world

img

நேபாளம்: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழப்பு

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடக தளங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, ஆயுதக் காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதில், சீனாவின் டிக் டாக் நிறுவனம் மட்டும் பதிவு செய்திருந்தது.

இதை தொடர்ந்து, யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

காத்மாண்டுவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த அந்நாட்டு ஆயுதக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.