கேமரூனின் தலைநகர் யவுண்டேவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சுமார் 14 பேர் இறந்ததாக அப்பகுதியின் ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் தலைநகர் யவுண்டே ஈரமான நகரங்களில் ஒன்றாகும், மேலும் இது செங்குத்தான, குடிசைகள் நிறைந்த மலைகளால் ஆனது. வெள்ளத்தால் அந்த பகுதியின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறன்று யுவண்டேவில் 20 மீட்டர் உயரமுள்ள மண் அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவர் இடிந்து அவர்கள் மேல் விழுந்தது.
இதில், இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களில் குறைந்தது 14 பேர் பலியானதாக அப்பகுதி ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார்.
மீட்புப் படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் புதைந்த சடலங்கள் மீட்கப்பட்டு மத்திய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.