செவ்வாய், ஜனவரி 26, 2021

facebook-round

img

அரசு ஊழியர்கள் ஏதோ வேற்று கிரக வாசிகள் போன்ற பார்வை மக்களிடையே இருக்கிறது

அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை பஞ்சப்படி ( Dearness allowance) நிறுத்தி வைப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக களத்தில் துணிச்சலோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் அரசின் "கைதட்டல்" இதுதானா?
அண்ணண் எப்படா சாவான் திண்னை எப்போ காலியாகும்? என்ற பழமொழி தெரிஞ்சுருக்கும், கொரோனோ இவர்களுக்கு ஒரு சாக்கு...
ஒய்வூதியமே கொடுக்க கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள் பஞ்சப்படியை நிறுத்தி வைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
சிக்கன் நடவடிக்கை என்றாலே ஆட்சியாளர்களின் கண்களுக்கு முதலில் அரசாங்க ஊழியர்கள் தான் தெரிவார்கள்."ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது அரசாங்க ஊழியர்களுக்கு அப்படியே பொருந்தும்.
பஞ்சப்படிக்கு ( Dearness allowance) நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்கிறது.கொஞ்சம் ஃபிளாஷ் பேக் போயிட்டு வரலாம்.... முதல் உலகப்போர் நடந்த 1917 காலகட்டத்தில்தான் படுகுழியில் இருந்த தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாக்க போர்க்குரல் எழுப்பப்பட்டு பஞ்சப்படி முதன் முதலாக வழங்கப்பட்டது.வாழ்க்கை பஞ்சத்தை காத்திட வந்த படி "பஞ்சப்படி"பொருத்தமான காரணம் பெயர்.
முதலில் பம்பாய் ஆலை தொழிலாளர்கள் பெற்றார்கள்.தர மறுத்த முதலாளிகளுக்கு எதிராக மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பது வரலாறு.1929 ல் ரயில்வே ஊழியர்கள் பஞ்சப்படி பெற்றார்கள்.இரண்டாம் உலகப் போரின் போது அனைத்து தொழிலாளர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் பஞ்சப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.அதற்கு முன்பாக உணவு படியாக (Dear Food Allowance) வழங்கப்பட்டது. பஞ்சப்படியை தீர்மானிக்க 1944 ல் வரதாசாரியார் குழு ஒன்று போடப்பட்டது.குறைந்த சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு உணவு படியும் வழங்கப்பட்டன.

விடுதலைக்கு பிறகு இரண்டு விதமாக பஞ்சப்படி கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஒன்று, ஒரே மாதிரியான பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்குவது, மேலும் வேலைக்கு வந்த நாட்களுக்கு மட்டும் வழங்குவது...இரண்டு, விலைவாசி நுகர்வோர் குறியீட்டோடு ( CPI ) இணைத்து வழங்குவது.இதன்படி விலைவாசிக்கு ஏற்ப ஏறும் அல்லது இறங்கும். பஞ்சப்படியை கணக்கிட 1960 ம் ஆண்டு அடிப்படையாக ஆண்டாகவும் விலைவாசி உயர்வு,100 புள்ளிகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.(1960 =100). அன்றிலிருந்து இன்று வரை அரசு ஊழியர்கள் பெறும் பஞ்சப்படிக்கு பின்னால் தொழிலாளர்களின் நூறு ஆண்டுகால போராட்டம் இருக்கிறது.தொழிலாளர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே வருமானத்திற்காக ஆதாரம். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அல்ல வாழ்வதற்கான சம்பளம் தான்.வேறு எந்த வருமானமும் இல்லாத தொழிலாளர்களுக்கு உயரும் விலைவாசியை சற்றே எதிர் கொள்ள தருவதுதான் இந்த பஞ்சப்படி. அரசாங்கம் "மாடல் எம்பளாயர்" என்று சொல்வார்கள்.
அரசாங்கம் பஞ்சப்படியை முடக்கினால் தனியார் கம்பெனிகள் சம்பளமே தரமாட்டார்கள். இதுதான் அரசு பேரிடரை எதிர் கொள்ளும் வழியா??

அரசாங்க ஊழியர்களுக்கு குடும்பம் இல்லையா? உறவுகள் இல்லையா? செலவுகள்தான் இல்லையா? அவர்கள் என்ன அரசாங்கத்தின் "ரோபோக்களா"?.
அரசு ஊழியர்களுக்கு மட்டும் விலை உயர்வு இல்லையா?
சாதாரண மக்கள் அரசாங்க ஊழியர்களை பார்த்து "நம்ம நிலைக்கு அவங்க பரவாயில்லை" என்று எதுவும் தெரியாமல் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கலாமா?
பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 10 லட்சம் என்றால்... தன் வாழ்நாள் முழுவதும் குடும்பம், குட்டிகளை பார்க்காமல்,நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் ஆபிசே கதி என்று கிடந்த பல ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் இருப்பார்கள்.இவர்களை நம்பி ஒரு கோடி பேர் இருக்கிறார்கள்.
ஒரே உத்திரவின் மூலம் அவர்களின் அடிமடியிலே அரசு கை வைத்து விட்டது.

அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது ! இது தவிர்க்க முடியாது !
அரசு ஊழியர்களும்,வயதான ஓய்வூதியம் பெறுவோரும் ஒன்றரை வருடத்திற்கு வயித்துல ஈர துணியை சுத்திகோங்க... என்று சொல்லி இந்த செயலை நியாயபடுத்தலாம்.
கேட்பவர்கள் கூட அட சரிதானே என்று தோன்றலாம்.!
ஆனால் இது அரசின் அராஜகம் இல்லையா?
உழைப்பின் பயனை மறுக்க இவர்கள் யார்?
நேற்று ஒரு தோழர் கோபமாக ..."உலகம் முழுவதும் ஊரடங்கி இருக்கும் வேளையில் மக்களை பாதுகாக்க பல நாடுகளில் உள்ள அரசாங்கம் அவர்களுக்கு நிதியாக,நிவாரணமாக உதவிகளை செய்து வரும் நிலையில் இந்திய அரசு மக்களிடமிருந்து பிடுங்குகிறதே" என பதிவிட்டிருந்தார்.

அரசு ஊழியர்கள் ஏதோ வேற்று கிரக வாசிகள் போன்ற பார்வை மக்களிடையே இருக்கிறது.இதை ஆட்சியாளர்களும்,முதலாளிகளும்,ஊடகங்களும் மிக சாமர்த்தியமாக பயன்படுத்தி கொள்வதை பார்க்கலாம்.ஒவ்வொரு அரசு ஊழியரும் விவசாயி, தொழிலாளி வீட்டிலிருந்து தான் படித்து, பட்டம் வாங்கி,பரிட்சை எழுதி முட்டி,மோதி வேலைக்கு வருகிறான்.அவன் செய்யும் வேலைக்கு அரசாங்கம் கூலி கொடுக்கிறது.தனது மதிப்புமிக்க உழைப்பை செலுத்தி கூலி பெறுகிறான்.இதுதான் அரசுக்கும் அவனுக்கும் உள்ள உற்பத்தி உறவு.(சிலபேர் தங்களை சந்திரமுகியாகவே நினைத்துக் கொள்வார்கள் அவர்களை விட்டு விடலாம்) அப்படி உழைப்பை தரும் ஊழியர்களுக்கு அரசு தரவேண்டிய கூலியை தர மறுப்பது நியாமா?

இந்தியாவில் நியாயமாக தான் பெறும் ஊதியத்துக்கு ஒழுங்காக நயா பைசா பாக்கி இல்லாம பத்து சதம் முதல் முப்பது சதம் வரை வருமான வரி கட்டுபவர்கள் அரசாங்க, பொதுத்துறை ஊழியர்கள் மட்டுமே.
பெறுவதை விட இழப்பதே அதிகம்...சனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துல பல பேர் சம்பளம் முழுக்க வருமான வரி கட்டுவதற்கே போய்விடும்...
அரசாங்க ஊழியர் என்பதால் ரேசன் கிடையாது...ரேசன் கடையில் மானிய விலையில் மற்றவர்கள் அரிசி,பருப்பு வாங்கும் போது இவர்கள் மட்டும் வெளி மார்கெட்டுல அரிசி, பருப்பை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கும் நிலை.பேரிடர் காலங்களில் மற்றவர்களை போல் இவர்களும்,குடும்பமும் பாதிக்கப்பட்டாலும் எந்த நிவாரணமும் கிடைக்காது ஏனென்றால் இவர்கள் அரசு ஊழியர்கள்.பண்டிகை,திருவிழா காலங்களில் மற்றவர்கள் எல்லாம் குடும்பங்களோடு சுகித்திருக்க இவர்கள் டூட்டி பார்க்க வேண்டும்.
அரசியல்வாதிகள்,
ஆளுங்கட்சிகளின் கோபத்திற்கு முதல் பலிகடா ஊழியர்களே!
இப்போதும்...அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு,கொள்கைகளுக்கு அரசு ஊழியர்களே பலிகடா!
அரசின் சிக்கனத்திற்கும்,நெருக்கடியை எதிர் கொள்ளவும் எவ்வளவோ வழிகள் இருக்கே...
பெரிய முதலாளிகளும்,கார்ப்பரேட்டுகளும் செலுத்த வேண்டிய வருமான வரிகளை உடனே செலுத்த உத்திரவிடுங்கள்! அவங்க வைச்சிருக்கிற பாக்கி ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்...
வங்கிகளில் வாங்கிய திரும்ப செலுத்தாத கடன் 10 லட்சம் கோடியை இப்போது வசூல் செய்யாமல் எப்போது செய்ய போறீங்க?
முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிச் சலுகைகளை ஓராண்டுக்கு நிறுத்தி வையுங்கள் நியாயமாரே!
எல்லா பணக்காரர்கள் வீட்டுக்கும் வருமானவரி துறை ரெய்டு போலாமே!
அப்படியே பெங்களுருல, மும்பையில,போபால கட்சி தாவிய எம். எல். ஏ வீடுகளுக்கும் அவங்கள கூட்டிகிட்டு போனவங்க வீட்டுக்கும் ரெய்டு போகலாமா?
புதிய நாடாளுமன்ற கட்டிட பணி, புல்லட் ரயில் திட்டம், கங்கை தூய்மை திட்டம், போன்றவற்றை நெருக்கடி தீரும் வரை நிறுத்தி வைங்க!
இவையெல்லாம் செய்த பிறகும் நிதி தேவை எனில் எங்களிடம் வாருங்கள்...
எங்கள் உதிரத்தை தருகிறோம்...

- தர்மலிங்கம் (Dharma Salem)

;