காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய காசாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 41, 252 போர் கொல்லப்பட்டுள்ளனர். 95,497 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,139 ஆக உள்ளது. அதே சமயம் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக அக்டோபர்-7இல் இருந்து இதுவரை காசா பகுதி மற்றும் வெஸ்ட் பேங்கில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், 17,772 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டுமே உண்கிறார்கள் என்றும் காசாவுக்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு அவசர உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.