ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 3,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவிட் 19 வைரசின் புதிய உருமாற்றியான ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே உலகம் முழுவதும் பரவி விட்டது. மேலும், இந்த புதிய வைரசின் பரவல் விகிதம் மிக மிக அதிகமாக இருப்பதால் ஒரிரு நாட்களுக்குள்ளேயே இரட்டிப்பாகி வருவது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் செய்வதறியாது திகைத்து போய்யுள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கிறிஸ்மஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் இவ்வாரம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக வணிக நடவடிக்கைகள் களைகட்டும் என எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. குறிப்பாக, விமான போக்குவரத்து என்பது வழக்கமான காலகட்டத்தை காட்டிலும் பண்டிகை காலத்தில் இரட்டிப்பாக இருக்கும் என கருதப்பட்டது.
ஆனால், இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக விமான போக்குவரத்து சேவை என்பது முற்றிலுமாக தலைகிழாக மாறியுள்ளது. அதாவது, ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, பண்டிகை விடுமுறை காலத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை திட்டமிட்டிருந்தோர் அதனை தவிர்த்துள்ளனர். இதேபோல், உள்நாடுகளுக்குள்ளேயே விமான பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தவர்களும் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் வழக்கமான பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கிடையே, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக திங்களன்று மட்டும் 2,700 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் செவ்வாயன்று மேலும் 800 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக 3,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, லுப்தான்சா, யுனைடெட் ஏர்லைன்ஸ், ஜெட்புளு, டெல்டா, அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்களின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.