யாங்கோன்:
மியான்மரில் ஆங் சான் சூகி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர்கள் ராணுவத்தால்சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாடாளுமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயககட்சி, பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. ராணுவத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட ஒன்றிய மேம்பாட்டு மற்றும் ஒற்றுமை கட்சி, குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ராணுவம் குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஏற்கமறுத்தது.தேர்தல் முடிவு தொடர்பாக அந்நாட்டு அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து சர்ச்சை இருந்து வருகிறது. இந்நிலையில், ஆங் சான் சூகி உட்பட தேசிய ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களை ராணுவம் சிறைபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தேசியஜனநாயக கட்சியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மியான்மர் நாட்டை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்குராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அந்நாட்டுராணுவம் அறிவித்துள்ளது.
இந்தியா கவலை
இந்நிலையில், மியான்மரில் ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் மியான்மரில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஜனநாயகம் தழைத்தோங்க இந்தியா எப்போதும் ஆதரவாக இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும்சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நடைமுறைகளும் அங்கு நிலைநிறுத்தப்படும் என்று மத்தியஅரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.