articles

img

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜி.ராமகிருஷ்ணன்

தாம் பெற்ற பிள்ளையை அடக்கம் செய்திட அன்னையர் தங்கள் கைகளாலேயே சவக் குழி தோண்டும் அவலம் காசாவில் தொடர்கிறது. நவம்பர் 10 வரையில் காசா பகுதியில் 11,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பதும், 2500 பேர் பெண்கள் என்பதும் நம்  நெஞ்சைத் துளைக்கிறது. 25,000 பேர் காயமுற்றனர். 

இன்றளவும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், எப்போதாவது திறக்கும் கடைகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்கள் பொறித்த வளை யல்களை  வாங்கி குழந்தைகளுக்கு அணிவிக்கிறார் கள் பெற்றோர்கள். கொல்லப்பட்ட தங்கள் குழந்தை களை சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு சவக்குழி கட்டப்பட வேண்டும் என்பதால் இந்தப்  பதை பதைப்பு அவர்களிடம் நிலவுகிறது. தற்போது, அனைத்து மக்களுமே தாங்கள் இறந்தபின் முறையான அடையாளத்துடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஏக்கத்தில் தங்கள் பெயர் பொறிக் கப்பட்ட வளையல்களை அணிகிறார்கள். 

இஸ்ரேல் ராணுவம் காசா பகுதி மீது குண்டு மழை பொழிவதால் குடியிருப்புகள், கடைகள், மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பகுதி மருத்துவமனைகள்; மூன்றில் இரண்டு பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதுவரையில் 113 மருத்துவப் பணி யாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 41 பத்திரிகையா ளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 15 லட்சம் பாலஸ்தீன மக்கள், அதாவது காசாவின் மக்கள் தொகையில் 62 சதவீதம் பேர் காசாவிற்குள்ளேயே அகதிக ளாகி இருக்கிறார்கள். ஏழு லட்சம் பேர் ஐ.நாவின் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான தாக்குதல் இன-அழிப்பு நடவ டிக்கையே. “ஒரு தேசிய இனத்தையோ, குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மக்களையோ, முழுவதுமாகவோ பகுதியாகவோ அழித்தொழிக்கும் நடவடிக்கை இன- அழிப்பு’’ என 1948-ல் ஐ.நா மன்றம் இன-அழிப்பு குறித்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் வரை யறுக்கிறது. ஆனால், இதுதான் தனது நோக்கமென சமீபத்தில் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்க மாகவே குறிப்பிட்டார். 

மதப்பிரச்சனை அல்ல

1974 நவம்பர் 29 அன்று பாலஸ்தீன தேசத்தில் யூதர்களுக்கென்று தனிநாட்டை உருவாக்குவதாக  யூத மதவெறி தலைவர் பென் குரின் பிரகடனப் படுத்தினார். அன்று மாலையே அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலை அங்கீகரித்தார். ஐ.நா மன்றத்திலும் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1948, மே 14 இல் இஸ்ரேஸ் என்ற நாடு உதயமானது. அடுத்தடுத்து இஸ்ரேல் தாக்குதல்கள், போர்களைத் தொடுத்து, பாலஸ்தீன மக்களின் – தேசத்தின் – பல பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டது. 

இஸ்ரேல் நாட்டையே அங்கீகரிக்க முடியாது என யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) பாலஸ்தீன நாட்டின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியது. 1993 ஆம் ஆண்டு ஆஸ்லோ நகரத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனடிப்படையில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் என்ற இருநாடுகள் கொள்கை நடைமுறை க்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, 1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைகளின் அடிப்படையில் நாடு களின் நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று முடிவா னது. இது, பாலஸ்தீன மக்களின் பூர்வீக நிலப்பரப்பில் வெறும் 22% மட்டுமே. இதைக்கூட இஸ்ரேல் அரசு அமல்படுத்த மறுத்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற  இரு நாட்டுக்கொள்கையை ஏற்க மறுத்துவிட்டது.  ‘பாலஸ்தீன மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் அழித்தொழிப்பது, அல்லது விரட்டியடிப்பதன் மூல மாக, இஸ்ரேல் என்ற ஒற்றை யூத நாடு மட்டுமே’ என்கிற அணுகுமுறையின் அடிப்படையில்தான், பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் கள் தொடர்ந்து நீடிக்கின்றன. 

