திங்கள், நவம்பர் 23, 2020

tamilnadu

img

கொட்டித் தீர்த்த மழை.... கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல்மணிகள் அடித்துச் செல்லப்பட்ட அவலம்

தஞ்சாவூர்:
தஞ்சையில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வீணாகின.தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக இரண்டு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.இந்நிலையில் திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் சுற்று வட்டாரங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் சாலையில் கொட்டி வைத்துள்ளனர்.

இம்மழையால், வண்ணாரப்பேட்டை நேரடி நெல்கொள்முதல் நிலைத் தில், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் மழைத்தண்ணீரில் அடித்து கொண்டுசென்றது. இதனால் சாலை முழுவதும் நெல்மணிகளாக காட்சியளித்தது.இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், இந்தாண்டு தண்ணீர் திறந்து குறுவை சாகுபடி செய்தும் பயனில்லை. நேரடி கொள்முதல் நிலையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாலும், கொள்முதல் பணிகளில் விறுவிறுப்பு இல்லாததாலும் பல நாட்களாக நெல்லை சாலையில் கொட்டி வைத்து காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாள்களாக பெய்த மழையில் நெல்மணிகள் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டை வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும், ஏற்கனவே கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும்” என்றனர்.

;