வியாழன், நவம்பர் 26, 2020

tamilnadu

img

ஊடக ஊழியர்கள் வெளியேற்றம்... மறு பரிசீலனை செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

சென்னை:
விகடன் குழுமத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களில் 178 பேரை வெளியேற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இதுகுறித்து விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமிழ் நாட்டின் பாரம்பரிய ஊடகங்களில் ஒன்றான விகடன் குழுமத்திலிருந்து அதிரடியாக பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த எண்ணிக்கை 176 பேர் வரை அதிகரிக்கக்கூடும் என்ற செய்தி இடியாக எங்கள் இதயங்களில் இறங்கியுள்ளது.இந்த பேரழிவு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது தங்களுக்குத் தெரியும். இந்த பணி நீக்கம் தொழிற் சங்க சட்ட விதிமுறை களுக்கும் எதிரானதாகும்.பெயரிலேயே ‘ஆனந்த’ என்ற சொற்றொடரைத் தாங்கிய நிறுவனம், காலமெல்லாம் தமிழ் சமூகத் திற்கு மகிழ்ச்சியை கொண்டு சென்ற அதன் தூதுவர் களையே இன்று துக்க நிலைக்குத் தள்ளி உள்ளது யாராலும் சிந்தித்து பார்க்கமுடியாத ஒன்றாகும்.குரலற்றவர்களின் குரலாக ஒலித்தவர்களையே இன்று குரலற்றவர்களாக்கிவிட்டீர்கள். அதுவும், தங்களுக்கு ஏற்பட்ட அநீதியைக் கூட தாங்களே தட்டிக் கேட்க முடியாத அளவிற்கான நிலைமையை அவர்களுக்கு உருவாக்கி உள்ளீர்கள்.ஒரு பேரழிவு காலத்தில் யாரேனும் சுயவிருப்பத் துடன் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைக்க முடியுமா? தாங்கள் மேற்கொண்டுள்ள யுக்தியானது, “நான் உன்னைக் கொல்ல மாட்டேன். ஒழுங்கு மரியாதையாக நீயே,என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி தந்து, தற்கொலை செய்து கொள்’’என்பதற்கு ஒப்பானது.தமிழ்ச் சமூகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய அம்சமே உங்களின் இந்த யுக்தியான அணுகுமுறை தான். இது, இது நாள் வரை விகடன் கட்டிக் காத்துவந்த பாரம்பரியப் பெருமைகளை – தங்கள் தாத்தா எஸ்.எஸ்.வாசன், தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேணி வளர்த்த அறம் சார்ந்த விழுமியங்களை – அரை நாழிகையில் படுகுழியில் தள்ளிவிடும் பாவகாரியமாகும்.இந்த அவப்பெயர் தங்கள் நிறுவனத்தை மேலும் தலையெடுக்க முடியாத அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும். ஆகவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனத்தின் கடந்த காலவளர்ச்சிக்கு துணை நின்றவர்களை தூக்கி எறிந்துவிடவேண்டாம் என்று உரிமையுடன் வேண்டுகிறோம்.

ஏனெனில்,கடந்த காலங்களில் விகடனுக்கு அரசியல், அதிகார மட்டங்களில் இருந்து நெருக்கடிகள் உருவான நேரத்தில் எல்லாம் களத்திற்கு வந்து போராடி, துணை நின்றவை பத்திரிகையாளர் அமைப்புகளே என்பதை யாவரும் அறிவர்.வரலாற்றில் முன் எப்போதுமில்லாத ஒரு சோதனை கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சோதனையை அனைவரும் ஒன்றிணைந்து எதிர் கொண்டு மீளவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால்,கொத்து,கொத்தாக ஊழியர்களை தூக்கி வெளியில் வீசுவதை எப்படி ஏற்க முடியும்? குறைந்தபட்சம் ஆறுமாத அவகாசம் தாருங்கள். அதற்குள் நிலைமை மாறவாய்ப்புள்ளது. இல்லையெனில் அப்போது முடிவெடுங்கள். ஆனால், தற்போதுள்ள சூழல் வெளியேற்றப்படும் ஊழியர்கள் ஆறுமாதத் திற்கு எங்குமே எந்த வேலையையும் பெறமுடியாது. ஏனெனில், யாரும், எங்கும் வேலை தரும் நிலையில் இல்லை! எனவே தாங்கள் ஊழியர்களை வெளியேற்றும் நிலைமையை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவீர்கள் என்று மிகவும் நம்பிக்கையுடன் எங்கள் வேண்டுகோளை சமர்பிக்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அந்த கடிதத்தில் எல்.ஆர்.சங்கர்  (பொதுச் செயலாளர் சென்னை பத்திரிகையாளர் சங்கம்), பாரதிதமிழன் (இணைச் செயலாளர் சென்னை பத்திரிகையாளர் மன்றம்), ஆர்.ரங்கராஜன் (தலைவர் சென்னை நிருபர்கள் சங்கம்), பி.எஸ்.டி.புருஷோத்தமன் (தலைவர் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்), எல்.சீனிவாசன் (செயலாளர் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்  கலைஞர்கள் சங்கம்), பி.சிங்காரவேலன் (பொருளாளர் தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம்), அ.ஜெ.சகாயராஜ் (தலைவர் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்), பிரபுதாசன் (தலைவர் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம்) ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
 

;