தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் மகளிர் உலகக்கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறியது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி லிசெல்லீயை 6 ரன்களுக்கு இழந்தது.
இதன்பிறகு, லெளரா வோல்வார்தட் மற்றும் லாலா கூடால் இணை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நெருக்கடியளித்தது. 2வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் நிலையில் கூடால் 49 ரன்களுக்கு ராஜேஸ்வரி கயக்வாட் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே வோல்வாரதட்டும் 80 ரன்களுக்கு ஹர்மன்பிரீத் கெளர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்தது. இதன்பிறகு, மீண்டுமொரு சிறிய பாட்னர்ஷிப் அமைந்தது. இதனையும், ஹர்மன்பிரீத் கெளர் சிறப்பாகப் பந்துவீசி தென் ஆப்பிரிக்கா கேப்டனை ஆட்டமிழக்கச் செய்தார்.
வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்ததால், தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த நெருக்கடியால் மரிசேன் கப் 32 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. பூஜா வஸ்தராகர் வீசிய 46-வது ஓவரில் டு பிரீஸ் இரண்டு பவுண்டரிகளையும், கயக்வாட் வீசிய 47-வது ஓவரில் ட்ரியான் 3 பவுண்டரிகள் விளாச வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைந்தது. எனினும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ட்ரியான் ஆட்டமிழந்ததால், இந்தியாவுக்கு சற்று சாதகம் இருந்தது.
இதனையடுத்து, கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டன. 2-வது பந்தில் டு பிரீஸ் இரண்டு ரன் எடுக்க முயல மறுமுனையில் த்ரிஷா செட்டி ரன் அவுட் ஆனார். எனினும் அந்த பந்தில் 1 ரன் கிடைத்தது.
பின்னர் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அரைசதம் அடித்த டு பிரீஸ் சிக்ஸர் அடிக்க முயன்று பவுண்டரி அருகே ஹர்மன்பிரீத், கெளரிடம் கேட்ச் ஆனார்.
ஆனால், நடுவர் நோ-பால் கொடுத்ததால், தென் ஆப்பிரிக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் டு பிரீஸ் பவுண்டரி அடித்து தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம், உலகக் கோப்பையிலிருந்து இந்திய மகளிர் அணி வெளியேறியது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் அரையிருதிக்கு முன்னேறியுள்ளன.