world

img

சொந்தக்காலில் நிற்போம் தொழில்நுட்ப வளர்ச்சியில் கியூபா உறுதி

அமெரிக்காவின் சட்டவிரோதத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை மீறி தொழில்நுட்ப வளர்ச்சியில் சுயமான முயற்சிகளை மேற்கொண்டு சாதிப்போம் என்று கியூபாவின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கியூபாவின் கணினி அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அந்நாட்டின் தொலைதொடர்பு நிறுவனமான எடிஸ்காவுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளான மொபைல் செயலிகளை உருவாக்கியிருக்கின்றனர். இதில் டுடஸ் என்ற செய்திகளை அனுப்பும் செயலி முக்கியமான உருவாக்கமாகக் கருதப்படுகிறது.  பெரும் நிறுவனங்கள் தயாரித்துள்ள செயலிகளுக்கு இணையாக இது இயங்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் செயல்பட்டு வரும் பல்வேறு செயலிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கியூபா பயன்படுத்த முடியாமல் அமெரிக்கத் தடைகள் தடுத்து வருகின்றன. அதையும் மீறி, கியூபாவுக்கு அந்த வசதிகளைத் தரும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் இயங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலையால், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டில் சொந்தக் காலில் நிற்க வேண்டிய கட்டாயமும் கியூபாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய டுடஸ் திட்டத்தின் தலைவரான ஹானியல் காசெரெஸ், "கியூப மக்களின் தேவைகளுக்கான வடிவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. தனது சொந்தத் தகவல்களையும், ஆதரவு செயலிகளையும் கியூபாவுக்காக தயாரிக்க வேண்டும். கியூபாவுக்கு எதிரான  தடைகள் மூலம் அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்கா தடுத்து விட்டது" என்று கூறியுள்ளார். பிக்டா என்றொரு சேவையையும் கியூப வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது உள்ளிட்ட சேவைகளைத் தர முடியும்.

புதிய செயலிகளை உருவாக்கும் லியோடானிஸ் பெர்னால், "சர்வதேச அளவில் ஏராளமான தளங்கள் உள்ளன. அதில் எல்லாம் எங்கள் படங்களை திரையிட முடியவில்லை. அமெரிக்காவின் தடைகள் எங்களைத் தடுக்கின்றன. ஆனால், திரையிடலை வர்த்தக ரீதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடு எங்களிடம் இருக்கிறது" என்கிறார். இவர் பிக்டா செயலியின் தகவல் சேமிப்புத் துறையில் பணியாறிறிக் கொண்டிருக்கிறார். டுடஸ் மற்றும் பிக்டா ஆகிய இரண்டு செயலிகளும் கியூபாவின் ஆப்க்லிஸ் என்ற செயலிகள் ஆன்லைன் சந்தையில் கிடைக்கின்றன.

பெரும் முன்னேற்றம்

வரும் ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைப் பார்க்கப் போகிறோம் என்று ஆப்க்லிஸ் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் 31 வயதான யாய்செலிஸ் ராமிரேஸ் கூறுகிறார். செயலிகளை உருவாக்கும் வல்லுநர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வர்த்தக ரீதியிலான வருமானம் கிடைக்கும் புதிய மாதிரி ஏற்பாடுகளை செய்யப் போகிறார்கள். செயலிகளை தரவிறக்கம் செய்வதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. கியூப வங்கிகளால் விநியோகிக்கப்படாத வங்கி அட்டைகளை வைத்து பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்று ராமிரெஸ் குறிப்பிடுகிறார்.

தொலைத் தொடர்பு நிறுவனமான எடிஸ்காவின் இயக்குநர்களில் ஒருவரான ஹெக்டர் லூயிஸ் மோரா, "தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது கியூபா கண்டு வரும் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. நாட்டுக்குத் தேவையானவற்றை உருவாக்க எங்களிடம் போதுமான அளவுக்கு திறமை இருக்கிறது" என்று உறுதியாகத் தெரிவிக்கிறார். கியூபாவில் 75 லட்சம் மக்கள் இணைய தளங்கள் மூலமாகத் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களில் 80 விழுக்காட்டினர் தங்கள் அலைபேசி வாயிலாக இணைய தளங்களைப் பார்வையிடுகிறார்கள்.

முழுமையான மின்னணு நிர்வாகத்தை நோக்கி கியூப அரசுத்துறைகள் சென்று கொண்டிருக்கின்றன. தடைகளை மீறி சொந்த தொழில்நுட்பங்கள் வாயிலாக அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளப்போகிறோம் என்று ராமிரெஸ் தெரிவிக்கிறார்.

 

;