world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஜப்பான் ஆளும் கட்சி  தலைவர் பதவிக்கு போட்டி 

ஜப்பானில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி யின் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் வெளியுற வுத்துறை அமைச்சருமான தோஷிமிட்சு மோட்டெகி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக உள்ள பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையில் கடந்த சில தேர்தல்களில் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் கட்சி க்குள் அழுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மோட்டெகி அப்பதவிக்கு போட்டியிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

நேதன்யாகுவை பதவியில் இருந்து  நீக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் 

நேதன்யாகுவை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று இஸ்ரேலின் எதிர்க்கட்சியான டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவர் யாயிர் கோலான்  கூறியுள்ளார்.  மேலும் அவர் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ளார் எனவும் பணயக்கைதி களை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் நேதன்யாகு நாசப்  படுத்துகிறார், போரை முடிவுக்குக் கொண்டு வரவும் நாட்டை அவசர நிலையில் இருந்து மீட்க வும் அவர் விரும்பவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.  

புடினுடன் மீண்டும் பேச்சுவார்த்தை   டிரம்ப் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் இந்த வாரம் மீண்டும் புதிய சுற்று பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சு வார்த்தை உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் பற்றியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் ரஷ்யா மீது மீண்டும் தடைகளை விதிப்பேன் என டிரம்ப் பேசியிருந்தார். ஆயினும் இந்த சமாதான முயற்சிகளுக்காக டிரம்ப் நிர்வாகத்தை ரஷ்யா பாராட்டியுள்ளது. 

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக  பெல்ஜியத்தில் மாபெரும் பேரணி 

பெல்ஜியத்தில் 1.2 லட்சம் மக்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். இஸ்ரேல்-காசா போர் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதால் அதன் மீதான நம்பகத்தன்மை “சரிந்து வருகிறது” என பெல்ஜியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய சில நாட்களில் இந்த பேரணி நடைபெற்றுள்ளது. மக்கள் போராட்டத்தின் காரணமாக பெல்ஜியம் இஸ்ரேல் மீது சில தடைகள் விதித்துள்ளதுடன் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாகவும் அறிவித்துள்ளது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  ஐ.நாவுக்கு இடையே ஒத்துழைப்பு

ஐ.நா அவை மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு (SCO) இடையேயான ஒத்துழைப்புக்கான தீர்மானம் ஐ.நா. பொது அவையில் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பு” என்ற பெயரில் சீனாவால் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்திற்கு ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் பெண்களை மேலும் துன்பப்படுத்தும் பழமைவாதம்

காபூல்,செப்.8-  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கா னிஸ்தானில் ஆயிரக்கணக்கான பெண்கள் பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் காரணமாக மேலும் பல துன்பங்களுக்கு ஆளாகி யுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி யமைத்த பிறகு பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு பெண் தன்னார்வத் தொண்டு நிறு வனப் பணியாளர்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காக் களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட ஆணின் துணை இல்லாமல் பெண்கள் செல்லக்கூடாது என கூறியது. பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கல்வி கற்பதையும் தடுத்துள்ளது. இவ்வாறு பெண்களது சுதந்திரம் முழுமையாக பறிக்கப்படும் வகையில் பழமைவாத ஆணாதிக்கத்தின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தலிபான் அரசு.   மனிதாபிமான அதிகாரிகள், சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், இந்த விலக்கு போதுமானதாக இல்லை. அவசரகால நிலையில் அதிகப் பெண்  பணியாளர்களை ஈடுபடுத்த இவை உதவ வில்லை என ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு உதவச் செல்லும் பெண் செவிலியர்கள் ஆண் பாது காவலர் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, ஆப்கானிஸ்தானில் பெண் சுகாதாரப் பணியா ளர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்து மாறும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, அவர்கள் துணைக்கு ஆண் பாதுகாவலர் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தலிபான் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் ஆப்கானிஸ் தான் துணைப் பிரதிநிதி டாக்டர் முக்தா ஷர்மா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பெண் பணியாளர்களின் பற்றாக்குறை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. சுகாதா ரத்துறை ஊழியர்களில்  சுமார் 90 சதவீதம் ஆண்கள், மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே பெண்கள் அவர்களிலும் பெரும்பாலும் செவிலி யர்கள் அல்லது மகப்பேறு செவிலியர்களாக மட்டுமே உள்ளனர்.  போதிய பெண் மருத்துவர்கள் இல்லை. அவர்களால் பெரிய பாதிப்புகளை கையாள முடிய வில்லை. குறிப்பாக  பாதிக்கப்பட்ட பெண்கள்,  ஆண் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தங்கள் முழு பிரச்சனையை சொல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர் அல்லது அச்சப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சை தடைபடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.