அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை நடத்திவரும் டிரம்ப், ஜூலை 30 அன்று இந்தியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வர்த்தக வரி விதித்தார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்று கூறி, மேலும் 25 சதவிகிதம் வரி விதித்தார். இதனால் இந்தியப் பொருட்களின் மீதான வரி 50 சதவிகிதமாக உயர்ந்தது.
இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிரம்ப் நிர்வாகத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அக்டோபர் 14 வரை வரிகள் நடைமுறையில் இருக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.