மேற்கு சீனாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9ஆக பதிவாகியுள்ளது.
கிங்காய் மாகாணத்தில் உள்ள மென்யுவான் தன்னாட்சி ஹுய் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. மாகாண தலைநகரான ஜினிங்கில் தென்கிழக்கில் 140 கிலோமீட்டர்(85 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிங்காய் மற்றும் அண்டை மாநிலமான கன்சு மாகாணத்தில் உள்ள மீட்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சுமார் 500 மீட்புப் பணியாளர்களை நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அனுப்பியுள்ளதாக சீன அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை மாகாணங்களில் இருந்து மேலும் 2,260 மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.