articles

img

பன்முகத் தன்மைக்கு இடமளிக்காத நீதித்துறை - நீதிபதி கே.சந்துரு

நீதித் துறையின் உயர்நிலையில் ‘பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களின் சமத்துவமற்ற பிரதி நிதித்துவம்’ பற்றி சமீபத்தில் சட்ட அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. நீதிபதி கள் நியமன முறை, வழிமுறை ஆகியவை குறித்த விவா தங்களை எழுப்பியுள்ளது.  2018ஆம் ஆண்டு முதல் 2022 டிசம்பர் 19 வரையிலான காலத்தில், பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு 537 நீதி பதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. இதில் 79 சதவீதம் பேர் பொதுப் பிரிவை யும், 11 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை யும், 2.6 சதவீதம் பேர் சிறுபான்மை சமூகங்களையும், 2.8 சதவீதம் பேர் பட்டியல் சாதிகளையும், 1.3 சதவீதம் பேர் பழங்குடிப் பிரிவுகளையும் சார்ந்தவர்களாக உள்ளனர் என்பது தெரிய வருகிறது.   எனினும், இந்த அறிக்கைகள் முன்னோடியில்லா தவை என்றோ, அல்லது இது ‘சமத்துவமற்ற பிரதி நிதித்துவம்’ குறித்த பிரச்சனை மட்டுமே என்றோ சொல்லிவிட முடியாது. 

வரலாறு காட்டுவது என்ன?

சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, அந்த மாதம் சமர்ப்பித்த அறிக்கையில்,‘சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் நோக்கங்களை வென்றடைய, ‘நீதித்துறையின் உயர் நிலையில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள தாக 2007 ஆகஸ்ட் 19 அன்று வெளியான சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்தது. “நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள 610 நீதிபதிகளில், மிகஅபூர்வமாக, எஸ்.சி, எஸ். டி பிரிவுகளைச் சேர்ந்த 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளது இந்தக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது” என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.  ஆனால் நீதிமன்றத்தின் உயர் நிலையில் போதிய பன்முகத்தன்மையற்ற இத்தகைய நெருக்கடி அதற்கும் முன்பிருந்தே நிலவி வருகிறது என்பதே உண்மை.   இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை நடத்தை ஆகிய வற்றில் நிபுணத்துவம் பெற்ற அறிஞரான ஜார்ஜ் எச் கட்போய்ஸ் ஜூனியர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கள் 1950-1989 என்ற தனது நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:  “இந்திய சமூக வாழ்வில் மிக முக்கியமான வேறு படுத்திக்காட்டும்அம்சமான சாதிஎன்பது, பெற்றோ ரின் தொழிலை விட,அவர்களது சமூகத்  தோற்றம் மற்றும் வர்க்கத்தின் சிறந்த குறிகாட்டியாக விளங்கு கிறது. மொத்தமுள்ள 93 நீதிபதிகளில் 77  பேர் இந்துக் கள். இந்த அட்டவணையில் குறிப்பாகச் சொல்ல வேண்டிய  விஷயம் என்னவெனில்,இதில் 33 நீதிபதி கள், நாட்டின் மக்கள்தொகையில் பத்தொன்பதில் ஒரு பங்காக உள்ள பிராமண பிரிவைச் சேர்ந்தவர்கள்.”

வி.ஆர்.கிருஷ்ணய்யரின்  கடிதமும் விளக்கமும்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண  அய்யர், பிற சமூகங்களை சேர்ந்தவர்களை நீதித்துறை யின் உயர் நிலையில் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று சட்ட அமைச்சருக்கும் பிரதமருக்கும் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் பேசும்போது “கேரள சமூகத்தில் கடையனுக்கும் கடை யனாகத் திகழும் ‘நாயாடி’ பழங்குடியினரை உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும் நிர்வாகத் தலைவர்களாகவும் நியமிக்க வேண்டும்” என்றுகுறிப்பிட்டார்.  இவ்வாறு ‘நாயாடி’ வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் மற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எவருக்கும், “திறனிலோ தகுதியிலோ” குறைந்தவராக இருக்கமாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக, அவருக்கு எதிராக, கேரள உயர்  நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் 1990இல் நீதிமன்ற அவ மதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவ மதிப்பைத் தொடங்க அனுமதி வழங்குவதற்காக, இந்த விஷயம் குறித்த அவரது பதில் கோரப்பட்ட போது, ​ நீதிபதி கிருஷ்ண அய்யர் ஒரு நீண்ட விளக்கத்தை  அளித்தார். அதில் அவர் டாக்டர் பி.ஆர். அம்பேத் கரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்: “இந்துக்கள் வேதங்கள் வேண்டுமென்று விரும்பி னர்;

