world

img

பிரிவினைவாதிகளுடன் கைகோர்க்க வேண்டாம்

பெய்ஜிங், மார்ச் 30- ஒரே சீனா என்ற கொள்கைக்கு எதிராக, தைவான் பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து இயங்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே சீனாதான் என்றும், தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் என்றும் உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால் ஆசியப்பகுதியில் பதற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவால் தொடர்ந்து தைவான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய நாடாக இருந்தாலும் அதன் தலையில் ஏராளமான ஆயுதங்களையும், தளவாடங்களையும் அமெரிக்கா ஏற்றி வருகிறது. சீனக் கடற்பகுதிக்குள் அடிக்கடி அத்துமீறித் தனது போர்க்கப்பல்களையும் அமெரிக்கா அனுப்பிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் தைவானுக்கு இருந்த ஆதரவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. 1960களில் தொடக்கத்தில் தைவானுக்குதான் நிறைய நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் தற்போது வெறும் 13 நாடுகள் மட்டுமே தைவானின் பக்கம் நிற்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட அனைத்துமே மிக மிகச்சிறிய நாடுகளாகும். அண்மையில் தைவானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வது என்ற ஹோண்டுராசின் முடிவு, பதற்றத்தைத் தூண்ட முயற்சித்து வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதனால், தனது சதிவேலைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது. தைவானின் தலைவரான டிசாய் இங்-வென் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையின் தலைவர் சந்திப்பார் என்று அறிவித்துள்ளனர். சீனாவின் பகுதியான தைவானைச் சேர்ந்தவரை, சீன அனுமதியில்லாமல் அரசு சந்திப்பாக மாற்றுவது இரு நாடுகளின் உறவுகளைப் பாதிக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போதையை நிகழ்வுகளை சீனா மிகவும் உன்னிப்பாக உற்றுக் கவனித்து வருகிறது. நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் உறுதியான நிலைபாட்டை நாங்கள் எடுப்போம். பிரிவினைவாதிகளுக்கு அமெரிக்கா தனது மண்ணில் வரவேற்பு அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. செல்கின்ற வழியில் ஏதோ ஓய்வு எடுப்பதற்காக டிசாய் இங்-வென் அமெரிக்காவில் இறங்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

தவறுகள் தவறுகள்தான்

மேலும் பேசிய அவர், “நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். இதுபோன்று தைவானைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு எந்தப் பெயரில் செல்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, குறிப்பாக அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ள, ஒரே சீனா என்ற கொள்கைக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது. சில அமெரிக்க அதிகாரிகள் இது போன்றவை ஏற்கனவே நடந்துள்ளன என்று கூறியுள்ளனர். கடந்த காலத் தவறுகள் தற்போதைய தவறுகளை நியாயப்படுத்த முடியாது. மீண்டும், மீண்டும் தவறுகளைச் செய்வதால் அவை சரியானதாக மாறிவிட முடியாது” என்று தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, “தைவானின் மூலமாக சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ராணுவத்தளத்தை தைவான் பகுதியில் விரிவுபடுத்த அமெரிக்கா முயற்சிக்கும். எதையும் எதிர்கொள்ளும் நிலையில் சீனா தயாராக இருக்கிறது” என்றார்.