யாருக்கும் பசி இல்லையாம் : இனப்படுகொலை குற்றவாளி நேதன்யாகு
காசாவில் பட்டினி கிடையாது. காசாவில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்று இனப்படுகொலை குற்றவாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அப்பட்டமாக பொய் பேசியுள்ளார். மேலும் மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் நுழைய நாங்கள் உதவுகிறோம். பட்டினி இருந்திருந்தால் அங்கு வசிப்பவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள பஞ்சத்தால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஒரே வாரத்தில் 50 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனில் உள்ள ஒரு சிறைச்சாலை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 16 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள டிரம்ப், ரஷ்யா 12 நாட்களுக்கு உக்ரைனுடனான போரை நிறுத்த வேண்டும்; இல்லை என்றால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதுடன் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதற்குமுன் 50 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் தற்போது அதனை 12 நாட்களாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா-அமெரிக்கா இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை
சீன-அமெரிக்க வணிக உறவுகளில் இன்னும் நீடித்து வருகிற தடைகளை நீக்கும் முயற்சியாக இரண்டாவது நாளாக ஸ்வீடனில் அந்நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவில் சீன முதலீடு, சீனச் சந்தையில் அமெரிக்க வணிகங்களின் அணுகல், ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய்யை சீனா வாங்குவது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு தேவையான சிப்புகள் வாங்குவது உள்ளிட்டவை அடங்கும் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் அமைச்சர்களுக்கு நெதர்லாந்து தடை
இரண்டு இஸ்ரேல் அமைச்சர்களுக்கு நெதர்லாந்து தடை விதித்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியதற்காகவும், அம்மக்களுக்கு உணவு வழங்காமல் பட்டினிப் போடவும், இனப்படுகொலை செய்யவும் அழைப்பு விடுத்ததற்காகவும் இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், ராணுவ அமைச்சர் இடாமர் பென் க்விர் ஆகிய இருவரும் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடைசெய்யும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
அமெரிக்காவோ இஸ்ரேலோ மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரான் இன்னும் உறுதியாக பதிலடி கொடுக்கும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் ஸ்காட்லாந்திற்கு சென்ற போது, ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சியை அழித்துவிட்டோம். அவர்கள் மீண்டும் அதனை துவங்கினால் விரல் அசைப்பதை விட வேகமாக அதை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.