articles

img

பெண்களின் திருமண வயது 21 - ஒன்றிய அரசின் போலி நாடகம் - பிருந்தா காரத்

என்டிடிவி

2021 டிசம்பர் 20

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துகின்ற மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கின்றது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த மசோதா சட்டமாக மாறும் என்றாலும்கூட, மிகவும் ஆழமான பரிசீலனைகள் தேவைப்படுகின்ற பல முக்கியமான சிக்கல்கள் அதில் உள்ளன. மசோதாவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அதை தொடர்புடைய நிலைக்குழுவிற்குப் பரிந்துரைப்பதே அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த வழியாக இருக்கும்.   

ஒரு பெண் தன்னுடைய பதினெட்டாவது வயதில் வயதிற்கு வந்தவள் என்று கருதப்படுகிறாள். குற்றவியல் சட்டங்கள் உட்பட வயதுக்கு வந்த குடிமக்களுக்குப் பொருந்துகின்ற அனைத்துச் சட்டங்களும் ஒரு பெண்ணின் பதினெட்டாவது வயதில் அவளுக்குப் பொருந்துகின்றன. பதினெட்டு வயதிற்குப் பிறகு தான் செய்யும் செயல்களுக்கு அவளே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்தோருக்கான சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அளவிற்கான வயது ஒரு பெண்ணுக்கு 18-21 வயதிற்கு இடையில் வந்து விடுகின்ற போதிலும், முன்மொழியப்படவிருக்கின்ற மசோதாவின்படி, அந்த வயதில் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்தப் பெண் இளமையானவளாகவே இருப்பாள். உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் பெண்களுக்கு அளிக்கப்படும் அதிகாரமாக இல்லாமல், அவர்களைக் குழந்தைகளாக்குவதாகவே உள்ளது. முதிர்வயது என்பது பிரித்துச் சொல்ல முடியாதது. திருமணம் தொடர்பான முடிவுகளில் வயதுக்கு வந்த பெண்ணின் விருப்பத்தை மறுப்பது தவறாகும். பெரும்பாலும் இந்த மசோதா சாதி மற்றும் சமூக தடைகளை உடைத்தெறிந்து இளம் வயது தம்பதிகள் தாங்களாகத் தேர்வு செய்து கொள்கின்ற திருமணங்களைச் சட்டவிரோதமாக்கி விடும். இந்த மசோதா வயதுக்கு வந்த பெண் ஒருவள் அனுபவித்து வருகின்ற தனிப்பட்ட விருப்பம் குறித்த விஷயங்களில் இன்றைக்கு இருந்து வருகின்ற சட்டத்தின் கீழ் அவளுக்கிருக்கும் சுதந்திரம் குறித்ததாக நீதித்துறை வழங்கியுள்ள தீர்ப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.     

மேலும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் தங்கள் வாழ்வு குறித்த முடிவுகளில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்துடனான மாற்றத்தை இப்போது கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களிடையே இளம் வயது திருமணம் குறித்து அதிக கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்களுக்கு எதிராக இளம் பருவத்தினர் கிளர்ந்தெழுந்துள்ள பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.  

திருமணத்திற்கான சராசரி வயது 22.2 ஆக (MOSPI 2019) இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு இளம் பெண்களிடம் இதுபோன்று உருவாகியுள்ள எண்ணமும் ஒரு காரணமாக உள்ளது. உண்மையில் தன்னார்வத்துடன் திருமணத்திற்கான வயது கணிசமாக அதிகரித்து வந்திருக்கும் வேளையில், அவர்களுக்கு தண்டனை தரும் வகையிலான நடவடிக்கைகளை ஏன் இப்போது மேற்கொள்ள வேண்டும்? 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைக் குற்றமாக்குவதைக் காட்டிலும், தாங்களாக தேர்வுகளைச் செய்து கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்கித் தருகின்ற உத்தரவாதமான வேலை வாய்ப்புகள், கல்விக்கான அணுகல் போன்றவற்றை இளம் பெண்களுக்கு வழங்குவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். பெண்கள் கருவுறும் விகிதம் ஏற்கனவே குறைந்து வரும் நிலையில், திருமண வயதை உயர்த்தும் இதுபோன்ற நடவடிக்கை​​ மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்காக பாஜக தலைமையிலான சில அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கொடூரமான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவற்ற தன்மையைப் போன்றதாகவே இருக்கும்.  

திருமண வயதை உயர்த்துவதில் என்ன தவறு உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் கணிசமான அளவில் இந்தியாவில் இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், ​​அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆயினும் இந்தக் குறைப்பு நகர்ப்புறங்களிலேயே மிக அதிகமாக உள்ளது என்றும், கிராமப்புற இந்தியாவில் 20-24 வயதில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கும் அதிகமானவர்கள் பதினெட்டு  வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அதற்கான காரணங்கள் நன்கு அறியப்பட்டவையாகவே இருக்கின்றன.

