world

img

கொலம்பியாவில் முதல் முறையாக இடதுசாரி ஜனாதிபதி?

பொகோடா, மே 27- மே 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு நிற்கும் குஸ்தவோ பெட்ரோ முதலிடத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலம்பியாவின் ஜனாதிபதித் தேர்தலில் 3 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். பதிவாகும் வாக்குகளில் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார். முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறும். முதல் சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பெறும் வேட்பாளர்கள் இந்தச் சுற்றில் போட்டியிடுவார்கள். இதுவரையில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ 40 விழுக்காடு வாக்குகள் வரையில் பெறுவார் என்று வெளியாகியுள்ளன. தேர்தல் பரப்புரைகள் நிறைவு பெற்றுள்ளன. நிறைவு நாளன்று தனது

ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பெட்ரோ, “என்னுடை பெயர் குஸ்தவோ பெட்ரோ. உங்கள் ஜனாதிபதியாக நான் விரும்புகிறேன். தேர்தலில் வேட்பாளராக நிற்கிறேன்” என்று கூறியபோது, பெரும் ஆரவாரம் எழுந்தது. சமத்துவத்தை உருவாக்க தனியான துறை, பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, நீடித்து நிற்கக்கூடிய நாட்டு வளர்ச்சி உள்ளிட்டவை குறித்த வாக்குறுதிகளை வெளிப்படுத்தினார்.  அவருக்கு அடுத்தபடியாக, வலதுசாரி வேட்பாளர் பெடரிகோ குடிரெஸ் 24 விழுக்காடு வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஒருவேளை, இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ பெரும்பான்மை வாக்குகளைப் பெறாவிட்டால், அவரோடு இரண்டாவது சுற்றில் குடிரெஸ்தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வேட்பாளர்களுக்கு விழும் வாக்குகளை இரண்டாவது சுற்றில் எப்படிப் பெறுவது என்பதில்தான் வலதுசாரிகளின் கவனம் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ரொடோல்போ ஹெர்னாண்டஸ் மூன்றாவது இடத்தைப் பிடிக்கவிருக்கிறார். அவருக்கு 18 விழுக்காடு வாக்குகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களோ, இவர் இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் என்றும், இரண்டாவது சுற்றில் குஸ்தவோ பெட்ரோவுடன் போட்டியிடுவார் என்றும் சொல்கிறார்கள். பெருமபான்மை கிடைக்கிறதோ, இல்லையோ, முதல் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோதான் முதலிடத்தைப் பிடிப்பார் என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள்.  இரண்டாவது சுற்றுத் தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெறும்.

;