செல்போன் நிறுவனங்கள் கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டுமென்று வாலிபர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக பெரும்பகுதி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வருமானம் குறைந்துள்ளது. அதே நேரம் செல்போன் நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் பெரும் லாபம் ஈட்டின. இத்தகைய சூழலில் தான் செல்போன் நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
ஒருபுறம் மாணவர்களை ஆன்லைன் வழியில் கல்வி கற்க அரசு வலியுறுத்துகிறது. மறுபுறம் எல்லோருக்கும் சமமான இணைய சேவையை உறுதிசெய்ய மறுக்கிறது. எனவே, சீரான இணையதள சேவை அனைத்து பகுதியிலும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தனியார் செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தும்போது ஒன்றிய அரசு மௌனமாக இருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. இத்தகைய மௌனம் சாதாரண மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். எனவே, இந்த கட்டண உயர்வை திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சாதனைகளை மற்ற நாடுகள் மேற்கொண்டு வரும் சூழலில் இந்தியா பின்தங்கி இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பெரும்பாலும் இணைய சேவையை வழங்கும் பணியை தனியார் நிறுவனங்கள் கைவசம் வைத்திருப்பது தான். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அந்நிறுவனத்தை பலவீனப்படுத்தும் வகையில் தான் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்குவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. தனியார் செல்போன் நிறுவனங்களின் லாப வேட்டைக்காகவே பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே, ஒன்றிய அரசு தனது பிஎஸ்என்எல் விரோத நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிக்கொள்ளவேண்டும். 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.