சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த துரை வைகோ எம்.பி., தொழிற்சங்கத்தினர் நன்றி தெரிவிப்பு
திருச்சிராப்பள்ளி, ஜூலை 13- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சிஐடியு திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையத்தில் அரசுப் பேருந்து பயணிகள் வருகை தரும் இடத்திற்கு வந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அரசுப் பேருந்து பயணிகள் செல்லும் இடத்திற்கு வந்து, பயணிகளை அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். விமான நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு உள்ள இரண்டு வழி பாதையை ஐந்து வழி பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் கடந்த மாதம் மனு கொடுத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் அரசுப் பேருந்து, டெஸ்பேச்சில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில், சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஆண்டனி சுரேஷ், ஜங்ஷன் பகுதி தலைவர் நூருல்ஹாசன், பகுதி பொருளாளர் சையத் முஸ்தபா மற்றும் துணை நிர்வாகிகள், சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோவை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.