world

img

இஸ்ரேலின் விமான தளத்தை அழித்த ஈரான்

இஸ்ரேலின் மிகப் பெரிய நெவடிம் விமானத்தளத்தை ஏவுகணைத் தாக்குதலில் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

காசா, லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஜுலை மாதம், ஈரானுக்கு சென்றிருந்த ஹமாஸின் முக்கிய தலைவரான மாயில் ஹனியேவை அந்நாட்டில் வைத்தே இஸ்ரேல் கொலை செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் ஜனாதிபதி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரானின் வலிமை குறித்த முன்னோட்டம்தான் இது. ஈரானுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பிற நாடுகள் போருக்குள் நுழைந்தால், அடுத்த கட்டத் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஆயுதப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி வெளியிட்ட அறிக்கையில், மூன்று இடங்களை குறிவைத்து ஆப்ரேஷன் ட்ரு ப்ராமிஸ்-2 என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு தாக்குதலை திட்டமிட்டு நடத்தும் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாத்தின் தலைமையகம், அமெரிக்காவின் எஃப் 35 மற்றும் எஃப் 15 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெவடிம் விமானத் தளம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவை கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஹட்செரிம் விமானத் தளம் ஆகியவற்றின் மீது குறிவைத்து தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது செலுத்தப்பட்ட ஏவுகணைகள் 90 சதவிகிதம் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக ஈரான் அரசுத் தொலைக்காட்சியின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபத்தா-1 என்ற ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் பயன்படுத்தியதாகவும், இதனை வழிமறித்து தாக்குவது மிகுந்த சவாலானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்ததாக தெரிவித்த பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என கொக்கரித்துள்ளார்.

இதனிடையே வழக்கம் போல, இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தொடர் அராஜகத்தை பொருத்திக் கொள்ள முடியாமல் இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.