அதற்காக, அவர்கள் சாதி இந்து அல்லாத வேத  வியாசரை அழைத்தனர். இந்துக்கள் ஒரு காவியம் உரு வாக்கப்பட வேண்டுமென்று விரும்பினர். அதற்காக,  தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த வால்மீகியை அவர்கள் அழைத்தனர். இந்துக்கள்  ஓர் அரசிய லமைப்பை உருவாக்க விரும்பினர். அதற்காக, அவர் கள் என்னை அழைத்தனர்.” (பி. கிருஷ்ணசாமி, “வி.ஆர். கிருஷ்ண அய்யர் எ லிவிங் லெஜண்ட்,” யுனிவர்சல் லா பப்ளிஷிங் கோ. பிரைவேட் லிமிடெட், 2000). பிரதிநிதித்துவம் இல்லாதநிலையும்கூடஒப்புக் கொள்ளப்பட்டது. என்றாலும்…. அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 217இன்படி நீதித் துறையின் உயர்மட்ட நியமனங்களில் இடஒதுக்கீடு செய்வதற்கான முதல் சட்ட முயற்சி கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்தது. இதற்கான ஒரு தீர்ப்பில் (அதுவும் 1990 இல்தான் வந்தது), இந்த மனுவை நிரா கரித்து உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியிருந்தது:

16ஆவது பிரிவு சொல்வதென்ன?

“அரசியல் அமைப்புச் சட்டத்தின் 16ஆவது பிரிவு ஒருபுறம் ‘பதவி’, மறுபுறம் ‘பணியிடங்கள் மற்றும் நிய மனங்கள்’ ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கிறது.  பிரிவு 16(1) அனைத்து குடிமக்களுக்கும் வேலைவாய்ப்பு  அல்லது நியமனம் தொடர்பான விஷயங்களில் சம மான வாய்ப்பு இருக்க வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், பிரிவு 16(4), இடஒதுக்கீட்டிற்கான ஏற்பாடு, நியமனங்கள் அல்லது பணியிடங்களுக்குச் செய்யப்படலாம்; அது, எந்த ‘பதவிக்காகவும்’ அல்ல. இடஒதுக்கீட்டின் கொள்கைகள் எல்லா பதவிக ளுக்கும் நீடிக்காது.” விசித்திரமான வகையில், மூன்றாவது நீதிபதி குறித்த வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, கொலீஜியம் நியமன முறையை வலுப் படுத்திய அதே வேளையில், நீதித்துறையில் நியமனம் பெறுவதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித் துவம் இல்லாதது குறித்து தனது கருத்தை வெளிப் படுத்தவும் துணிந்தது.

ரத்னவேல் பாண்டியனும் வெங்கடாசலய்யாவும்

நீதிபதி ரத்னவேல் பாண்டியன் கூறினார்: “நீதிமன்ற உயர்பதவியில் நுழைவதற்கான உரிமை என்பது எந்தவொரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கோ அல்லது சலுகை பெற்ற வகுப்பினருக்கோ அல்லது மக்கள் குழுவினருக்கோ ஆன பிரத்யேக உரிமை இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். வேறுவகையில் கூறுவதானால், அது பரம்பரையானதோ அல்லது ஆதரவு தரக்கூடிய ஒரு விஷயமோ அல்ல.” குறைவான பிரதிநிதித்துவம் பெற்றுள்ள குழுக்களில் இருந்து வேட்பாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கென,ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் நிய மிக்கப்பட்ட தேசிய ஆணையம் தனது அறிக்கையில் (2000) இவ்வாறு கூறியிருந்தது: “50 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அது எவ்வளவு தாமதமானதாக இருந்தபோதிலும், ஒவ் வொரு மாநிலத்திலும் போதுமான எண்ணிக்கை யிலான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த நபர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் நீதித்துறை யின் உயர்மட்டத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்படும் வகையில், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற  நீதிபதி களுக்குத்  தேவையான நேர்மை, பண்பு மற்றும்  அறிவுக் கூர்மை ஆகியவற்றைக் கொண்டவர்களா கவும் உள்ளனர்.” எனவே, இது  குறைவான பிரதிநிதித்துவம் பெற் றுள்ள குழுக்களிலிருந்து போதிய வேட்பாளர்கள் கிடைக்காதது பற்றிய விஷயம் அல்ல.

