world

img

நிலவின் தென் துருவத்தை ஆராய சென்ற சீன விண்கலம் பூமிக்கு திரும்பியது

நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சீன விண்கலமான சாங்’இ-6 நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகளைச் சேகரித்துவிட்டு இன்று பூமிக்குத் திரும்பி வந்துள்ளது.

இந்த விண்கலம் வடக்குச் சீனாவின் மங்கோலியப் பகுதியில் தரையிறங்கியுள்ளது.

கடந்த மே 3 அன்று பூமியில் இருந்து கிளம்பிய விண்கலம் 53 நாட்கள் கழித்து தனது பணியை முடித்து பூமிக்குத் திரும்பியுள்ளது.

இந்த விண்கலம் சேகரித்த நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகள் 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான எரிமலையுடையதாக இருக்கும் என்றும், இந்த மாதிரிகள் நிலவின் இரு துருவம் குறித்த வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

சாங்’இ-6 விண்கலம் நிலவு ஆராய்ச்சியில் வெற்றிகரமாகத் தன்னுடைய முழுமையான இலக்கை எட்டிவிட்டது என்று சீன விண்வெளி ஆராய்ச்சித் துறையின் இயக்குநரான ஷாங் கெஜியன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நிலவின் அறியப்படும் பகுதிகளில் இருந்து அமெரிக்காவும், ரஷ்யாவும் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான் 3 செயற்கைக் கோளை நிலவின் தென் துருவத்தின் இறக்கி இந்தியா சாதனைப் படைத்தது.தற்போது சீன விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மணல் மற்றும் பாறை மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெற்றிகரமாக பூமிக்கு எடுத்து வந்துள்ளது.

விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தில் நமது நாட்டின் முக்கிய சாதனை இது என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.