துறையில் பதப்படுத்துதலில் துவங்கி வர்த்தகம் வரையிலான நடைமுறைக ளில் ஈடுபட்டு வரும் பல லட்சக்கணக்கான விவ சாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இது வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது.  இந்திய ஜவுளித் துறையில் மூலப்பொருள் நுகர்வில், பருத்தி மற்றும் மனிதனால் உற்பத்தி செய்யப் படும் இழை ஆகியவற்றின் விகிதாச்சாரம் 59:41 என உள்ளது.  ஆக, இந்தியாவின் மிக முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாக பருத்தி உள்ளது.  மேலும், ஒட்டுமொத்த உலகளாவிய நூலிழை உற்பத்தி யில் கிட்டத்தட்ட 25% ஆக உள்ளது.  இந்திய ஜவுளித்துறையின் மூலப்பொருள் நுகர்வில், பருத்தியின் விகிதாச்சாரம் சுமார் 60% ஆக உள்ளது.  ஆண்டுதோறும் சுமார் 300 லட்சம் பேல்கள் (ஒரு பேல் என்பது 170 கிலோ) பருத்தி நுகரப்படுகிறது.  ஆனால், தற்போது இந்தியா சராசரியாக ஆண்டொன்றுக்கு 370 லட்சம் பேல்களையே உற்பத்தி செய்கிறது.  சர்வதேச அளவில் பருத்தியை பயிரிடும் பரப்பளவு 320.54 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது.  இதில் கிட்டத்தட்ட 133 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் – அதாவது சர்வதேச அளவில் 41 சதவீத பரப்பள வில் - பருத்தியை பயிரிடுவதன் மூலம் இந்தியா உலகளவில் முதல் இடத்தில் உள்ளது.  இந்தியா வில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியில் கிட்டத் தட்ட 62% மழை பெய்யும் பகுதிகளிலும், 38% பாசன வசதி கொண்ட விளைநிலங்களிலும் பயி ரிடப்படுகின்றன.  2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி ஹெக்டேருக்கு கிட்டத்தட்ட 460 கிலோ என்ற அளவில் இருந்தது.  தற்போது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகளால் செயல்படுத்தப்பட்ட நவீன தாராள வாத கொள்கைகளின் கீழ், பருத்தி என்பது நமது உள்நாட்டு தொழிற்சாலைகளைக் காவு கொடுத்து இந்தியாவிலிருந்து இலவசமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது.  பருத்தியை முக்கிய மாக வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ் தான், இந்தோனேஷியா, தைவான், தாய் லாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 

நூல்     

2020 நிதியாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட நூல் என்பதன் அளவு கிட்டத்தட்ட 5 பில்லியன் கிலோகிராம்களாக இருந்தது. 2011ஆம் நிதியாண்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நூலின் அளவு தொடர்ச்சியாக அதி கரித்து வந்துள்ளது.  2020ஆம் நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட நூலின் அளவில் பருத்தி நூலின் அளவு என்பது - 54 சதவீதத்துக்கும் கூடு தலாக – பெரும்பகுதியாக இருந்தது.  2021இல், பருத்தி நூலுக்கான மொத்த விலைக் குறியீட்டு எண் 114.2 ஆக இருந்தது.  அதற்கு முந்தைய ஆண்டின் குறியீட்டு எண்ணோடு ஒப்பிட்டால் இது குறைந்திருந்தது.  அத்துடன், 2020ஆம் ஆண்டில், ஜவுளிக்கான நூலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உலகளவில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இந்தியா இருந்தது. 2021 நிதியாண்டில் பருத்தி நூற்பு நூலின் ஏற்றுமதி மதிப்பு என்பது 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.  நவீன தாராளவாத கொள்கைகளை மோடி அரசு தீவிரமாக செயல்படுத்துவதால் உள்நாட்டு  உற்பத்தியாளர்களை ஆபத்துக்கு ஆளாக்கி, உலகளாவிய பொருட்களுக்கான சந்தையில் கட்டுப்பாடு எதுவுமின்றி, பாதிப்புக்கு உள்ளாகி விற்பனை செய்யப்படும் பொருளாக பருத்தி மற்றும் நூல் ஆகிய இரண்டும் மாறியுள்ளன. கட்சி வேறுபாட்டை கடந்து, மே 16, 17 தேதிகளில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட இரண்டு நாள் வேலை நிறுத்தம் என்பது, கோபத்தைத் தூண்டிய அந்த கொள்கைகளின் வெளிப்பாடேயாகும். 

