பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக பாசிச எதிர்ப்புக் குழு போராட்டம் லண்டன், செப். 14- பிரிட்டனில் தீவிர வலதுசாரிகளால் வெளிநாட்டி னருக்கு எதிராக இனவெறி பிரச்சாரம் தீவிரமாக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன் வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் குடியேறு வதற்கு எதிராக ‘யுனைட் தி கிங்டம்’ என்ற பெயரில் நடத்திய பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். டாமி ராபின்சன் கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமிய வெறுப்பையும் புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு எதிரான வெறுப்பையும் மக்களிடையே விதைத்து வரும் மிக மோசமான பிற்போக்கு வலதுசாரி ஆவார். அண்மைக் காலமாக அவரது வலதுசாரி அரசியல் போக்கு தீவிரமடைந்து உள்ளது குறிப்பிட்ட தக்கது. வலதுசாரிகளின் பேரணியில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக கோசம் எழுப்பியதுடன் அம்மக்கள் பிரிட்டன் மக்களின் தேசிய அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூப்பாடு போட்டனர். வலதுசாரிகள் நடத்திய இந்த பேரணிக்கு எதிராக ‘பாசிசத்துக்கு எதிரான பேரணி’ என்ற போராட்டத்தை இனவெறிக்கு எதிரான 5,000 க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து நடத்தியுள்ளனர்.