பட்டியல் சாதிகளுக்கான  தேசிய ஆணையத்தின் பரிந்துரை

பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம், முந்தைய அறிக்கைகள் அனைத்தையும் கணக்கில்  எடுத்துக்கொண்டு, அரசியலமைப்பைத் திருத்தவும், நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை வழங்கவும், பின்வரும் ஆணையோடு, நாடாளுமன்றத் திற்கு பரிந்துரை செய்திருந்தது: “இங்கு முன்வைக்கப்பட்டுள்ள தேசிய நீதித்துறை  ஆணையம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச  நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, ​​குறைந்தபட்சம் 49.5 விழுக்காடு (அதாவது ஓபிசி பிரிவினர் 27 விழுக்காடு, எஸ்சி பிரிவினர் 15 விழுக்காடு மற்றும் எஸ்டி பிரிவினர்  7.5 விழுக்காடு என்ற விகிதத்தில்) இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றைக் கண் காணிக்க வேண்டும்.” நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணை யத்தை (NJAC) உருவாக்குவதற்கான 99ஆவது அரசியல மைப்புச் சட்டத் திருத்தத்தின் நோக்கங்களில் ஒன்று, “உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதி பதிகளை நியமனம் செய்யும் முறையை விரிவுபடுத்து வது;  இதில் நீதித்துறை, நிர்வாகம் மற்றும் முக்கிய நபர்க ளின் பங்கேற்பிற்கு அது வழிவகை செய்வது; உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அதிகமான அளவிலான வெளிப்படைத் தன்மை, பொறுப்புரிமை மற்றும் புறச் சூழ்நிலை ஆகிய வற்றை உறுதிப்படுத்துவது.” எனினும், அதற்கும் மேலே சென்று    “புறச் சூழ்நிலை” என்ற சொல்லின் உண்மையான பொருளை அது வெளிப்படையாக எடுத்துக் கூறவில்லை. 

கொலீஜியத்தின் தன்மை...

எவ்வாறாயினும், நீதித்துறையின் உயர் நிலையில் நீதிபதிகளை நியமிக்க, பரந்த அடிப்படையிலான ஒரு கமிஷன் வேண்டும் என்ற முயற்சியே உச்ச நீதிமன்றத் தால் (2015) முறியடிக்கப்பட்டது. நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணை யத்தை விட, கொலீஜியம் அமைப்பு சிறப்பானதாக இருக்கிறது என்ற வாதம் கூட தவறானதாக இருக்கக் கூடும்.  நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையம் என்ற பரிசோதனையை விட, கொலீஜியம்  வழியிலான நியமனம் ஒருபடி மேலானது என்ற நீதிபதி ஃபாலி எஸ் நாரிமனின் கூற்றும் கூட சரியாக இருக்காது. (எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், சிறுபான் மையினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட) சமூகத்தின் பரந்த பிரிவினரின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிப்பது ஒருபுறம் இருக்கட்டும்; நீதித்துறையின் உயர்மட்டத் திற்கான நியமனத்தின் தன்மை குறித்த தனது கொள்கை அறிக்கையைக் கூட கொலீஜியம் அமைப்பு ஒருபோதும் உருவாக்கவில்லை. எனவே, உயர்மட்டநீதித்துறைக்கான பன்மை நிலைக்கு இடமளிக்க புதிய விதிமுறைகளை ஒருவர் நாட வேண்டுமெனில், அது கொலீஜியம் மூலமான நியமன முறையை அகற்றுவதில் இருந்து தொடங்கி,  தெளிவான, அரசியலமைப்புச் சட்ட ரீதியான, ஆணை யுடன் நீதித்துறையின் உயர் மட்டத்திற்கு நிரந்தரமான தொரு ஏற்பாட்டின் மூலம் விரிவான அடிப்படை யிலான ஆட்சேர்ப்பு நடைமுறையை நோக்கிச்  செல்ல வேண்டும். 

உண்மையான தீர்வு எது?

2014இல் நீதியரசர் கிருஷ்ண அய்யர் மிகச் சரியா கவே சொன்னார்: “இந்த முழு செயல்முறையுமே  தன்னிச்சையா னது; எனவே,இயற்கையாகவே, அவர்களின் அக்கறை யற்ற தேர்வு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது... நியமிக்கும் அதிகாரம் பெற்றவர், வெளிப்படைத் தன்மை, பொறுப்புரிமை மற்றும் மக்களுக்கு பொறுப் புள்ளவராக இருப்பது ஆகியகுணங்களுக்கு உட்பட்ட வராக இருக்கவில்லை...” நியமன விஷயங்களில் சமூக நீதியை பெறுவது, கொலீஜியம் தேர்வு முறை ஆகிய இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றுக்கொன்று இயைந்ததாக இருக் காது. நீதிபதிகளாலேயே நீதிபதிகள் நியமிக்கப் படும் மேல்தட்டு வகைப்பட்ட  தற்காலிக முறைக்கு  முற்றுப்புள்ளி வைப்பதும், சமூக நீதி நெறிமுறை களைப் பின்பற்றுவதற்கான தெளிவான ஆணை யுடன் கூடிய விரிந்த அடிப்படையிலான நிரந்தர ஏற்பாடுமே இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான உண்மையான தீர்வாகும்.

நன்றி: த க்விண்ட் இணைய இதழ்,  தமிழில் : வீ.பா.கணேசன்


 


 

;