ஐ.நா மன்றத்தில் பாலஸ்தீன பிரச்சனை குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து,  1967 ஆம் ஆண்டு  எல்லை-பரப்பளவின் அடிப்படையில் கிழக்கு ஜெரு சலேமைத் தலைநகரமாகக் கொண்டதுதான் பாலஸ்தீன நாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தொடர்ந்து பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்கு தல் தொடுத்து, மேற்குக் கரை, காசா, கிழக்கு ஜெருச லேம் போன்ற பகுதிகளை தனது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. ஜெரு சலேம் பகுதியில் தான் அல்-அக்ஸா என்ற இஸ்லாமி யர்களின் மூன்றாவது புனிதத் தலமும், கிழக்கு ஜெருசலேமில் கிறிஸ்தவர்களின் புனிதத்தலமும், யூதர்களின் புனிதத் தலமும் இருக்கிறது.  

இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து, விரட்டிய டித்து அப்பகுதிகளை நிரந்தரமாகத் தமது கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள கிறித்துவர்கள், இஸ்லா மியர்களுக்கு எதிரான மதவெறியைக் கட்டமைத்து இஸ்ரேல் அரசு யுத்தத்தை நடத்துகிறது. இஸ்ரே லுடைய இந்த நடவடிக்கை, இஸ்லாம், கிறித்தவம் என்ற இரண்டு மதங்களுக்கு எதிரானது என்பதை விட, பாலஸ்தீன மக்களின் நிலப்பரப்பைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். 

ஏகாதிபத்தியத்தின் ஆதரவு

துவக்கத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின் றன. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியும், இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலை வர்களும் இஸ்ரேலுக்கே நேரடியாகச் சென்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அமெரிக்கா இரண்டு மாபெரும் விமானத்தள போர்க்கப்பல்களை அனுப்பி இருக்கி றது. இரண்டாயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இஸ்ரே லுக்குச் செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டி ருக்கிறார்கள். 1980-88 ஈரான்- இராக் யுத்தத்தில் கூட இஸ்ரேல் மூலமாக ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கியது அமெரிக்கா. இஸ்ரேலுக்கு நிபந்தனை யற்ற ஆதரவை தொடக்க நாள் முதல் அமெரிக்கா வழங்கி வருவதற்குக் காரணம் இஸ்ரேலைப் பயன்படுத்தி அமெரிக்கா தன்னுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மத்தியக் கிழக்கு, ஆசியப் பகுதியில் நிலைநாட்டுவதற்குத்தான். இதற்காகவே, தன்னு டைய ஏகாதிபத்திய அடியாளாக இஸ்ரேலை நிலை நிறுத்திவைத்து பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரே லின் ஆக்கிரமிப்புக் கொள்கையை அப்பட்டமாக அமெரிக்கா ஆதரித்து வருகிறது. 

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்த்து ஐ.நா. மன்றத்தில் தீர்மா னங்கள் கொண்டுவரப்படும் போதெல்லாம், அமெ ரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் அந்தத் தீர்மா னத்திற்கு எதிராக வாக்களிக்கின்றன. எனவே, பாலஸ் தீனப் பிரச்சனையை முழுமையாகப் பார்த்தால், இது  மதப் பிரச்சனை கிடையாதுஎன்பதும், இஸ்ரேலைப் பயன் படுத்தி அமெரிக்கா தனது ஏகாதிபத்திய வல்லாதிக் கத்தை நிலைநிறுத்துவதற்குப் பாலஸ்தீன மக்கள் தங்கள் பூர்வீக நிலவுரிமையை இழந்து நிற்கிறார்கள் என்பதும் தெளிவாகும்.

இந்தியாவின் சறுக்கல்

சமீபத்தில் கூடிய ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்ப டையிலான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 120 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. அமெரிக்கா உள்ளிட்டு 14 நாடுகள் எதிர்த்து வாக்களித் தன. வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த 40 நாடு களில் இந்தியாவும் ஒன்று. 1948-ல் இருந்து இந்திய அரசு பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. பாலஸ்தீன தேசத்தின் ஒரு பகுதியை இஸ்ரேல் என்ற நாடாக அறிவித்ததை அண்ணல் காந்தி கண்டித் தார். நோபல் விருதுபெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டித்தார். ஆனால், பிரதமர் மோடியோ இஸ்ரேல் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய அரசு இஸ்ரேல் பக்கம் நிற்பதாக அறிவித்தார். ஐ.நா மன்றத்தில்  பிரான்ஸ் கூட இஸ்ரேல் தாக்கு தலை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா, வரலாற்றிலேயே முதன் முறையாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கையை  ஆதரிக்கும் வகையில் நடந்துகொண்டது.