இப்போதைய தொற்றுநோய் பொருளாதார நெருக்கடிக்கும், குழந்தைகள் பாதிக்கப்படும் அளவிற்கு  பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சமூக விளைவுகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்புகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பொதுமுடக்க காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் இயங்கி வந்த குழந்தைகள் உதவி எண்ணுக்கு குழந்தை திருமணம் குறித்து 5,200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.

பெரும்பாலும் ஏழ்மையில் இருப்பவர்களின் பெண் குழந்தைகளுக்கே பதினெட்டு வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. வறுமை, அதிகரித்து வருகின்ற வரதட்சணைக் கோரிக்கைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த அச்சம் போன்றவற்றைச் சமாளிக்கும் தீர்வாகவே அந்த திருமணங்கள் கருதப்படுகின்றன. ஒருவரின் செல்வத்தை தானமாக (பரய தான்)  கொடுப்பது, பெண்களை அடுத்தவருக்கு கைப்பிடித்துத் தர வேண்டிய புனிதக் கடமை பெண்களின் பாதுகாவலர்களுக்கு இருக்கிறது என்பது போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கின்ற வகையிலே குழந்தை திருமணங்களுக்கான கலாச்சார அங்கீகாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது.  

அத்தகைய கலாச்சாரங்களுடன் தற்போதைய ஆட்சிக்காலம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கான அணுகலை அதிக அளவிலே உறுதி செய்திருக்கின்ற கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்கள் விடுக்கின்ற சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன. சட்டப்பூர்வ திருமண வயதை பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்தும், ஆண்களுக்கு பதினெட்டு வயதிலிருந்தும் முறையே பதினெட்டு மற்றும் இருபத்தியொன்று என்று 1978ஆம் ஆண்டில் இந்தியா மாற்றியது. எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் குழந்தை திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை மீற முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு வழங்கி வந்துள்ளதால், இந்தச் சட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துபவையாகவே இருந்து வருகின்றன. இந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணங்களை ஒழிக்கத் தவறியுள்ள நிலை நீடித்து வருகின்ற நிலைமையில், திருமணத்திற்கான பெண்களின் தகுதி வயதை இருபத்தியோரு ஆண்டுகளாக உயர்த்துவது என்பது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் - முக்கியமாக ஏழைகள் -  சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்வதற்கே வழிவகுத்துக் கொடுக்கும்.  

மிகக் குறைந்த வயதிலேயே தாயாகின்ற இளம் பெண்களின் உடல்நலம் மீதான அக்கறையே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும், திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துவதன் மூலம் குழந்தை பிறப்பைத் தடுத்து இலம் பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. இது முற்றிலும் போலித்தனமான வாதம். தாய் மற்றும் சிசு இறப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் பொதுக்கொள்கையுடன் தொடர்புடையவை. பொதுசுகாதாரத்திற்கான நிதியைக் குறைத்துக் கொண்டே வருகின்ற அரசாங்கம் மறுபுறத்தில் சுகாதாரத் துறையை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் உணவுப் பாதுகாப்பு முறையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பெண்களின் உடல்நலம் மீதான தன்னுடைய அக்கறையை அது இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை அதிகரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வராத அரசாங்கம், இனப்பெருக்க உடல்நலம் என்ற பெயரில் வயதுக்கு வந்த பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது.  

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்றாக உயர்த்துவதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது சமன் செய்யப்படுவது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு படியாகும் என்ற அரசின் கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் சமத்துவம் குறித்து உண்மையிலேயே இந்த அரசு ஆர்வமுடன் இருக்குமென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான தகுதியான வயதை பதினெட்டு என்று வைத்திருக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏன் அது ஏற்றுக் கொள்ளக் கூடாது?  

தனிப்பட்ட உறவுகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் உண்மையிலேயே இந்த  அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமானால், ‘ஆணவக் குற்றங்களுக்கு’ எதிரான தனிச் சட்டம், திருமண உறவில் ஏற்படுகின்ற பலாத்காரத்தை குற்றமாக அங்கீகரிக்கும் சட்டம் என்பது போன்ற மிக முக்கியமான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், வயதுக்கு வருகின்ற வயதிற்கும், திருமணத்திற்கான தகுதிக்கான வயதிற்கும் இடையில் வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. வயதுக்கு வரும் வயதை பதினெட்டு என்று பரிந்துரைத்து  1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. உலகளாவிய ஒருமித்த கருத்துக்கு எதிராகச் செல்வதற்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள் எதுவும் உண்மையில் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.    

https://www.ndtv.com/opinion/centres-hypocrisy-in-raising-marrying-age-for-women-to-21-2660378

நன்றி: என்டிடிவி

தமிழில்: தா.சந்திரகுரு

;