world

img

காலத்தை வென்றவர்கள் : ரஷ்யக் கவிஞர் மாயகோவ்ஸ்கி பிறந்த நாள்....

ரஷ்யக் கவிஞர் மாயகோவ்ஸ்கி 1893ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் நாள் பிறந்தார். 1913 ஆம் ஆண்டு‌ டிசம்பரில் ரஷ்யக் கவிஞர் ஒருவர் ரஷ்ய எதிர்காலவாதத்தின் முக்கியக் கவிஞர்களோடு சிம்ஃபெரொபோல், செவாஸ்டோபோல், ஒடெஸ்ஸா ஆகிய நகரங்களில் கவிதை வாசிப்புக்களை நடத்தினார். தானே தைத்துக் கொண்ட மஞ்சள் சட்டையை அணிந்தபடி அந்தக் கவிஞர் மேடையில் தோன்றிய போதெல்லாம் கூடி இருந்த கூட்டத்தார் பரவச நிலையை அடைந்தனர் என்றும் சோவியத் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் உணர்ச்சி வேகம் இருந்தது என்றும் அக்காலப் பதிவுகள் காட்டுகின்றன.

அந்தக் கவிஞரின் பெயர் விளாடிமிர் விளாடிமிரோவிச் மாயகோவ்ஸ்கி. மாயகோவ்ஸ்கி கம்யூனிசச் சித்தாந்தத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டார் என்றும் அவர் கவிதைகள் வெறும் பிரச்சாரம் என்றும் சில விமர்சகர்களிடையே அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனால் மாயகோவ்ஸ்கி அற்புதமான எழுத்தாளர். நாடகம், இதழியல், தத்துவம், கவிதை, ஓவியம் என்ற பலதுறைகளில் கவனிக்கத்தக்கப் பேராற்றல் உள்ளவராகத் திகழ்ந்தவர். ரஷ்ய எதிர்காலவாதத்தின் தந்தை என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர். ரஷ்ய எதிர்காலவாதம் 1909ல் இத்தாலிய கவிஞர் ஃபிலிப்போ மாரினெட்டி வெளியிட்ட எதிர்காலவாதத்தின் அறிக்கையில் உள்ள கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது. எதிர்காலவாதம் பழைய அழகியல் கோட்பாடுகளை மறுத்து வேகம், தொழில்நுட்பம், இயந்திரமயம், வன்முறை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை புதிய அழகியல் கோட்பாடுகளாக முன்மொழிந்தது.

மாயகோவ்ஸ்கி இந்த அழகியல் கொள்கையைத் தனதாக்கிக் கொண்டார். 1913ல் ரஷ்ய படைப்பாளிகள் வெளியிட்ட ரஷ்ய எதிர்காலவாதத்தின் முக்கிய ஆவணமான ‘பொது ரசனையின் முகத்தில் ஓர் அறை’ என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் மாயகோவ்ஸ்கியும் ஒருவர். வேகத்தையும் தொழில் வளர்ச்சியையும் கொண்டாடிய எதிர்காலவாத அழகியல் அப்போதுதான் ரஷ்யாவில் நிறைவேறியிருந்த கம்யூனிஸ புரட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. அதனால் அவர்களும் மாயகோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களைக் கம்யூனிஸ எழுத்தாளர்களாகத் தத்து எடுத்துக் கொண்டார்கள். மாயகோவ்ஸ்கியின் கவிதைகள் எதிர்காலவாதத்தின் அழகியலை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் மொழியையும் படிமங்களையும் பயன்படுத்துபவை. மாயகோவ்ஸ்கியின் “கால்சட்டைக்குள் மேகம்” என்ற கவிதை ரஷ்ய எதிர்காலவாதத்தின் மிக முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.இவர் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்