சமீபத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க-பாதுகாப்பு செயலாளர், வெளியுறவுத் துறை செயலா ளர் சந்திப்பு (2+2) நடந்துள்ளது. இக்கூட்டத்தில் காசா  மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஆணித்தரமாகக் கூறாமல், இரு நாடு கள் கொள்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என, மோசடி யாக இஸ்ரேலின் இன-அழிப்பு நடவடிக்கையை ஆத ரிக்கும் நிலைப்பாட்டை மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் கடும் விமர்சனங்களின் பின்னணியில், ஐ.நா. மன்றத்தில் நவ.13 அன்று, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வரப் பட்ட போது அதற்கு ஆதரவாக இந்தியா வாக்க ளித்துள்ளது. 

அமெ.ஆட்சியாளர்களின் வர்க்க பாசம்

காசா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலைக் கண்டித்துப் பேசியதற்காக பாலஸ்தீன-அமெரிக்க எம்.பியான ரஷிதா ட்லைப் மீது கண்டனத் தீர்மா னத்தை அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை  நிறைவேற்றியது. இந்த எம்.பியின் குடும்பம் பாலஸ் தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கிறது. அமெரிக்கா வின் வரலாற்றில் இத்தகைய கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது மிகவும் அரிதானது. இதுவரை 25 உறுப்பினர்கள் மீது மட்டுமே இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இம்முறை, தவறை தவறு என சுட்டிக்காட்டியதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கண்டன நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. (ரஷிதா ட்லைப் உரை:5)  ரஷிதா வுக்கு எதிரான தீர்மானத்தை அவர் சார்ந்த ஜனநாய கக் கட்சி உறுப்பினர்கள் 21 பேர் ஆதரிக்க, நான்கு குடியரசுக் கட்சி எம்.பிகள் இந்தத்  தீர்மானத்தை எதிர்த்திருக்கிறார்கள். குடியரசுக் கட்சித்தலைவர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடனும் எலியும் பூனையுமாக இருப்பது போலத்தோன்றும்.  ஆனால், வியட்நாம் மீதான போர், இராக் மீதான போர், ஆப்கானிஸ்தான் மீதான போர், கியூபா மீதான பல பத்தாண்டுகாலப் பொருளாதார முற்றுகை, தற்போது பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கூர்மைப் படுத்தி இருக்கும் தாக்குதல்கள்-இவற்றில் எல்லாம் அமெரிக்காவின் இரு கட்சித் தலைவர்களுமே கைகோர்த்து இருப்பார்கள். இதுதான் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு, அந்நாட்டின் பன்னாட்டு பகாசுர முதலாளிகள் மீது கொண்டிருக்கிற வர்க்கப் பாசம். 

அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடு கள் அனைத்தும் தத்தமது நாடுகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி ஏகாதிபத்திய, ஆக்கிரமிப்புக் கொள்கையையே கடைப்பிடிக்கின்றன. 

உலக மக்களின் எழுச்சி

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் பாலஸ்தீன மக்கள் மீது தொடுத்த தாக்குதல்களை ஆதரித்தாலும், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பி போராடி வரு வதை ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு ஆத ரவான தீர்மானத்தை நிறைவேற்றினாலும், நாடாளு மன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வெளிநடப்புச் செய்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட் டம் செய்தார்கள். 

நவ.20 இடதுசாரிகள்  மாபெரும் போராட்டம்

பாலஸ்தீன மக்கள் தனியாக இல்லை; உலக ளாவிய அளவில் பன்னாட்டு மக்கள் வீதியில் இறங்கி  பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் நாடுதழுவிய அளவில் வருகிற 20-ஆம் தேதி அன்று பாலஸ்தீன மக்க ளுக்கும் ஆதரவாகக் களமிறங்க அறைகூவல் விடுத் துள்ளன. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெற உள்ள இயக்கத் தில் பங்கேற்போம்! இயக்கத்தை வெற்றி பெறச் செய்வோம்!