world

img

பெரும் போராட்டங்களுக்குத் தயாராகிறது பிரிட்டன் முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி

லண்டன், ஜூன் 16- கொரோனா, உக்ரைன் நெருக்கடி மற்றும் அமெரிக்காவின் தூண்டுதல்கள் ஆகியவற்றால் கடுமையான பணவீக்கத்தைச் சந்தித்து வரும் பிரிட்டனில் பெரும் போராட்டங்களுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் தயாராகி வருகிறார்கள். மக்கள் சந்திப்பு, தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் என்று பல்வேறு வழிகளில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துக்களை சேகரித்து வந்தது. நெருக்கடி பற்றி மக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றியும், அடுத்த கட்டமாக எத்தகைய வழிகளைக் கையாள வேண்டும் என்றும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக அக்கட்சியின் அரசியல் குழுவின் கூட்டமும் கூடி விவாதித்திருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆன்டி பெய்ன் அறிக்கையொன்றை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினார். தனது உரையின் தொடக்கத்திலேயே வலதுசாரி அரசு மற்றும் பெரு நிறுவனங்களின் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அண்மைக்காலத்தில் தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கைகளை வரவேற்றுப் பேசினார். அனைத்துப் பகுதி தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர், “விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சியில் உள்ளவர்களோ புதிய சட்டங்கள் மூலமாக மக்களைப் பிரித்து போராட்டங்களை மட்டுப்படுத்த முயல்கிறது. அவர்களுக்குள்ளும் முரண்பாடுகள் உள்ளன. போரிஸ் ஜான்சன் இனிமேலும் நமக்கு உதவுவாரா என்று அவர்களுக்குள் விவாதிக்கிறார்கள். மோதிக் கொள்கிறார்கள். ஆனால் தங்களுக்கு எதிராக சவால் விடும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்” என்றார். சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் தொழிலாளர்கள் பேரணியை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பங்கேற்பாளர்களைத் திரட்டுவது பற்றி முன்மொழிந்த அவர், “நமக்கு தொழிற்சங்கங்கள், தொழில் அமைப்புகள், மக்கள் பேரவைகள், தொழிலாளர் கட்சியின் அமைப்புகள், பெண்கள் மற்றும் ஓய்வூதியர் பிரச்சாரங்கள், சுகாதார மற்றும் வீட்டுவசதிப் போராளிகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைத் திரட்ட வேண்டும். இந்தப் போராட்டங்கள் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் நீடிக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்” என்றார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராபர்ட் கிரிப்த்ஸ், “உக்ரைனின் இறையாண்மை மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் ஆகியவற்றை மதிக்கும் வகையில் நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.

;