செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் அளித்திடுக கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் வலியுறுத்தல்

கோவை, ஏப்.9 –   தண்ணீரின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் விநியோகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ஆகிய பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. குறிப்பாக நலவாரியத்தில் பதிவு செய்த, பதிவு செய்யாத, புதுப்பிக்காத அனைத்து முறைசார தொழிலாளர்களையும் கண்டறிந்து அரசின் உதவி தொகை மற்றும் உணவு பொருட்கள் கிடைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறோம். மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் முறைசார தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பெரும்பகுதியினருக்கு உதவி தொகை மற்றும் உணவு பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனை உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு எந்த ஒரு தொழிலாளியும் இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற அக்கறையோடு மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். 

சாதாரண மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களை வாங்குவதற்கு வேறு வழியின்றி தெருவிற்கு வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் பாதியிலேயே எச்சரித்து திருப்பு அனுப்புகிற நிலை ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெகுமக்களை அதிருப்தி நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம். இதேபோல் மாவட்டம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் வெகு சிறப்பாக சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மக்கள் சேவையை மார்க்சிஸ்ட் கட்சி மனதார பாராட்டுகிறது, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இத்தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து காலை, மதியம் என இருவேளை உணவு மற்றும் தேவைக்கேற்ப பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வீட்டிலேயே இருப்பதாலும், தொடர்ந்து கை கழுவுவது, அதிக வெப்பம் போன்றவற்றின் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இந்நிறுவனங்களுக்கான தண்ணீர் தேவை இல்லாத நிலையில் இந்த குடிநீரை குடியிருப்பு பகுதிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இப்போதே பல பகுதிகளில் குடிநீருக்காக குடங்கள், தண்ணீர் கேன்களுடன் மக்கள் குடிநீர் வருகிற இடங்களுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. ஆகவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகத்தை கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;