சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

வெறுப்பு அரசியலின் வேர்களும் விதைகளும்

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதும், தங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டதாகக் கருதினால் அறவழியில் போராடுவதுமே ஜனநாயகத்தின் அடிப்ப டைகள். ஆனால் சமீபமாக தலைநகர் தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்த்துள்ளன. தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் காவல்துறை அத்துமீறி நுழைந்தது. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பலின் வன்முறைத் தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதே தில்லியில் நடை பெற்ற இரு வன்முறைச் சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஜனவரி 29 அன்று தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 17 வயதுச் சிறுவன் “இதோ உங்களுக்கான சுதந்திரம்” என்று கூச்சலிட்டபடி போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அதுகுறித்து வெளிப்படையாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த சம்பவம்! மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக்கில் கடந்த 40 நாள்களாகப் போராட்டம் நடந்து வருகிறது. பிப்ரவரி 1 அன்று ஷாகீன்பாக்கில் கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மாற்றுக் கருத்துக்களையும் மாற்று அரசியலையும் சகித்துக் கொள்ள முடியாத வன்முறை மனநிலையையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

மத அடிப்படைவாதமும் நாசிசம் போன்ற இன வெறுப்புச் சித்தாந்தங்களும் செல்வாக்கு பெற்ற மேற்கத்திய நாடுகளில் தனி நபர்களின் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதை அறிந்திருக்கிறோம். அத்தகைய கலாச்சாரம் இந்தியா விலும் துளிர்விட்டிருக்கிறது என்பது கவலையையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்த வன்முறைக்கான துணிச்சலை உருவாக்கியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பது இன்னும் அவமானகரமானது. 

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் “போராட்டக்காரர்களைச் சுடுங்கள்” என்று பேசியதற்காக மூன்று நாள்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டார். இன்னொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் வெர்மா “போராட்டக்காரர்கள், உங்கள் வீடுகளில் புகுந்து பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்று பேசியதற்காக நான்கு நாள்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஆம் ஆத்மிகாரர்கள் போராட்டக்காரர்களுக்கு பிரியாணி வழங்கு கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டியது தோட்டாக்கள்தான்” என்று பேசி யுள்ளார். பாஜகவின் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வரை இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுவது ஆரோக்கியமானதில்லை.

சமீபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி பிரதமர் மோடி “நாம் விவாதத்திலிருந்து நம்பிக்கை நோக்கி நகர வேண்டிய தருணம்” என்று பேசியிருக்கி றார். ஆனால் வெறுப்பரசியலைத் தூண்டும் பாஜகவினர் பேச்சுகளோ மோடியின் பேச்சுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிராக உள்ளன. குடிமக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்பும் மோடி, இந்த வெறுப்புப் பேச்சுக்களுக்கு  முற்றுப்புள்ளி வைக்க முயல்வார் என்று நம்புவோம். 

ஆனந்தவிகடன் தலையங்கம்

;