world

img

கம்யூனிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல; பிலிப்பைன்ஸ் முயற்சிக்கு நீதிமன்றம் தடை

மணிலா, செப்.26- பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கி வரும் கம்யூனிஸ்டுகள் மற்றும் இடதுசாரிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த விரும்பிய அந்நாட்டு அரசின் முயற்சிக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. வலதுசாரி அரசுக்கு எதிராகப் போராடி வரும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் ஆயுதந்தாங்கிய கொரில்லா அமைப்பை பயங்கரவாதிகள் என்று அறிவிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. மக்களுக்காகப் போராடி வரும் அமைப்புகளை அழிக்கவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சட்டப்படி இயங்கும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் கொரில்லாக்களுக்கு ஆதரவாக இயங்குகிறார்கள் என்று கூறி, பல்வேறு அமைப்புகளுக்கு தடை கோரி அரசு மனு செய்தது. அரசின் முயற்சியை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.  பயங்கரவாதம் வேறு; கிளர்ச்சி வேறு மணிலாவின் மண்டல நீதிமன்றத்தின் நீதிபதி மர்லோ மக்டோசா மலகார் அளித்துள்ள தீர்ப்பில், “மாற்றுக் கருத்துக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையிலேயே அவர்களை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்துபவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது கவலையளிக்கிறது. பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சி ஆகிய இரண்டுமே வன்முறையைக் கையாளக்கூடியவையாகும். ஆனால், கிளர்ச்சிக்காரர்கள் அரசைக் குறிவைத்து இயங்குவார்கள் அல்லது அதன் கிளை அமைப்புகளைக் குறி வைப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தீர்ப்பில் மேலும், “கிளர்ச்சியில் அரசின் எதிர்ப்பாளர்கள் அரசின் அங்கமாக இருப்பவர்களுக்கு எதிராக, குறிப்பாக ராணுவம் மற்றும் காவல்துறையைக் குறி வைப்பார்கள். பயங்கரவாதம் என்பது அப்பாவி மக்களைக் குறிவைத்து இயங்கும். அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்குவது அவர்களின் நோக்கமாக இருக்கும். தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைப்புகள் அப்படிப்பட்ட வன்முறை நடவடிக்கைகளில் இறங்கியதாகத் தெரியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

அரசைக் குறை கூறுபவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்ற நிலை உருவாக்க நினைக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கு இது தோல்வி என்று இடதுசாரி அமைப்புகள் கூறியுள்ளன. ஆனால், பிலிப்பைன்ஸ் அரசோ, தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. தீர்ப்பு குறித்து இடதுசாரி அமைப்புகளின் கூட்டணித் தலைவர்களில் ஒருவரான ரெனடோ ரெயெஸ் கூறுகையில், “புரட்சிக்காரர்களையும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்துவது தவறானது. இது எதிர்விளைவுகளை உருவாக்கும். ஆயுதந்தாங்கி நடக்கும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்புகளையும் இழந்து விடுவோம்” என்றார். இது பயங்கரவாதமல்ல 2019 முதல் 2020 வரையில் நடந்த சில சம்பவங்களைப் பட்டியலிட்ட பிலிப்பைன்ஸ் அரசு, அவை பயங்கரவாத நடவடிக்கைகள் என்று நீதிமன்றத்தின் முன்பாகக் கூறியது. ஆனால் அவையனைத்துமே,  சிறு சம்பவங்கள் என்றும், நாட்டின் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள “பரந்த அளவிலான” அல்லது “அசாதாரண” நடவடிக்கைகள் என்ற வரையறைக்குள் வரவில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. அரசுத்தரப்பில் கொண்டு வரப்பட்ட சாட்சிகளையும் நீதிமன்றம் நம்பவில்லை. கறுப்பு உடையணிந்திருந்தார்கள் என்பதைத் தவிர அரசு சாட்சிகளால் வேறு எந்த நம்பத்தகுந்த தகவல்களையும் தர முடியவில்லை. கறுப்பு உடை என்பது மட்டுமே அவர்களைக் கொரில்லாக்கள் என்று அடையாளம் காட்ட முடியாது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. சட்டப்பூர்வமாக இயங்கி வரும் பல்வேறு இடதுசாரி அமைப்புகளைத் தடை செய்ய மேற்கொண்ட முயற்சியில், ஆயுதந்தாங்கிப் போராடும் அமைப்புகள் கூட மக்களுக்காகவே போராடுகின்றன. அவை பயங்கரவாத அமைப்புகள் இல்லை என்று நீதிமன்றம் சொல்வதில்தான் முடிந்துள்ளது.

;