தொழிலாளர்களின்  முக்கிய பிரச்சனைகள்

தொழிற்சாலையின் முதலாளிக்கு சொந்த மான இருப்பிடங்களிலேயே பெரும்பாலான தொழிலாளர்கள் வசிக்கின்றனர் என்றும், தொழிற் சாலை நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பி லேயே அவர்கள் இருக்கிறார்கள் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.  இந்த வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்ல வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டுமே பலர் அனுமதிக்கப்படுகின்றனர்.  இத்தகைய வசிப்பிடங்களில் அறை ஒன்றுக்கு 12 முதல் 15 பேர் வரை தங்கியிருந்து, கழிப்பிட வசதியை பகிர்ந்து கொள்கின்றனர்.  இத்தகைய தங்கும் விடுதிகள் ஆண் பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுகின்றன.  இவ்வாறாக, இங்கு  வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வெளி உல கத்திலிருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளார்கள்.  இவர்களை சங்கமாக அணி திரட்டுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிறது.  பாதுகாவ லர்களால் துன்புறுத்தப்படுவது என்பது பரவ லாகக் காணப்படுகிறது.  பெரும்பாலான தொழிற் சாலைகளில், நீண்ட வேலை நேரம், காற்றோட்ட மில்லாத பணியிடங்கள், குறைவான கூலி அல்லது நச்சுப் பொருட்களை கையாள்வது போன்ற சுகா தாரமற்ற, சுரண்டல் நிலைமைகளை தொழிலா ளர்கள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.   இவர்களை சங்கமாக அணி திரட்டுவது என்பது சவால் மிகுந்த ஒன்றாக ஆகி வருகிறது.  எனவே, என்டிசி, கூட்டுறவு பஞ்சாலைகள் மற்றும் ஒரு சில தனியார் பஞ்சாலைகள் நீங்க லாக பலவற்றில் கூட்டுபேரம் என்பதை தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.   உண்மை மதிப்பின் அடிப்படையில் கூலி என்பது கிட்டத்தட்ட தேக்கநிலையில் உள்ளது.  நமது நாட்டில் உள்ள அணி திரட்டப்பட்ட துறை யில், ஒப்பீட்டளவில் குறைவான கூலியைப் பெறும் தொழிலாளர்களாக பஞ்சாலைத் தொழி லாளர்கள் உள்ளனர்.  வேலை நேரம், ஓய்வுக்கான இடைவேளை, ஓவர்டைம் போன்றவற்றின் அடிப்படையில் பணி நிலைமைகள் என்பது, குறிப்பாக சிதறிப் போய், பரவலாக உள்ள விசைத்தறிகளில், சிறு தொழில் தொழிற்சாலைகளில், பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் மிக மோசமாக உள்ளன.   பிஎப், கிராஜுவிட்டி போன்ற சட்டப்பூர்வமான சமூக பாதுகாப்பு திட்டங்கள் எல்லாம் செயல் படுத்தப்படுவதை விட மறுக்கப்படுவதே பெரு மளவில் காணப்படுகிறது.  இந்த பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழி லாளர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், புலம்பெயர் தொழிலாளர்களாகவும் இருக்கிறார் கள். அவர்கள் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன.

