தைவான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் கடந்த 2 நாட்களில் 2ஆவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. அந்த வகையில் தைவான் நாட்டின் கிழக்கே தைதுங் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 24 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் தைப்பே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலநடுக்கம் தைப்பே நகரில் இருந்து தெற்கே 182 கி.மீ. தொலைவிலும், 30 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.