திருவள்ளூர்,பிப்.16-திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்து உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருவதால் ரயில்வே அடிக்கடி மூடப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் செவ்வாபேட்டை, திருவூர், தொழுவூர், அரண்வாயில், தண்ணீர் குளம், வெள்ளக்குளம், சிறுகடல், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் செவ்வாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வேயும், மாநில நெடுஞ்சாலைதுறையும் இணைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரயில்வே கேட் அகற்றப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. செவ்வாய்பேட்டை ரயில்வே கேட்டின் ஒருபுறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்து உள்ளது. அதே நேரத்தில் ரயில்வே கேட்டின் மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அந்த நிலங்களின் உரிமையாளர்கள், கையகப்படுத்தப்படும் நிலத்திற்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பின்னர் ரயில்வே மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் மேம்பாலப் பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடையே எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் புதிய மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.