நாடு தழுவிய அளவில்  ஒருங்கிணைக்கும் முன்முயற்சிகள்

நாடு முழுவதிலும் ஜவுளித் துறையில் சிஐடியு வின் உறுப்பினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,000 என்ற அளவில் உள்ளது. தற்போதைய நவீன தாராளவாத நடைமுறையிலும், தொழி லாளர்கள் மீதான அதன் தாக்குதல் அதிகரித்து வருகையிலும், ஆளும் வர்க்கத்தால் இத்தகைய கொள்கை ரீதியான தாக்குதல்கள் தொடுக்கப் படுகையில் அவற்றை எதிர்கொள்ள தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.  இத்திசை வழியிலான முன்முயற்சிகளை மேற்கொள்ள ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் நடைபெற்ற சிஐடியுவின் 15ஆவது அகில இந்திய மாநாடு கட்டளையிட்டது.  அதன்படி, சிஐடியுவின் 15ஆவது மாநாட் டிற்குப் பின் ஜூலை 2017இல் சிம்லாவில் நடத்தப்பட்ட சிஐடியுவின் செயற்குழுக் கூட்டத் தின் முடிவின்படி, சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட பஞ்சாலை மற்றும் விசைத்தறி சங்கங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவதற்கான முன்முயற்சியை சிஐடியு மையம் மேற் கொண்டது.  இக்கூட்டம் புது தில்லியில் பிடிஆர் பவனில் செப்டம்பர் 25, 2019 அன்று நடத்தப் பட்டது.  ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கா னா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநி லங்களிலிருந்து 21 தோழர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

இத்தகைய முன்முயற்சியை பொதுவாக வரவேற்றதோடு, இத்துறைகளில் இயக்கத்தை வளர்த்தெடுக்க சிஐடியு மையம் சீரிய கவ னத்தைச் செலுத்த வேண்டும் என இக்கூட்டத் தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.  இம் முயற்சியின் தொடர்ச்சியாக, சென்னையில் சிஐடியுவின் 16ஆவது மாநாடு நடைபெற்ற போது ஒரு கூட்டத்தை நாம் நடத்தினோம்.  சிஐடி யுவின் 16ஆவது மாநாடு முடிந்தவுடனேயே, மார்ச் 2020இல் பஞ்சாலை மற்றும் விசைத் தறித் தொழிலாளர்களின் தேசிய அளவிலான சிறப்பு மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்துவது என அங்கு நாம் முடிவெடுத்தோம்.  எனினும், கோவிட் நோய்த்தொற்று மற்றும் அது தொ டர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, இம் முடிவை செயல்படுத்துவது சாத்தியமின்றி போனது.  அதன் பின்னர், மார்ச் 9, 2022இல் மற்றொரு கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப் பட்டது. அக்கூட்டத்தில் தேசிய அளவிலான சிறப்பு மாநாட்டை மே 17, 2022 அன்று கோயம்புத்தூரில் நடத்திட முடிவு செய்தோம்.  அதன்படி, மே 17, 2022 அன்று கோவை யில் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.  தொழி லாளர்களோடு பெருமளவில் தொடர்புடைய கூலி, பாதுகாப்பற்ற பணி நிலைமைகள் மற்றும் ஓய்வூதியம், பிஎப், இஎஸ்ஐ போன்ற சமூகப் பாது காப்பு தொடர்பான பிரச்சனைகளோடு, ஜவுளித் துறை தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இச்சிறப்பு மாநாடு விவாதிக்க உள்ளது.  தற்போது புதிய ஜவுளிக் கொள்கையை ஜவுளித்துறை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.  புதிய ஜவுளிக் கொள்கை என்பது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.  தொழிலாளர்களோடு எந்தவித கலந்தாலோசனையும் செய்யப்படாத நிலையில், இது தற்போது வரைவு நிலையி லேயே உள்ளது.   தேச விடுதலைக்கான போராட்ட காலத்தில் வீரஞ்செறிந்த பங்கை ஆற்றிய பஞ்சாலைத் தொழிலாளர்கள், புதிய வடிவத்திலான வர்க்கத் தாக்குதல்களை எதிர்க்க அத்தகைய சிறந்த பாரம்பரியத்தை மீண்டும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  

தமிழில்: எம்.கிரிஜா
 


 

;